தீவின் நெருக்கடிச் சூழலில் ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கவேண்டிய நிலைப்பாடுகள்

[TamilNet, Sunday, 24 April 2022, 05:44 GMT]
இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் போது ஈழத்தமிழர் தேசம் வரித்துக்கொள்ள வேண்டிய பன்னிரு வழிகாட்டல் நிலைப்பாடுகளை ஈழத்தமிழ்த் தேசிய மூலோபாய மதியுரையகம் ஆய்வுக்குள்ளாக்கியுள்ளது. அவற்றைத் தமிழ்நெற் ஆசிரியபீடம் இயன்றளவு சீராக்கி சுருக்கமாகவும், விரிவாகவும் வெளியிடுகின்றது. பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை ஒரு தீர்வாகக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு, அதையே ஆரம்பப்புள்ளியாகக் கோரி, அடிப்படையிலேயே அனைத்தும் தவறான 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம், 2002 ஒஸ்லோத் தீர்மானம், மற்றும் 2013 சிங்கப்பூர்க் கோட்பாடுகளுக்கு ஈழத்தமிழர்கள் மீண்டும் மீண்டும் பலிக்கடா ஆக்கப்படுவதை, அறிவியல் ரீதியாக மறுத்து எழவேண்டிய வரலாற்றுக் கடமை ஈழத்தமிழ்த் தேசத்தின் முன்னே உள்ளது. இந்த வழிகாட்டி நிலைப்பாடுகள் கற்பனையில் உதித்தவையோ, அன்றேல் நடைமுறைச் சாத்தியமற்ற ஏட்டுச் சுரைக்காய் நிலைப்பாடுகளோ அல்ல. மாறாக, ஈழத் தமிழ்த் தேசத்திற்கான மூலோபாயக் கொள்கை மீண்டும் மக்கள் மயப்படுத்தப்படுவதற்கான ஓர் ஆரம்பம்.

 1. இலங்கைத் தீவில் எழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் சிங்கள தேசத்தோடு ஈழத்தமிழர் தேசம் ஒருகுடையின் கீழ் அணிவகுப்பது முற்றிலும் பொருத்தமற்றது.

  ஈழத்தமிழர் தேசத்துக்கு எதிரான நீளிய இன அழிப்பில் இலங்கை அரசுக்கு இன அழிப்புத் தொடர்பான பொறுப்பு இருப்பதுபோல, சிங்கள தேசத்துக்கும் இன அழிப்புத் தொடர்பான சமுதாயப் பொறுப்பு இருக்கிறது. இவை ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவை.

  சிங்கள தேசமும் அதன் அரசியற்கட்சிகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தமது ஒற்றையாட்சியைக் காப்பாற்றுவதற்காக அரசியற்கட்சிச் சாயமற்ற போராட்டங்களை முன்னெடுப்பது போல, நுட்பமாக போராட்டங்களை முன்னெடுக்கும் வல்லமை பொருந்தியவை.

  சிங்களதேசத்தின் கல்வி, பணி, மற்றும் குடிசார் சமூகங்கள் இதிலே தேர்ச்சிபெற்றவை.

  பன்னாட்டு நாணய நிதியத்துடன் நீண்டகாலத் தீர்வு பற்றிய உடன்பாட்டை மேற்கொண்டு சுதாகரித்துக்கொள்ளும் வரை, தற்காலிகமாக சில வல்லரசுகளின் உதவியோடு தமது அரச கட்டமைப்பைத் தக்கவைக்கும் தேவைக்கு ஏற்ப பால இணைப்பை ஒருபுறமும், மறுபுறம் அந்த நிதியம் கோரும் மாற்றங்களைத் தாம் நிர்ணயிக்கும் திசையில் ஆற்றுப்படுத்தவும், சிங்கள தேசத்தின் கருத்துருவாக்கிகள் களத்தில் இறங்கியுள்ளது தெரிகிறது.

 2. இலங்கை அரசின் இன அழிப்பைச் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்க உலக சக்திகளோ, பிராந்தியச் சக்தியான இந்தியாவோ இதுவரை முன்வராத நிலையில், அவற்றின் தேவைக்காகவோ, வேண்டுதலின் பேரிலோ, ஈழத்தமிழர் தேசத்தின் அரசியற் பிரதிநிதிகள் சிங்கள தேசத்து அரசியற் கட்சிகளோடோ அமைப்புகளோடோ உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதோ ஒத்துழைக்க உடன்படுவதோ, இன அழிப்புக் குறித்த பக்கசார்பற்ற சர்வதேசப் புலனாய்வு விசாரணைக்கான நியாயப்பாட்டையும் வழிவரைபடத்தையும் மீண்டும் மழுங்கடிக்கச் செய்யும் குறைமுதிர்ச்சிச் செயற்பாடுகளாகும்.

 3. ஈழத்தமிழர் தேசம் மீதான இன அழிப்பை இலங்கை அரசு புரிந்திருப்பது குறித்த பலத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போதும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக உண்மை கண்டறியப்படவேண்டும் என்பதற்குரிய குறிப்பான பணிப்பாணை (specific mandate) இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் அதற்குப் புவிசார் சர்வதேச அரசியல் காரணமாயுள்ளது என்பதும் வெளிப்படை.

  இருப்பினும், ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பான புதியதொரு ‘சிறப்புப் பொறுப்புக்கூறற் கருத்திட்டத்தை’ 46/1 தீர்மானத்தின் அடிப்படையில் நான்கு திட்டவட்டமான பணிகளாகப் பிரித்து ஆரம்பித்துள்ளது.

  சிறப்புக் கருத்திட்டத்தின் நான்கு பணிகளுக்குள், முதல் இரண்டுக்குள்ளும் இன அழிப்புக் குற்றங்கள் பற்றிய அவசியமான, ஆழமான சான்றுகளையும் தரவுகளையும் பதிவதற்கும், இன அழிப்புக் குற்றம் குறித்த எதிர்கால பொறுப்புக்கூறல் உத்திகளுக்கான அடுத்த கட்ட நகர்வைச் தடவழித்திருத்தத்தோடு மேற்கொள்ளச் செய்வதற்குமான வாய்ப்புகள் உள்ளன. அந்த அடிப்படைச் செயற்பாடுகள் காலதாமதமின்றி முன்னெடுக்கப்படவேண்டும்.

  அதேபோல, ஐ.நா. பொறிமுறைக்கு அப்பால் முன்னெடுக்கப்படவேண்டிய இலங்கை அரசின் இன அழிப்புக்கான அரச பொறுப்புப் பற்றிய பன்னாட்டு நீதிமன்றப் புலனாய்வு விசாரணையைக் கனடா போன்ற நாடுகளை முன்னெடுக்கவைக்கும் வேலைத்திட்டம் குறித்தும், இந்தியாவும், இணைத்தலைமை நாடுகளும் உள்ளிட்ட இன அழிப்புக்கு உடந்தையாகிய நாடுகள் பற்றிய பல விதமான மக்கள் தீர்ப்பாயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.

 4. ஈழத்தமிழர் பொருண்மிய மேம்பாட்டுத் தேசக்கட்டலை இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் இறைமைப் பிடிக்கு அப்பாற்பட்டு, சுயமாகக் கட்டுவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்படவேண்டும். அதேவேளை நிதிநல்கும் தனிநபர்களோ, புலம்பெயர் குழுக்களோ, வெளிச்சக்திகளோ தனித்து முடிவெடுக்கும் சக்திகளாக இல்லாத சுயாதீனத் தன்மையும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

  உடனடிச் சிக்கலுக்குத் தீர்வுகாணும் சிந்தனையோடு செயற்படும் சமூகத்தை புத்தாக்கத் திறனோடும் தொலைநோக்குச் சிந்தனையோடும் தீர்வுகளை முன்வைக்கும் வகையில் ஆற்றுப்படுத்தவேண்டிய தருணம் இது.

