மட்டக்களப்பின் உள்ளூராட்சித் தேர்தல்
[TamilNet, Monday, 31 December 2007, 21:33 GMT]
கொழும்பு பரீட்சிக்கும் ஆயுதக்குழுக்களின் அரசியல் ஒத்திகை: மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உள்ளூராட்சித்தேர்தலில் கூட்டணி அமைத்து செயற்படுவதற்கு ஈ.பி.டி.பி, ரி.எம்.வி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா அணி) ஆகிய குழுக்கள் கொள்கை அளவில் இணக்கம் கண்டுள்ளன. மட்டக்களப்பு ஈ.பி.டி.பி அலுவலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற மேற்படி குழுக்களின் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்திலேயே கொள்கை அளவிலான இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனினும், அடுத்துவரும் ஓரிரு நாட்களுக்குள் இக் குழுக்களின் தலைமைகள் இது குறித்து கலந்துரையாடிய பின் இறுதி முடிவை கூட்டாக அறிவிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
இந்தத் தேர்தல் கூட்டு குறித்து ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் நாபா பிரிவின் கிழக்கு பொறுப்பாளரும் அதன் மத்திய குழு உறுப்பினருமான இரா. துரைரட்ணம் லண்டன் பி.பி.சியின் தமிழ்ச் சேவைக்கு ஞாயிறன்று வழங்கிய செவ்வியில் மட்டக்களப்பில் இயங்குகின்ற தமிழ்க் குழுக்கள் ஒன்றாக இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய நிர்ப்பந்தத்தின் காரணமாக மேற்படி கட்சிகள் சேர்ந்து பொதுவான தீர்மானத்தின் கீழ் ஒன்றாக இணைந்து போட்டியிடுவதற்கு கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இக்கூற்றின் மூலம் அவர் மறைமுகமாக எதனையோ சொல்ல முற்படுகிறார்.
கட்சிகளிடையே கொள்கை ரீதியான முரண்பாடுகள் உள்ள நிலையில் இந்த உடன்பாடு நடைமுறையில் சாத்தியப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது ஒரு தேர்தல் கூட்டு எனவும் கட்சிகளுக்கிடையிலான பிரச்சனைகளையும், தேர்தல் தொடர்பில் மக்களுக்கு இருக்கும் ஐயங்களையும் தீர்ப்பதற்கான உடன்பாடாகவே இது பார்க்கப்படுவதாகவும் கூறுகிறார்.
இறுதியாக தேர்தல் நடத்துவதற்கான சாத்தியம் மட்டக்களப்பில் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நிச்சயமாக மட்டக்களப்பைப் பொறுத்தவரை சுமுகமான தேர்தல் ஒன்று நீண்டகாலமாகவே இடம்பெறவில்லை. குறிப்பாக எந்தக் காலகட்டத்திலும் தேர்தல்கள் யாவும், பாராளுமன்ற தேர்தல் உட்பட, வன்முறையின் மத்தியிலேயே நடத்தப்பட்டன என்றார். தற்போதைய காலகட்டத்தை பொறுத்தவரையிலும், கடத்தல்கள், கொள்ளைகள். மனித உரிமை மீறல்கள், ஆட்களை ஆட்கள் சுடுகிற சம்பவங்கள், ஆயுதக்குழுக்களுக்கிடையிலான தாக்குதல்கள் போன்றவையெல்லாம் நடக்கிறது. மக்கள் விரும்புகிற தேர்தல் என்பது சுதந்திரமாக, ஜனநாயக முறையில், விரும்புகிறவர்களுக்கு விருப்பப்படி வாக்களிக்கவும், திறமை உள்ளவர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடவும் கூடிய ஒரு சூழ்நிலை தற்போது நிச்சயமாக இல்லை என்றே கூறலாம் என நாபா குழுவின் துரைரட்ணம் தெரிவித்துள்ளார். ஆயினும் தேர்தலில் இருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இது அவர் சூழ்நிலையின் கைதியாக இருப்பதனை நன்கு புலப்படுத்துகிறது.