  பொருண்மியக் கட்டமைப்புகளுக்கு அப்பால், சுயாதீனமான குடிசார் (சிவில்) சமூகமும் காவற்சக்தியாக விளங்கவேண்டும். தற்போதுள்ள குடிசார் சமூகம் அவ்வாறு சுயாதீனமானதாக இல்லை. அரசியற் கட்சிகளுக்கும் குடிசார் சமூகச் செயற்பாடுகளுக்கும் அப்பால், ஈழத்தமிழர் தேசத்துக்கான குடியாட்சிப் பொறிமுறை ஒன்றும் உருவாக்கப்படவேண்டும். இவையனைத்தும் அரச கட்டல் நோக்கிய தேசக்கட்டலின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும்.

 5. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறையை அகற்றவேண்டும் என்பது சிங்கள தேசத்துக்குத் தேவையான குடியாட்சிக்கு வேண்டுமென்றால் அர்த்தமுள்ள கட்டமைப்பு மாற்றமாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த ஒற்றையாட்சி அரச பொறிமுறைக்குள் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ளும் ஈழத்தமிழர் தேசத்தைப் பொறுத்தவரை அது அதிகாரத்தின் படிநிலை இடமாற்றம் மட்டுமே. ஈழத்தமிழர் தேசம் அதற்கு மட்டும் அவசரப்பட்டு முண்டுகொடுக்கவேண்டியதில்லை. ஒற்றையாட்சிக்குள் ஆரம்பப் புள்ளிகளைத் தேடுவதில் அர்த்தமில்லை.

  மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படும் தனிமனிதரின் நிறைவேற்று அதிகாரத்தை மட்டுமல்ல, வேரூன்றிப்போன அரசியலமைப்பின் உறுப்புரைகளையும் (entrenched constitutional clauses) ஒருசேர நிராகரிக்கும் படிமை மாற்றத்திற்கான (paradigm shift) புரட்சியைச் சிங்கள தேசத்திடம் ஈழத்தமிழர் தேசம் கோரவேண்டும்.

 6. சிங்கள தேசமானது, இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தேசத்தின் தொன்மையையும், சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட தனித்துவமான இறைமையையும், தனது சமூகமட்டத்திலும், அதற்கு அடுத்ததாக அரச மட்டத்திலும் அர்த்தமுள்ள மாற்றத்தூடாக அங்கீகரிக்கத் தயாராகவுள்ளதா என்ற கடுந்தேர்வை அது சந்திக்கத் தயாராகும் வரை, மட்டுப்படுத்தப்பட்ட வெளியுறவுக்கொள்கை ஊடாக மட்டுமே அது தொடர்பான நிலைப்பாடுகளை ஈழத்தமிழர் தேசம் அணுகுவது பொருத்தம்.

 7. இலங்கை ஒற்றையாட்சி அரசினதும் சிங்கள பௌத்த பேரினவாதத்தினதும் இன அழிப்பு அடையாளமான சிங்கக் கொடியை ஏந்தியோ, அதைப் பொறித்த உடைகளை அணிந்தோ, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தாயகத்திற்குள் எவரேனும் போராட்டங்களைக் கொண்டுவர விழைந்தால், ஈழத்தமிழர்கள் அவற்றில் பங்கேற்பது பொருத்தமற்றது. அவ்வாறான முன்னெடுப்புகள் இடம்பெற முன்னரே அறிவுபூர்வமாக அவை முறியடிக்கப்படவேண்டும்.

 8. ‘சிறிலங்கா மாதா’ என்ற கீதம் ஈழத்தமிழர்களின் தேசிய கீதம் அல்ல என்பதைச் சிங்கள தேசத்துக்கு அறிவூட்டும் விதத்தில் எடுத்துச்சொல்ல வேண்டும். தமிழீழத் தேசிய கீதமும் தமிழீழ அரசியலமைப்பும் குடியாட்சி மக்களாணையின் பாற்பட்டு இயற்றப்படவேண்டியவை.

 9. இன அழிப்புக் குற்றம் தொடர்பான பொறுப்புக்கூறலுக்குரியவர்களை ஊழல் போன்ற உள்நாட்டுக் குற்றங்களுக்கான நீதிக்குள் மட்டும் முதன்மைப்படுத்திக் கையாண்டு அவர்களைப் பதவியைத் துறக்குமாறு ஈழத்தமிழர்களும் சேர்ந்து கோருவதென்பது, பெருங்குற்றம் தொடர்பான நீதிகோரலை நாமாகவே சிறுமைப்படுத்துவதற்கு ஒப்பானது.

 10. ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் இயங்கும் ஈழத்தமிழர் அரசியற் கட்சிகள் சுயநிர்ணய உரிமையைக் கைவிடும் சமஷ்டிக் கோரிக்கைகளாகத் தமது அரசியற் தீர்வுக் கோரிக்கைகளை முன்வைக்கக்கூடாது. இதை வலியுறுத்தும் அறிவியல் மற்றும் குடிசார் சமூகச் செயற்பாடுகள் உடனடியாகத் தேவை.

  ஒற்றையாட்சி (unitary), சமஷ்டி (federal), கூட்டுச் சமஷ்டி (confederal/நேசக்கூட்டு) என்ற மூன்றுவித அரசியலமைப்பு வடிவங்களில் நேசக்கூட்டு மட்டுமே சுயநிர்ணய உரிமையைக் கைவிடாததாக அமைகின்றது. ஒற்றையாட்சிக்குள்ளும் சமஷ்டிக்குள்ளும் சுயநிர்ணய உரிமையோ தேச இறைமையோ தனித்துவமாக அங்கீகரிக்கப்படுகின்றனவென்றால் அவ்வுரிமைகைள் தொடர்ந்தும் முழுமையாகத் தக்கவைக்கப்படும் வகையிலான, மீளப்பெறமுடியாது வேரூன்றிய உறுப்புரைகள் ஆக அவை உறுதிப்படுத்தப்பட்டால் ஒழிய, சுயநிர்ணய உரிமை தக்கவைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்காது.

 11. ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகம் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் தனது நிதியூட்டல் மூலம் அரசியற் பிளவுகளுக்கு உடந்தையாகியுள்ளது மட்டுமல்ல, இன அழிப்பு நீதி குறித்துச் சரியான வழிமுறைகளிற் பயணிக்காத வேலைத்திட்டங்களுக்குப் பலியாகித் தவறியுள்ளது.

  தவறான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உறுப்புரைகளை எடுத்தாள்வதும், பொதுவாக்கெடுப்பைத் தமிழீழம் தவிர்த்த வேறு அரைகுறைத் தீர்வுகளுக்கு உரியதாக அகட்டுவதுமாகக் குறி தவறியுள்ளது. நீண்டகால வேலைத்திட்டங்களில் மட்டுமல்ல, அவ்வப்போது உருவாகும் ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும்’ திறமையைக்கூட ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தாயகத்துக்குப் புலம்பெயர் சமூகத்தால் வழங்கமுடியாத நிலை காணப்படுகிறது.

  ஒட்டுமொத்தப் புலம்பெயர் சமூகத்திலுள்ள விடுதலை அரசியலுக்கான அமைப்புகளின் அணுகுமுறைகளிலும் கட்டமைப்புகளிலும் கனதியான, அறிவுபூர்வமான, அர்த்தமுள்ள மாற்றம் விரைவாக ஏற்படவேண்டும்.

 12. தமிழ்நாட்டின் சட்டமன்றப் பேரவையில் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரை நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களில் மூன்று முக்கிய கோரிக்கைகள் உள்ளன.

  இவற்றில் இரண்டை தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க 2012 டெசோ மாநாட்டிலிருந்து தனது 2019 ஆம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனம் ஈறாக உள்ளடக்கியுள்ளது.

  2022 பெப்ரவரியில் இருந்து ஏப்பிரல் வரை மூன்று தளங்களில் கோரிக்கைகளும் தீர்மானங்களும் வெளியாகியுள்ளன.

  அடுத்த கட்டச் செயற்பாடுகள் மக்கள் தளத்தில் தோன்றவேண்டும், அப்போதுதான் தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர் விடுதலை அரசியலுக்கேற்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிலை உருவாகும்.* * *

முழு உள்ளடக்கமும் வருமாறு:

 1. இலங்கைத் தீவில் எழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் சிங்கள தேசத்தோடு ஈழத்தமிழர் தேசம் ஒருகுடையின் கீழ் அணிவகுப்பது முற்றிலும் பொருத்தமற்றது.

  ஈழத்தமிழர் தேசத்துக்கு எதிரான நீளிய இன அழிப்பில் இலங்கை அரசுக்கு இன அழிப்புத் தொடர்பான பொறுப்பு இருப்பதுபோல, சிங்கள தேசத்துக்கும் இன அழிப்புத் தொடர்பான சமுதாயப் பொறுப்பு இருக்கிறது. இவை ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவை.

  சிங்கள தேசமும் அதன் அரசியற்கட்சிகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தமது ஒற்றையாட்சியைக் காப்பாற்றுவதற்காக அரசியற்கட்சிச் சாயமற்ற போராட்டங்களை முன்னெடுப்பது போல, நுட்பமாக போராட்டங்களை முன்னெடுக்கும் வல்லமை பொருந்தியவை. சிங்களதேசத்தின் கல்வி, பணி, மற்றும் குடிசார் சமூகங்கள் இதிலே தேர்ச்சிபெற்றவை.

  பன்னாட்டு நாணய நிதியத்துடன் நீண்டகாலத் தீர்வு பற்றிய உடன்பாட்டை மேற்கொண்டு சுதாகரித்துக்கொள்ளும் வரை, தற்காலிகமாக சில வல்லரசுகளின் உதவியோடு தமது அரச கட்டமைப்பைத் தக்கவைக்கும் தேவைக்கு ஏற்ப பால இணைப்பை ஒருபுறமும், மறுபுறம் அந்த நிதியம் கோரும் மாற்றங்களைத் தாம் நிர்ணயிக்கும் திசையில் ஆற்றுப்படுத்தவும், சிங்கள தேசத்தின் கருத்துருவாக்கிகள் களத்தில் இறங்கியுள்ளது தெரிகிறது.

  சிங்கள தேசமானது தனது தேவைக்கேற்ப புவிசார் சமனமாக்கல் ஆட்டத்தைப் பயன்படுத்தி இன அழிப்பு ஒற்றையாட்சிக்கு ஜனநாயக முலாம் பூசிக்கொண்டு தனது அரச கட்டமைப்பின் இன அழிப்புத் தன்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கது. இதையே 2015 ஆம் ஆண்டிலிருந்து நல்லாட்சி என்ற பெயரில் நடைபெற்று ‘ஏய்க்கிய ராஜ்ய’ என்ற ஏய்ப்பில் முடிவடைந்த வேலைத்திட்டத்திற்குள் காணமுடிந்ததது.

  இதைப்போலவே, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, மக்கள் மட்டத்தில் நடவடிக்கைகள் விரிவதைக் காணமுடிகிறது.

  இந்த நிலையில், இன அழிப்பு ஒற்றையாட்சி அரசின் பொருளாதாரத்தைக் காப்பதற்காக, இன அழிப்புத் தேசத்தோடு ஒருகுடையின் கீழ் ஈழத்தமிழர் அணிதிரள்வதென்பது, இன அழிப்பு மறுப்புக்கு ஒப்பாகிவிடும்.

  இதுகுறித்த ஈழத்தமிழர் தேசத்தின் பார்வையை, தகுந்த முறையில் அறிவார்ந்த விளக்கத்தோடும் எடுத்துரைப்போடும் சிங்கள தேசத்துக்கும் ஏனைய மக்களுக்கும் மட்டுமல்ல உலகப் பரப்புக்கும் எடுத்தியம்ப வேண்டியது ஈழத்தமிழரின் வாக்குகளால் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கொண்டுள்ள தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளதும் அவற்றுக்கு அப்பாற்பட்ட குடிசார் மக்கள் அமைப்புகளதும் கடமையாகும்.

  சமூக வலைத்தள மட்டத்தில் பதிவுகளை மேற்கொள்ளும் இளையோர் தொடக்கம் முதியோர் வரை, வெறும் எதிர்வினையாக மாத்திரம் கருத்துகளை முன்வைக்காது, அதற்கும் அப்பாற்பட்ட நுட்பத்தோடும் புத்தாக்கத் திறனோடும் நிலைப்பாடுகளை வெளியிடும் முதிர்ச்சியைப் பெறவேண்டும். அதுவே மக்கள் மட்டத்திலான தேசக்கட்டல். இதற்கான செயற்பாடுகள், பட்டறைகள், ஒருங்கிணைப்பு ஆகியவை மேற்கொள்ளப்படவேண்டும்.

 2. இலங்கை அரசின் இன அழிப்பைச் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்க உலக சக்திகளோ, பிராந்தியச் சக்தியான இந்தியாவோ இதுவரை முன்வராத நிலையில், அவற்றின் தேவைக்காகவோ, வேண்டுதலின் பேரிலோ, ஈழத்தமிழர் தேசத்தின் அரசியற் பிரதிநிதிகள் சிங்கள தேசத்து அரசியற் கட்சிகளோடோ அமைப்புகளோடோ உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதோ ஒத்துழைக்க உடன்படுவதோ, இன அழிப்புக் குறித்த பக்கசார்பற்ற சர்வதேசப் புலனாய்வு விசாரணைக்கான நியாயப்பாட்டையும் வழிவரைபடத்தையும் மீண்டும் மழுங்கடிக்கச் செய்யும் குறைமுதிர்ச்சிச் செயற்பாடுகளாகும்.

  ஒத்துழையாமை என்பதை வெளியுறவு உத்தியாக ஏன் ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கிறது என்பதற்கான விளக்கத்தையும், அந்த உத்தியானது ஒத்துழைப்பாக மாறுவதற்குச் சிங்கள தேசம் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய எடுத்துரைப்பையும் சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகளுக்கு முன் வைக்கவேண்டும்.

 3. ஈழத்தமிழர் தேசம் மீதான இன அழிப்பை இலங்கை அரசு புரிந்திருப்பது குறித்த பலத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போதும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக உண்மை கண்டறியப்படவேண்டும் என்பதற்குரிய குறிப்பான பணிப்பாணை (specific mandate) இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் அதற்குப் புவிசார் சர்வதேச அரசியல் காரணமாயுள்ளது என்பதும் வெளிப்படை.

  இருப்பினும், ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பான புதியதொரு ‘சிறப்புப் பொறுப்புக்கூறற் கருத்திட்டத்தை’ 46/1 தீர்மானத்தின் அடிப்படையில் நான்கு ‘திட்டவட்டமான பணிகளாகப்’ பிரித்து ஆரம்பித்துள்ளது.

  சிறப்புக் கருத்திட்டத்தின் நான்கு பணிகளுக்குள், முதல் இரண்டுக்குள்ளும் இன அழிப்புக் குற்றங்கள் பற்றிய அவசியமான, ஆழமான சான்றுகளையும் தரவுகளையும் பதிவதற்கும், இன அழிப்புக் குற்றம் குறித்த எதிர்கால பொறுப்புக்கூறல் உத்திகளுக்கான அடுத்த கட்ட நகர்வைச் தடவழித்திருத்தத்தோடு மேற்கொள்ளச் செய்வதற்குமான வாய்ப்புகள் உள்ளன. அந்த அடிப்படைச் செயற்பாடுகள் காலதாமதமின்றி முன்னெடுக்கப்படவேண்டும்.

  எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக இந்தப் பணிகளைச் சரியாகப் பயன்படுத்தி, பன்னாட்டு நீதி தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய தடவழித் திருத்தம் குறித்த வாய்ப்பு இருந்தும், அதைக் கவனிப்பதற்கு தாயகத்திலும் புலம்பெயர் சூழலிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர் தரப்புகள் இதுவரை பெருமளவு தவறியுள்ளன.