தமிழ்க் குழுக்களின் அறிவிப்பிற்கு சமாந்தரமாக ஏககாலத்தில், கிழக்கில் நடைபெறவுள்ள 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது அரசாங்கத்துடன் தொடர்புடைய அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கூட்டணியாகப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன சிங்கள நாளிதளான லங்காதீபவிற்கு தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அரசாங்கமே இந்தத் திட்டத்தைத் தயாரித்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்க் குழுக்கள், கட்சிகளிடம் உத்தரவைப் பிறப்பித்து இருப்பதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் இது ஒரு நியாயமான தேர்தலாக இருக்கமாட்டாது என தற்போது சிறிலங்காவின் நாடாளுமன்றிலும் சரி வெளியிலும் சரி எதிர்க்கட்சியாக உள்ள ஒரே முஸ்லிம் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தமிழ் மக்களதும் முஸ்லிம்களதும் வாக்குகளை வேட்டையாடுவதற்கான கபடநாடகமே மட்டக்களப்பில் உள்ளுராட்சி தேர்தலுக்கான அரசாங்கத்தின் அறிவிப்பு என அக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அண்மையில் தெரிவித்திருந்தார். தமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு பலமடங்காக குறைக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கில் தமக்கிருக்கும் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கிடையில் தேர்தல் வேலைகளை மேற்கொள்வது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை கடந்த 13 மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சொந்தத் தொகுதிகளுக்கு போகமுடியாதவாறு அரசாங்கம் தடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் லண்டன் பி.பி.சியின் தமிழ்ச் சேவைக்கு கடந்த ஞாயிறன்று வழங்கிய செவ்வியில் தெரித்துளளார். கிழக்கிற்குச் செல்வற்கான பாதுகாப்பையோ போக்குவரத்து ஒழுங்குகளையோ அரசாங்கம் செய்ய மறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எழுத்து மூலமாக வழங்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். வேட்பு மனுக் கோரப்பட்டுள்ள 9 சபைகளுக்கும் 116 உறுப்பினர்களை தமது கட்சி நிறுத்த வேண்டிய நிலை உருவாகலாம் எனத் தெரிவித்த அவர், இவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவு வழங்குவார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்கான சுமுகமான சூழல் இல்லாத நிலை குறித்து உயர் நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறாயின் யாருக்காக கிழக்கின் இந்த உள்ளூராட்சி தேர்தல் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. அரசாங்கத்தின் அரவணைப்பில், பாதுகாப்பில் உள்ள ஒரு குழு, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான முஸ்லிம் காங்கிரஸ், மட்டக்களப்பில் தமிழ்மக்களின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ் கூட்டமைப்பு ஆகியன யாவுமே தேர்தல் நடை பெறுவதற்கான சூழல் இல்லை என கூறுகின்றன.
ஆக, கிழக்கில் இராணுவ ஆட்சியை, அதன் கட்டமைப்பை, நிர்வாக முறையிலும் கொண்டுள்ள அரசாங்கம் அங்கு ஜனநாயகம் நிலவுவதாக காட்ட எடுக்கும் நடவடிக்கையே இது என்பதனை எவரும் புரிந்து கொள்ள முடியும்.
இதற்கு மற்றுமொரு சிறந்த உதாரணம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற குழு அரசியற் கட்சியாக இதுவரை தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் இவர்களை அங்கிகரிக்கும் வகையில் புதிய கட்சிகளை அங்கீகரிக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்படும் என அண்மையில் தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருந்தார். இதன் மூலம் கிழக்கில் தாம் விரும்பியவற்றை விரும்பியவாறு நிறைவேற்றும் கைப்பிள்ளையான ஒரு அணியை நாடாளுமன்றம் கொண்டு வருவதற்கான பயிற்சிக் களத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளதென்பது தெளிவாகிறது.
இவ்வகையில் அரசாங்கத்தினால் உலகிற்கு அரங்கேற்றப்படவுள்ள கிழக்கின் உள்ளூராட்சி தேர்தலுக்கான இந்த நாடகத்தை சிறப்பாக அரங்கேற்றி முடிப்பதற்காகவும் கிழக்கில் மேலும் பல “களை எடுப்புக்களை” ஒருங்கமைத்து மேற்கொள்ளவுமே அரசாங்கம் மற்றுமொரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
கிழக்குப்பிராந்திய படைத்தளபதியாக புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரியை அரசாங்கம் நியமித்துள்ளது. இலங்கை புலனாய்வுத்துறையின் இயக்குநரான பிரிகேடியர் ஜம்மிக லியனகே மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டு கிழக்குப் பிராந்திய படைத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். புலனாய்வுத்துறை அதிகாரியான இவர், ஒரு திடீர் முடிவுக்கு அமைவாகவே இந்த இடமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகிறது.
இவற்றினூடாக வட கிழக்கில் முக்கிய நிர்வாகக் கட்டமைப்புகளில்
குறிப்பாக மாகாணசபையின் ஆளுநர், அரசாங்க அதிபர் உள்ளிட்ட பதவிகளில் படை அதிகாரிகளை நியமித்துள்ள அரசாங்கம் எதிர் காலத்தில் மக்களால் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் தெரிவிலும், தமது கட்டுப்பாட்டில் உள்ள ஆயுதக் குழக்களின் உறுப்பினர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை உறுதிப்படுத்தப்படுகின்றது.