  ஈழத்தமிழர் தேசத்தின் கவனம் இந்த வேலைத்திட்டம் நோக்கி உடனடியாகக் குவியப்படுத்தப்படவேண்டும். எழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசின் கவனம் திசைதிரும்பியுள்ள இத்தருணத்தில், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதாக, இன அழிப்புக்கான சரியான சாட்சியங்களைப் பதிவதிலும் அதற்கான எதிர்காலப் பொறுப்புக்கூறற் பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான கருத்துருவாக்கத்திலும் கவனத்தைச் செலுத்தவேண்டும்.

  அதேபோல, ஐ.நா. பொறிமுறைக்கு அப்பால் முன்னெடுக்கப்படவேண்டிய இலங்கை அரசின் இன அழிப்புக்கான அரச பொறுப்புப் பற்றிய பன்னாட்டு நீதிமன்றப் புலனாய்வு விசாரணையைக் கனடா போன்ற நாடுகளை முன்னெடுக்கவைக்கும் வேலைத்திட்டம் குறித்தும், இந்தியாவும், இணைத்தலைமை நாடுகளும் உள்ளிட்ட இன அழிப்புக்கு உடந்தையாகிய நாடுகள் பற்றிய பல விதமான மக்கள் தீர்ப்பாயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.

  சர்வதேச நீதி தொடர்பான நடவடிக்கைகளே ஈழத்தமிழர் தேசத்தின் முன்னிருக்கும் தலையாய கடமைகள்.

 4. ஈழத்தமிழர் பொருண்மிய மேம்பாட்டுத் தேசக்கட்டலை இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் இறைமைப் பிடிக்கு அப்பாற்பட்டு, சுயமாகக் கட்டுவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்படவேண்டும். அதேவேளை நிதிநல்கும் தனிநபர்களோ, புலம்பெயர் குழுக்களோ, வெளிச்சக்திகளோ தனித்து முடிவெடுக்கும் சக்திகளாக இல்லாத சுயாதீனத் தன்மையும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

  உடனடிச் சிக்கலுக்குத் தீர்வுகாணும் சிந்தனையோடு செயற்படும் சமூகத்தை புத்தாக்கத் திறனோடும் தொலைநோக்குச் சிந்தனையோடும் தீர்வுகளை முன்வைக்கும் வகையில் ஆற்றுப்படுத்தவேண்டிய தருணம் இது.

  பொருண்மியக் கட்டமைப்புகளுக்கு அப்பால், சுயாதீனமான குடிசார் (சிவில்) சமூகமும் காவற்சக்தியாக விளங்கவேண்டும். தற்போதுள்ள குடிசார் சமூகம் அவ்வாறு சுயாதீனமானதாக இல்லை. அரசியற் கட்சிகளுக்கும் குடிசார் சமூகச் செயற்பாடுகளுக்கும் அப்பால், ஈழத்தமிழர் தேசத்துக்கான குடியாட்சிப் பொறிமுறை ஒன்றும் உருவாக்கப்படவேண்டும். இவையனைத்தும் அரச கட்டல் நோக்கிய தேசக்கட்டலின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும்.

  தற்சார்புப் பொருண்மியத்தைச் சமூக அடித்தளத்தில், குடும்ப மற்றும் கிராமிய மட்டத்திலிருந்து கட்டுவதும், போர்க்காலத்தில் இயங்கியது போல வளங்களை உரிய முறையிற் பகிர்ந்தளிக்கும் வலுக்கொண்ட கூட்டுறவுச் சமூகப் பொறிமுறை ஒன்றைச் சுயாதீனமாகக் கட்டுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் நடைபெறவேண்டும்.

  அதேவேளை, பன்னாட்டுத் தளத்தில் வடக்கு-கிழக்குக்கான அபிவிருத்தி நிதியத்தை வேறு சக்திகளிலோ, புலம்பெயர் குழுவாத அரசியலுக்குள்ளோ தங்கியிராதவாறு உருவாக்கி, இலங்கையின் ஒற்றையாட்சி இறைமைக்கு அப்பாற்பட்ட நிதிநிர்வாகத்தோடும் சுயாதீனத்தோடும், ஈழத்தமிழர் தேசத்துக்கான பொருண்மிய மேம்பாட்டுக் கட்டுமானங்களை உருவாக்குவதில் புதிய தேசச் சிற்பிகள் தமது கவனத்தைச் செலுத்தவேண்டும்.

  தேசக்கட்டலின் இன்னொரு புறம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாயகத்திற்கான மக்கள்மட்டக் குடியாட்சி முறை ஒன்றையும் தக்க பொறிமுறைகளோடு உருவாக்கவேண்டும்.

  சுயாதீனமாகச் செயற்படும் குடிசார் சமூகமும் அவசியமானது. சுயாதீனத்தன்மை, வெளிப்படைத்தன்மை, குழுப்பணித் தன்மை, தரவுக் கமுக்கத் தன்மை மற்றும் தரவுப் பாதுகாப்புத் தன்மையோடு சீரிய முறையில் தகவற்தொழிநுட்ப முறைகள் ஊடாக இவை சீரிய முறையில் கட்டப்படமுடியும்.

 5. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறையை அகற்றவேண்டும் என்பது சிங்கள தேசத்துக்குத் தேவையான குடியாட்சிக்கு வேண்டுமென்றால் அர்த்தமுள்ள கட்டமைப்பு மாற்றமாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த ஒற்றையாட்சி அரச பொறிமுறைக்குள் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ளும் ஈழத்தமிழர் தேசத்தைப் பொறுத்தவரை அது அதிகாரத்தின் படிநிலை இடமாற்றம் மட்டுமே. ஈழத்தமிழர் தேசம் அதற்கு மட்டும் அவசரப்பட்டு முண்டுகொடுக்கவேண்டியதில்லை. ஒற்றையாட்சிக்குள் ஆரம்பப் புள்ளிகளைத் தேடுவதில் அர்த்தமில்லை.

  மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படும் தனிமனிதரின் நிறைவேற்று அதிகாரத்தை மட்டுமல்ல, வேரூன்றிப்போன அரசியலமைப்பின் உறுப்புரைகளையும் (entrenched constitutional clauses) ஒருசேர நிராகரிக்கும் படிமை மாற்றத்திற்கான (paradigm shift) புரட்சியைச் சிங்கள தேசத்திடம் ஈழத்தமிழர் தேசம் கோரவேண்டும்.

  இவ்வாறான புரட்சி செய்யும் தன்மையை சிங்கள-பௌத்த பேரினவாதம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை உணர்ந்த நிலையில், எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்ட இராஜதந்திரப் பரிசோதனையாக அல்லது கடுந் தேர்வு (acid test) ஆக இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்படவேண்டும்.

 6. சிங்கள தேசமானது, இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தேசத்தின் தொன்மையையும், சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட தனித்துவமான இறைமையையும், தனது சமூகமட்டத்திலும், அதற்கு அடுத்ததாக அரச மட்டத்திலும் அர்த்தமுள்ள மாற்றத்தூடாக அங்கீகரிக்கத் தயாராகவுள்ளதா என்ற கடுந்தேர்வை அது சந்திக்கத் தயாராகும் வரை, மட்டுப்படுத்தப்பட்ட வெளியுறவுக்கொள்கை ஊடாக மட்டுமே அது தொடர்பான நிலைப்பாடுகளை ஈழத்தமிழர் தேசம் அணுகுவது பொருத்தம்.

  ஒட்டுமொத்தப் படிமை மாற்றப் புரட்சிக்கும், அதற்கான சமூக-ஒப்பந்தத்தை (social contract) ஈழத்தமிழர் தேசத்தோடு ஏற்படுத்தும் மனநிலைக்கும் தயாரான சிங்களத் தரப்புகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு ஈழத்தமிழர் தேசத்தின் பார்வையையும் நிலைப்பாட்டையும் முன்வைக்கவேண்டும். மகாவம்ச மனநிலைக்கு உட்பட்டுள்ள தமது தேசத்தின் பெருவோட்டத்தை மாற்றும் சக்தியை அவை பெறும்போது மட்டுமே ஒருகுடையின் கீழ் ஈழத்தமிழர்களும் அணிதிரளமுடியும் என்பதை அவற்றுக்கு விளக்கவேண்டும்.

  அப்போது தான் ஈழத்தமிழர் கூட்டு உரிமை தொடர்பான கடுந்தேர்வைச் சிங்கள தேசம் எதிர்கொள்வதற்கும், அதில் தேர்ச்சியடைவதற்கும் ஏதுவான சூழ்நிலை உருவாகும்.

  அதுவரை, ஈழத்தமிழர் தேசம் சிங்கள தேசத்தைத் தனது வெளியுறவுக்கொள்கை ஊடாக மட்டுமே அணுகமுடியும் என்பதையும் விளக்கவேண்டும்.

  இந்தவகையில், தீவின் தெற்கில் போராடும் சக்திகளுக்கு வாழ்த்துச் செய்திகளையோ இரங்கற் செய்திகளையோ அனுப்பிவைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மட்டுமே தற்போதைய போராட்டங்களை ஈழத்தமிழர்கள் அணுகுவது பொருத்தம்.

 7. இலங்கை ஒற்றையாட்சி அரசினதும் சிங்கள பௌத்த பேரினவாதத்தினதும் இன அழிப்பு அடையாளமான சிங்கக் கொடியை ஏந்தியோ, அதைப் பொறித்த உடைகளை அணிந்தோ, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தாயகத்திற்குள் எவரேனும் போராட்டங்களைக் கொண்டுவர விழைந்தால், ஈழத்தமிழர்கள் அவற்றில் பங்கேற்பது பொருத்தமற்றது. அவ்வாறான முன்னெடுப்புகள் இடம்பெற முன்னரே அறிவுபூர்வமாக அவை முறியடிக்கப்படவேண்டும்.

  இன அழிப்புச் சின்னங்கள் தரித்த போராட்டங்கள் ஈழத்தமிழர் தாயகப்பகுதியில் முன்னெடுக்கப்படமுடியாதென்ற செய்தியையும் விளக்கத்தையும் முன்வைக்கவேண்டிய தலையாய கடமையும் பொறுப்பும் ஈழத்தமிழர்களின் வாக்குகளால் தெரிவான அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.

  2012 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்க்கட்சிகளாக இணைந்து யாழ்ப்பாணத்தில் நடாத்திய மே நாள் நிகழ்வில் திரு இரா சம்பந்தன் அவர்கள் திரு ரணில் விக்கிரமசிங்ஹவோடு சேர்ந்து சிங்கக் கொடி பிடித்ததும் அதற்கு அருகில் கை உயர்த்திச் சில அரசியல்வாதிகள் நின்றதுமான கபட நிகழ்வை மறந்துவிடாமல், அதே வரலாற்றுத் தவறை மக்கள் தளத்துக்குள் 2022 ஆம் ஆண்டில் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முனைப்புகள் முறியடிக்கப்படவேண்டும்.

 8. ‘சிறிலங்கா மாதா’ என்ற கீதம் ஈழத்தமிழர்களின் தேசிய கீதம் அல்ல என்பதைச் சிங்கள தேசத்துக்கு அறிவூட்டும் விதத்தில் எடுத்துச்சொல்ல வேண்டும். தமிழீழத் தேசிய கீதமும் தமிழீழ அரசியலமைப்பும் குடியாட்சி மக்களாணையின் பாற்பட்டு இயற்றப்படவேண்டியவை.

  ‘சிறிலங்கா மாதா’ கீதத்தைச் சிங்கள தேசத்தினரோ, தென்னிலங்கையில் சிறுபான்மை என்று தம்மை அழைத்துக்கொள்வதில் நிறைவுகாண்பவர்களோ, சிங்களத்தில் மட்டுமல்ல தமிழிலும் பாடவேண்டுமென்று உரிமைக்காகக் குரல்கொடுப்பது அவர்களது குடியாட்சி உரிமையின் பாற்பட்டது. அதற்கும் ஈழத்தமிழர் தேசத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை.

  ‘சிறிலங்கா மாதா’ ஈழத்தமிழர்களின் தேசிய கீதமல்ல.

  தமிழீழத்துக்கான முதலாவது தேசிய கீதம் 1970 ஆம் ஆண்டிலேயே தமிழீழக் கோட்பாட்டை முன்வைத்த அடங்காத்தமிழன் செ. சுந்தரலிங்கத்தினால் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுவிட்டது.

  2005 ஆம் ஆண்டில் அளப்பரிய ஈகங்களுடன் போராடி, விடுதலைப் போராட்ட வளர்ச்சியில் தேசத்துக்குள்ளும் சமூக மற்றும் பெண் சமத்துவம் கண்ட நிலையில், உரிய நெறி முறையில் தமிழீழத் தேசிய கீதம் எழுதப்படுவதற்கான பகிரங்க அழைப்பை தமிழீழ மெய்நடப்பு அரசின் சார்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் விடுத்திருந்தனர்.

  2009 ஆம் ஆண்டு இன அழிப்புப் போருக்குப் பின்னரும், 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்தப் பணியை செவ்வனே முடித்துவைக்கும் தன்மையோடு இயங்கி, தமிழீழத் தேசிய கீதத்தை தமிழிலும், ஆங்கிலத்திலும் மட்டுமல்ல, சிங்களத்திலும் வெளிக்கொணர்வதே ஈழத்தமிழர் தேசத்தின் விடுதலை அரசியலின் நடத்து முறையாக அமையவேண்டும்.

  தமிழீழத் தேசிய கீதம் மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையைத் குடியாட்சித் தேர்தலில் இறுதியாகப் பயன்படுத்த முடிந்த 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் மக்களாணையே தற்போதும் செல்லுபடியாகும் அரசியல் வேணவா என்ற வகையில், அதில் கோரப்பட்டிருந்த தமிழீழத்திற்கான அரசியலமைப்பைத் தயாரிப்பதிலும், விடுதலை அரசியலின் பாற்படும் ஈழத்தமிழர் தேசம் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.

 9. இன அழிப்புக் குற்றம் தொடர்பான பொறுப்புக்கூறலுக்குரியவர்களை ஊழல் போன்ற உள்நாட்டுக் குற்றங்களுக்கான நீதிக்குள் மட்டும் முதன்மைப்படுத்திக் கையாண்டு அவர்களைப் பதவியைத் துறக்குமாறு ஈழத்தமிழர்களும் சேர்ந்து கோருவதென்பது, பெருங்குற்றம் தொடர்பான நீதிகோரலை நாமாகவே சிறுமைப்படுத்துவதற்கு ஒப்பானது.

  இன அழிப்பென்பது குற்றங்கள் அனைத்தினதும் குற்றமாகும். மூன்று சர்வதேசக் கருக் குற்றங்களிலும், நால்வகை மக்கள்திரள் அட்டூழியக் குற்றங்களிலும் தலையாய குற்றம் இன அழிப்புக் குற்றமாகும்.

  இன அழிப்போடு தொடர்புடைய அரசும் தனிநபர்களும் அதற்குரிய பொறுப்புக்கூறலுக்கே உள்ளாக்கப்படவேண்டும். இன அழிப்புக் குற்றம் தொடர்பான கட்டளைப் பொறுப்பில் ஏதோ ஒரு படிநிலையில் கடந்த காலத்தில் பணியாற்றியவர்களான, மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மட்டுமல்ல, சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்கவும் சரத் பொன்சேகா போன்ற வேறு பலரும் உள்ளார்கள்.

  அமைதிப் பேச்சுக் கால அரசியலிலும், ‘நல்லாட்சி’ என்ற பெயரில் நடந்த அரசியலிலும் ரணில் விக்கிரமசிங்ஹாவுக்கும் பொறுப்பு இருக்கிறது.

  அதேவேளை, சஜித் பிரேமதாசா போன்ற, இதுவரை கட்டளைப் பொறுப்பை வகிக்காத, வேறு எவரேனும், கடந்தகாலப் பொறுப்புக்கூறலுக்குரியவர்களை விடவும் வித்தியாசமானவர்களாக எதிர்காலத்தில் இருப்பர் என்பதான எழுந்தமானமான எடுகோள்களை ஈழத்தமிழர்களின் அரசியற் கட்சிகள் மேற்கொண்டு அவர்களோடு இணைந்து செயற்படுவது தவறாகும்.

 10. ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் இயங்கும் ஈழத்தமிழர் அரசியற் கட்சிகள் சுயநிர்ணய உரிமையைக் கைவிடும் சமஷ்டிக் கோரிக்கைகளாகத் தமது அரசியற் தீர்வுக் கோரிக்கைகளை முன்வைக்கக்கூடாது. இதை வலியுறுத்தும் அறிவியல் மற்றும் குடிசார் சமூகச் செயற்பாடுகள் உடனடியாகத் தேவை.

  ஒற்றையாட்சி (unitary), சமஷ்டி (federal), கூட்டுச் சமஷ்டி (confederal/நேசக்கூட்டு) என்ற மூன்றுவித அரசியலமைப்பு வடிவங்களில் நேசக்கூட்டு மட்டுமே சுயநிர்ணய உரிமையைக் கைவிடாததாக அமைகின்றது. ஒற்றையாட்சிக்குள்ளும் சமஷ்டிக்குள்ளும் சுயநிர்ணய உரிமையோ தேச இறைமையோ தனித்துவமாக அங்கீகரிக்கப்படுகின்றனவென்றால் அவ்வுரிமைகைள் தொடர்ந்தும் முழுமையாகத் தக்கவைக்கப்படும் வகையிலான, மீளப்பெறமுடியாது வேரூன்றிய உறுப்புரைகள் ஆக அவை உறுதிப்படுத்தப்பட்டால் ஒழிய, சுயநிர்ணய உரிமை தக்கவைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்காது.

  எனவே மேலோட்டமாகச் சமஷ்டி என்று ஆட்சிமுறையைத் தமிழ்க் கட்சிகள் குறிப்பிடுவது பொருத்தமற்றது. ஈழத்தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி ஈழத்தமிழர் தரப்பு தீவின் தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகளிற் பெரும்பான்மையோருடன் இணைந்து மேற்கொண்ட வட்டுக்கோட்டைத் தீர்மானமும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனமும், இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட சுதந்திர தமிழீழம் என்ற தீர்வுக்கான குடியாட்சி ஆணை பெற்றவை. தமிழீழத்திற்கான அரசியலமைப்பை அமைப்பதற்கும், அளப்பரிய ஈகங்களுடன் அமைதிவழி உள்ளிட்ட அனைத்துப் போராட்ட வடிவங்களையும் முன்னெடுப்பதற்குமான மக்களாணையை இந்த இரண்டும் வழங்குகின்றன என்பது மட்டுமல்ல, ஈழத்தமிழர் எனப்படுவோர் யாவர் என்பதற்கான வரைவிலக்கணத்தையும் அவை முன்வைக்கின்றன. சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஐ.நா. மேற்பார்வையிலான பொதுவாக்கெடுப்பைக் கோரும்போது, முதலாம் பொதுவாக்கெடுப்பு தமிழீழத்தைப் பற்றி மட்டுமே கோரப்படவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

  அதன் விளைவைப் பொறுத்தே அடுத்த பொதுவாக்கெடுப்பு உருவாகலாம்.

  தமிழீழம் குறித்த பொதுவாக்கெடுப்பைக் கோருவதற்கு ஆறாம் சட்டத்திருத்தம் தடுக்கிறது என்று அஞ்சுபவர்கள் அந்தக் கோரிக்கையைப் புலம்பெயர் மற்றும் தமிழ்நாட்டுத் தளங்களில் முன்வைக்கச் செய்து, தாம் அதனோடு முரண்படாத வகையில் முழுமையான சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட பொதுவாக்கெடுப்பு என்று கோரலாமே அன்றி, சமாந்தரமாக வேறு கோரிக்கைகளையும் ஒரேநேரத்தில் முன்வைக்கலாம் என்று தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்புக் கோரிக்கையை மழுங்கடிக்கும் வகையில் வாதிடுவது தவறு.

  பொதுவாக்கெடுப்பில் பங்கேற்கும் தகைமை, 1930களின், 1940களின் நடுப்பகுதியில் இருந்தோ அல்லது 1950 களின் ஆரம்பத்தில் இருந்தோ, வலிந்து மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றத்தினருக்கும் அவர்தம் வழித்தோன்றல்களுக்கும் மறுக்கப்படவேண்டும். இது குறித்த சரியான வருடம் எது என்பது வரலாற்று ஆதாரங்களோடு, குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், வடக்கு மாகாணத்தின் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட எல்லைப் புறங்களிலும் ஆரம்பத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசின் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களின் தன்மை உணரப்பட்டு நியதி செய்யப்படவேண்டும். இது போன்ற ஆய்வுகளில் தேசக்கட்டல் கருத்துருவாக்கிகளும், தமிழ் அரசியற் கட்சிகளும் ஈடுபட வேண்டும்.

  ஈழத்தமிழ்த் தேசம், தமிழ் பேசும் மக்கள் ஆகிய வரைவிலக்கணங்கள் மற்றும் மக்கள் மட்ட நல்லிணக்க முயற்சிகளும், அரசியல் அதிகாரப் பங்கீடு, வடக்கு-கிழக்கு ஆட்சிப்புல ஒருமைப்பாடு பற்றிய உடன்பாடுகள் எட்டப்படவேண்டும். இதுகுறித்த ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் 2009 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெறவில்லை. குறைந்த பட்சப் புரிதல் என்ற பெயரில் அடிப்படைகளைக் கைவிடும் நிலைக்கு ஈழத்தமிழர் தேசம் ஏன் செல்ல முடியாது என்பதை வடக்கு-கிழக்கில் மட்டுமல்ல, தீவின் தெற்கில் வாழும் தமிழ்பேசும் மக்களும் புரிந்துகொண்டு, எவ்வாறு வட்டுக்கோட்டை மற்றும் திம்புக் கோட்பாடுகளோடு இயைந்து செல்லும் சூழல் உருவாக்கப்பட்டிருந்ததோ, அதைப்போன்ற சூழல் மீண்டும் அரசியற் பரப்பில் தோற்றுவிக்கப்படவேண்டும்.

  1977 ஆம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனம் தரும் பிரஜாவுரிமைக்கான வரைவிலக்கணத்துக்குரியவர்கள் உலகில் எங்கிருந்தாலும் பங்குபெறும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதான கருத்துருவாக்கம் முன்வைக்கப்படவேண்டும். மக்களாணை பெற்ற இந்த இரண்டு ஆவணங்களையும் மறுதலிக்கும் எந்தக் கோரிக்கைகளையும், தமிழ்த் தரப்புகள் முன்வைப்பது கண்டிக்கப்படவேண்டியது.

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2004 ஆம் ஆண்டு முன்வைத்திருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து படிப்படியாக சுயநிர்ணய உரிமையின் தன்மையையும், வரலாற்று இறைமை கொண்ட தேசத்தின் அடிப்படைகளையும் கைவிட்டு, ‘மக்கள்’ என்றும், பின்னர் ‘மக்கள்கள்’ என்றும் ஈழத்தமிழர் தேசத்தின் வரைவிலக்கணங்களை படிப்படியாக நீர்த்துப்போகச் செய்துவந்துள்ளது.

  2004, 2010, 2020 தேர்தல் விஞ்ஞாபனங்களை ஒப்புநோக்கும்போது எவ்வாறு இந்த நீர்த்துப்போதலை நுட்பமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய-இலங்கை ஒப்பந்த மொழிக்கு மாற்றிவந்துள்ளது என்பது தெரியவரும்.

  தமிழ் மொழியை விடவும் ஆங்கிலத்தில் வேறு சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தும் போக்கும் தென்படுகிறது.

  இலங்கை அரசு கையெழுத்திட்ட ஐ.நா. உடன்படிக்கைகளுக்குள் வரைவிலக்கணங்களைக் குறுக்குவதாகவும் ஈழத்தமிழர் தேசத்துக்கான இறைமையை இலங்கை அரசியலமைப்பில் சொல்லப்படுவதற்கு ஒப்பான விபரிப்புக்கு உள்ளாக்குவதாகவும் அமைந்துள்ளது.

  தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு அப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் தொடக்கம் முன்வைக்க ஆரம்பித்த அரசியலமைப்புக்கான திட்ட வரைபின் 9.1 ஆம் உறுப்புரையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கையின் கோட்டபாய அரசிடம் சமர்ப்பித்த தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்புக்கான உத்தேச வரைபின் உறுப்புரை 21.1 ஆகியவையும் வெளியக சுயநிர்ணய உரிமையை தாமே நிராகரிக்கும் தவறை வெளிப்படுத்துகின்றன.

  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முன்வைத்த தீர்வுத்திட்டத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறை இருந்தால் நேசக்கூட்டு என்றும் அல்லாவிடில் சமஷ்டி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிரவும், சமஷ்டிக் கோரிக்கையை இனிமேல் தமிழர்கள் தங்கள் கோரிக்கையாக முன்வைக்கப்போவதில்லை என்ற தந்தை செல்வாவின் 1976 ஆம் ஆண்டு நிலைப்பாட்டுக்கு எதிராக இந்த மூன்று கூட்டுகளும் சுயநிர்ணய உரிமையைக் கைவிடும் சமஷ்டியைத் தமது தீர்வாகச் சொல்லிவருகின்றன. கூட்டுச் சமஷ்டியை ஏதோ ஒரு வகையிலாவது எடுத்தாளப் புறப்பட்டுள்ளமை ஒரு நல்ல விடயமாக இருப்பினும், வரைவிலக்கணங்கள் தெளிவாக முன்வைக்கப்படாத தன்மை அந்தத் தீர்வுத்திட்டத்துக்கும் குறைபாடாகக் காணப்படுகிறது.

  இந்திய-இலங்கை ஒப்பந்த உறுப்புரைகள் எவ்வளவு தூரம் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கும், அதன் ஆட்சிப்புல ஒருமைப்பாட்டுக்கும் ஒத்துப்போவனவாயும் வரையப்பட்டு, தேசமாக ஈழத்தமிழர்களை அங்கீகரிக்காது, வெறும் பன்மைத்துவச் சமுதாயமாக மட்டும் மட்டுப்படுத்தி சிலோனீஸ் ஆகவும் சிறீலங்கன் ஆகவும் ஏற்கனவே தோற்றுப்போன இலங்கைத் தேசியத்தை நிலைநிறுத்த முற்படும் நீர்த்துப்போதலை மேற்கொண்டுள்ளன என்பதை ஈழத்தமிழர் விடுதலை அரசியல் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

  இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைப் போலவே, 2002 ஆம் ஆண்டில் தமிழீழத் தேசியத் தலைவரால் ஒப்புக்கொள்ளப்படாத ஒஸ்லோத் தீர்மானமும், அதன்பின் 2015 ஆம் ஆண்டில் மேற்கும் இந்தியாவும் இணைந்து மேற்கொள்ளவிருந்த ஆட்சிமாற்றப்படலத்தின் முன்னோடிக் கோட்பாடுகளான 2013 சிங்கப்பூர்க் கோட்பாடுகளும் சிக்கலான தன்மைகளைக் கொண்டவை. இவற்றுக்கு இசைவாக ஈழத்தமிழர் அரசியல் வேணவாவை தேர்தல் விஞ்ஞாபனங்கள் மூலமும், தீர்வுத்திட்டங்கள் மூலமும் மாற்ற விழையும் போக்குகளை அடையாளங்கண்டு, அவற்றைச் சீராக்குவதில் மக்கள் மட்டத்தில் அரசியல் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

  சுயநிர்ணய உரிமை, இறைமை, தேசம், பாரம்பரியத் தாயகம் ஆகிய அர்த்தம் நிறைந்த அடிப்படைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ கைவிடும் போக்குகளுக்குள் இந்த மூன்று கூட்டுகளும் பயணித்துள்ளன. ஆதலால், ஈழத்தமிழர் அரசியல் வேணவாவை மறுதலிக்காது செயற்படும் வலுவுள்ள, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு குடியாட்சிப் பொறிமுறையும், அதற்கு அப்பாலான குடிசார் சமூகம் ஒன்றும் தோற்றம் பெறவேண்டும். அவை வெளிப்படைத்தன்மையோடும் சுயாதீனத்தன்மையோடும் இயங்கவேண்டும். நிதியூட்டம் செய்வோரால் பிளவு அரசியலுக்கு உட்படுத்தப்பட இடமளித்தல் ஆகாது.

 11. ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகம் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் தனது நிதியூட்டல் மூலம் அரசியற் பிளவுகளுக்கு உடந்தையாகியுள்ளது மட்டுமல்ல, இன அழிப்பு நீதி குறித்துச் சரியான வழிமுறைகளிற் பயணிக்காத வேலைத்திட்டங்களுக்குப் பலியாகித் தவறியுள்ளது.

  தவறான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உறுப்புரைகளை எடுத்தாள்வதும், பொதுவாக்கெடுப்பைத் தமிழீழம் தவிர்த்த வேறு அரைகுறைத் தீர்வுகளுக்கு உரியதாக அகட்டுவதுமாகக் குறி தவறியுள்ளது. நீண்டகால வேலைத்திட்டங்களில் மட்டுமல்ல, அவ்வப்போது உருவாகும் ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும்’ திறமையைக்கூட ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தாயகத்துக்குப் புலம்பெயர் சமூகத்தால் வழங்கமுடியாத நிலை காணப்படுகிறது.

  ஒட்டுமொத்தப் புலம்பெயர் சமூகத்திலுள்ள விடுதலை அரசியலுக்கான அமைப்புகளின் அணுகுமுறைகளிலும் கட்டமைப்புகளிலும் கனதியான, அறிவுபூர்வமான, அர்த்தமுள்ள மாற்றம் விரைவாக ஏற்படவேண்டும்.

  புலம்பெயர் சமூகத்தில் 2009 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாளிலிருந்து 2011 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் வரை, நோர்வே, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, பிரித்தானியா, டென்மார்க், இத்தாலி, அவுஸ்திரேலியா ஆகிய பத்து நாடுகளில் பக்கசார்பற்ற கண்காணிப்போடு நடாத்தப்பட்ட வாக்கெடுப்புகளில் மட்டும் 207,058 ஈழத்தமிழ் புலம்பெயர் பொதுமக்களின் வாக்குகளோடு, பங்கேற்றோரில் 99.2 வீத வாக்குகளுக்கும் மேலான ஆணையோடு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மக்களாணை மீளவும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதேவேளை, அரசியல் வேணவாவை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ள ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2010 பொதுத் தேர்தலில் 233,190 வாக்குகள் கிடைத்திருந்தன.

  ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்து மக்களையும் புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் ஒன்றிணைத்ததே ஈழத் தமிழ் தேசம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அப்பாற்பட்ட எந்த ஓர் அரசியல் வேணவாவுக்கும் சட்டபூர்வமான குடியாட்சியின் பாற்பட்ட மக்களாணை கிடையாது. அதற்கான குடியாட்சிச் சூழலை இலங்கை ஒற்றையாட்சி அரசு 1983 ஆம் ஆண்டில் கொண்டுவந்த ஆறாம் சட்டத்திருத்தம் மறுத்துள்ளது. ஆதலால், இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் தேர்தல்களால் மறுக்கப்படமுடியாததாக 1977 ஆம் ஆண்டு மக்களாணை தொடர்ந்தும் வாழ்கிறது.

  அதேவேளை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடடிருந்த ஆயுதப் போராட்ட இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் 1985 ஆம் ஆண்டில் திம்புக் கோட்பாடுகளை முன்வைத்திருந்தன.

  தமிழீழ விடுதலைப் புலிகள் 2003 ஆம் ஆண்டு முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்கான வரைபும், வடமாகாண சபையால் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இனவழிப்புக்கான சர்வதேச நீதி கோரும் தீர்மானம் ஆகியவையும் குடியாட்சி ஆணைகளாகக் கருதப்பட்டு, அவற்றைப் புறக்கணிக்காத வழிவரைபடத்தோடு புலம் பெயர் சமூகம் தெளிவாக இயங்கவேண்டும்.

  தமிழ்நாட்டு மக்களின் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட குடியாட்சி ஆணைக்கு இல்லாத கருத்துநிலைகளுக்குள் ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகம் குறைமுதிர்ச்சித் தலையீடுகளை மேற்கொள்ளாது, முதிர்ச்சித்தன்மையோடு மாநிலக் கட்சிகளோடும் மக்கள் அமைப்புகளோடும் நல்லுறவை வளர்த்துச் செயலாற்றவேண்டும்.

  ஈழத்தமிழர் விடுதலை அரசியல் தொடர்பாக இந்திய அரசை தமிழ்நாட்டின் பங்கேற்போடு மட்டுமே அணுகவேண்டும். தமிழ்நாட்டுக்கும் ஈழத்தமிழர்களுக்குமான ஒன்றிணைந்த பொறிமுறையைத் தோற்றுவிக்காது, அதற்கு முரண்பாடான விதத்தில் நேரடியாக இந்திய வெளியுறவுத் துறையுடனோ, வேறு துறைகளுடனோ தொடர்புகளைப் பேணுவதை புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புகள் தவிர்க்கவேண்டும்.

 12. தமிழ்நாட்டின் சட்டமன்றப் பேரவையில் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரை நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களில் மூன்று முக்கிய கோரிக்கைகள் உள்ளன.

  இவற்றில் இரண்டை தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க 2012 டெசோ மாநாட்டிலிருந்து தனது 2019 ஆம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனம் ஈறாக உள்ளடக்கியுள்ளது.

  2022 பெப்ரவரியில் இருந்து ஏப்பிரல் வரை மூன்று தளங்களில் கோரிக்கைகளும் தீர்மானங்களும் வெளியாகியுள்ளன.

  அடுத்த கட்டச் செயற்பாடுகள் மக்கள் தளத்தில் தோன்றவேண்டும், அப்போதுதான் தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர் விடுதலை அரசியலுக்கேற்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிலை உருவாகும்.

  இன அழிப்புத் தொடர்பான பன்னாட்டுப் புலன் விசாரணையும் ஏனைய சர்வதேசக் குற்றங்களோடு தவறாது மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், இலங்கை அரசு தமிழர்களுக்கெதிரான அடக்குமுறையையைக் கைவிடும்வரை அதற்குப் பொருளாதார உதவிகளைப் புரியக்கூடாது என்றும், தனி ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஈழத்திலும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகள் சட்டசபையில் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் நிறைவேற்றப்பட்டிருந்தன. ஒன்றிய அரசுக்கு அவர் பல கடிதங்களையும் அனுப்பியிருந்தார். எனினும் அதற்கு அப்பாற்பட்ட செயற்பாடுகள் தோன்றியிருக்கவில்லை.

  அண்மையில், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தாலும், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினாலும், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கூட்டமைப்பினாலும் 2022 பெப்ரவரியில் இருந்து ஏப்பிரல் மாதம் வரை முன்வைக்கப்பட்டுள்ள ஏழு தொடக்கம் பதினாறு கோரிக்கைகளும் தீர்மானங்களும் அடுத்த கட்டச் செயற்பாட்டுக்கு முன்னோடியானவை.

  பரவலான புரிதலுக்காக இவை தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிடப்படவேண்டும்.

  அதேவேளை, காத்திரமான போராட்டங்கள் எழுந்தால் தமிழ்நாடு அரசும் சரியான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஈழத்தமிழர் அரசியல் விடுதலை என்ற விடயத்தில், தமிழ்-திராவிடம் என்ற தமிழ்நாட்டிற்குள்ளே காணப்படும் முரண்பாட்டு நிலைகளுக்கு அப்பாற் சென்று, ஈழத்தமிழர் அரசியல் வேணவாவைப் பலப்படுத்தி, இன அழிப்புக்கான சர்வதேச நீதியைக் கோருவதிலும், இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கையை ஈழத்தமிழர் விடயத்தில் மாற்றி அமைக்கும் மூலோபாயத்தோடு உத்திகளை வகுப்பதற்கும் அவற்றைச் செயற்திட்டங்களாக்கிச் செயற்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மக்கள் சமூகமும் தயாராகவேண்டும்.

  2009 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முற்பட்ட பங்களிப்பைப் பற்றிய கருத்துமோதல்களோடு தமக்கிடையே முரண்பட்டுக்கொண்டிருக்காமல், தற்போதைய ஈழத்தமிழர் விடுதலை அரசியல் பற்றிய கருத்து ரீதியான விவாதம் முன்னிலை பெறவேண்டும்.

  ஈழத்தமிழர் நலன் பற்றிய கவனம் இருக்கின்றபோதும் ஈழத்தமிழர் விடுதலை அரசியலைக் கருத்திற்கொண்டு இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்தவேண்டிய அடிப்படை மாற்றங்கள் குறித்த கவனம் தமிழ்நாடு அரசமட்டத்தில் போதாது உள்ளது. தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர் விடுதலை அரசியல் குறித்த செயற்பாடுகளை நேர்த்தியாக முன்னெடுக்கும் வகையில் அறிவைப் பெருக்கிக்கொள்ளவேண்டிய தேவை நிறையவே உள்ளது.

  இந்தவகையில், கட்சிகள் மற்றும் மக்கள் இயக்க மட்டங்களில் அண்மைக்காலத்தில் தீர்மானங்கள் வெளிப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. அதேபோல ஆக்கபூர்வமான விவாதங்களும், அடுத்தகட்டச் செயற்பாடுகளும் அங்கு உருவாகவேண்டும்.

Chronology:

Latest 15 Reports
04.02.24 15:40   Photo
சியோனிசம் காணும் தோல்வி ஈழத்தமிழருக்குப் பலன் தரவல்ல படிமை மாற்றத்தின் அறிகுறி
24.04.22 05:44  
தீவின் நெருக்கடிச் சூழலில் ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கவேண்டிய நிலைப்பாடுகள்
09.04.22 14:44   Photo
குறிதவறும் ஈழத்தமிழர் தலைமைகளுக்கு வரலாறு தருகின்ற எச்சரிக்கை
21.01.22 07:24   Photo
ஈழத்தமிழர் தேசத்தின் தலைமைத்துவம் தேர்தல் அரசியற் கட்சிகளுக்கு அப்பாலானது
02.11.21 15:32   Photo
13 ஆம் சட்டத்திருத்தத்தால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ள முடியுமா?
15.09.21 08:19  
English version not available
17.05.21 19:23   Photo
Ananthi blames war criminal Silva for blocking collective memorial at Mu'l'livaaykkaal
09.04.21 14:46  
English version not available
23.03.21 12:41   Photo
No focus on Tamil genocide, geopolitics gets played out in Geneva in favour of QUAD formation
21.03.21 13:34   Photo
Navi Pillay explains ‘human rights’ limitations in Geneva on Tamil genocide
15.03.21 20:36   Photo
Deceived Tamil activists in UK falsely claimed ‘substantial changes’ to Zero draft
09.03.21 21:34   Photo
UK repeatedly wronged Tamils says hunger-striker, demands genocide justice
26.02.21 11:53   Photo
Tamils witness false dilemma in Geneva as geopolitical formations pit against each other
19.02.21 14:02   Photo
UK not prepared to push for ICC option in new UNHRC Resolution
07.02.21 23:16   Photo
Unprecedented P2P uprising paves the way for rights-oriented politics of Tamils and Muslims
 
Find this article at:
http://www.tamilnet.com/art.html?catid=25&artid=39984