மறுக்கமுடியாத சுயநிர்ணய உரிமையைக் களைய முனையும் கூட்டாட்சிக் கோரிக்கை

[TamilNet, Thursday, 18 December 2025, 09:30 GMT]
ஈழத்தமிழர் தேசம் மீது நீட்சியான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு (protracted structural genocide) நுட்மான வழிகளில் தொடரப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படுவது மட்டுமல்ல, குரூரமான சரீர இன அழிப்பு மீளவும் நிகழாது தடுக்கப்படுவதும் (nonrecurrence of physical genocide) ஈழத்தமிழர் தேசத்தின் களையவொண்ணா சுயநிர்ணய உரிமை (inalienable right of self-determination) ஒத்துக்கொள்ளப்பட்ட அரசியற் தீர்வு மூலம் மட்டுமே இயலுமாகும். ஆனால், தாயகம், தேசியம், இறைமை, சுயநிர்ணயம் போன்ற சொற்களை வெற்றுக் கூப்பாடுகளாகக் கையாளுவதில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்தல் அரசியற் கட்சிகள் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையைக் கூட்டாட்சிக் (federation) கோரிக்கை மூலம் களைந்துவிடும் ‘அரசியல் முள்ளிவாய்க்காலை’ அரங்கேற்றிவருகின்றன. ஒரு புறம் ஏக்கிய ராஜ்ஜிய என்ற குழிபறிப்பும் மறுபுறம் ‘கூட்டாட்சி’ என்ற கூப்பாடும் ஈழத் தமிழ்த் தேசிய விடுதலைக்கான பயணத்தைத் தடுமாறவைத்துத் துண்டாட எத்தனிக்கின்றன.

போதாக்குறைக்கு ஈழத்தமிழர் அரசியல் விடுதலைக்குத் தமிழ் நாட்டில் நீறுபூத்த நெருப்பாக நீடிக்கும் ‘பொதுவாக்கெடுப்பு’ என்ற கோரிக்கையைக் ‘கூட்டாட்சி’ என்பதாகப் படிநிலை இறக்கம் செய்யும் பெருந் தவறுக்கு அடித்தளமிடும் அறிகுறியும் தென்படுகிறது.

• • •


வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கும் அதன் வழியில் தற்போதைய கோரிக்கை வடிவமாயுள்ள பொதுவாக்கெடுப்பு என்பதற்கும் முரண்படாமல் கூட்டாட்சிக் கோரிக்கையை தமிழர் தரப்பு முன்வைக்க இயலுமா என்றால், இயலாது என்ற பதிலே கிடைக்கிறது.

இதை விளங்கிக்கொள்வதற்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கும் திம்புக் கோட்பாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளை விளங்கிக்கொண்டிருத்தல் வேண்டும்.

ஈழத்தமிழர் தேசத்தின் களையவொண்ணா (inalienable) சுயநிர்ணய உரிமையின் மரபு என்ன என்பதை விளங்கிக்கொண்டாலே இதை மட்டுமல்ல வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் விளங்கிக் கொள்ள இயலும்.

• • •


‘சுயநிர்ணயம்’ என்ற பதம் வடசொல்லாக அமைந்திருப்பதால் அதைத் தூயதமிழில் எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் தன்னாட்சி என்ற சொல்லை அதற்கு ஈடாகப் பயன்படுத்துவது தவறாகும்.

தன்னாட்சி (self-rule) வேறு, சுயநிர்ணயம் (self-determination) வேறு.

• • •


1985 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்ட இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து முன்வைத்த திம்புக்கோட்பாடுகள் நான்கு அடிப்படைகளை இந்திய அரசுக்கு ஈழத்தமிழர் விடுதலை அரசியலின் “நெகிழ்ச்சித்தன்மையின்” எல்லைகளைச் சுட்டிக்காட்டுவனவாக அமைந்திருந்தன.

அவையாவன:

  1. இலங்கையில் தமிழர்கள் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரிக்கவேண்டும். (Recognition of the Tamils of Sri Lanka as a distinct nationality)
  2. இலங்கையில் ஓர் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தாயகம் இருக்கிறதென்பதை அங்கீகரித்து, அதன் ஆட்சிப்புல ஒருமைப்பாட்டுக்கு உத்தரவாதமளிக்கவேண்டும் (Recognition of an identified Tamil homeland and the guarantee of its territorial integrity)
  3. மேலே கூறப்பட்டதன் அடிப்படையில், தமிழ்த் தேசத்தின் களையவொண்ணா சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும் (Based on the above, recognition of the inalienable right of self-determination of the Tamil nation)
  4. இலங்கைத் தீவைத் தமது நாடாகக் கருதும் அனைத்து தமிழர்களது முழுமையான பிரஜாவுரிமையையும் ஏனைய அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் அங்கீகரிக்கவேண்டும் (Recognition of the right to full citizenship and other fundamental democrtic rights of all Tamils, who look upon the island as their country).
மேற்குறித்த கோட்பாட்டின் முதலாம் உறுப்புரையில் பொருட்பிழை தரும் ஒரு சொற்பிழை இருக்கிறது.

இந்தக் கோட்பாட்டை வாசித்த இலங்கை அரசின் தலைமைப் பிரதிநிதி ஹெக்டர் ஜெயவர்த்தனா அந்தச் சொற்பிழையைத் தனது வாதத்துக்குச் சார்பாக எடுத்து வாதிட்டார்.

அப்போது தமிழர் தரப்பு அதன் உண்மையான அர்த்தத்தை கூட்டத்தொடரில் தெளிவுபடுத்தவேண்டியிருந்தது.

அதாவது, nation என்பது வேறு nationality என்பது வேறு அர்த்தமுடையது என்பதே அந்தச் சொற்சிக்கல்.

முன்னையதன் பொருளிலேயே பின்னைய சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தெளிவை அங்கு தமிழர் தரப்பினர் தமது உரைகளில் சுட்டிக்காட்டவேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டது. தவிரவும் மூன்றாம் உறுப்பிரையில் குறித்த சொல் சரியாகக் கையாளப்பட்டிருந்தது.

முதலாம் அமர்வில் (சத்தியேந்திரா கலந்துகொள்ள முன்னர்) திம்புக்கோட்பாடுகளை எழுதியதில் இந்திய மூத்த உளவுத்துறை அதிகாரிகளின் பங்கு பிரதானமாக இருந்தது. இதிலே சில திருத்தங்களை மட்டுமே ஈழத் தமிழர் தரப்பு மேற்கொண்டிருந்தது. அங்கே தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்தரணிகள் இருந்த போதும் குறித்த சொல்லை முதலாம் உறுப்புரையில் தவறவிட்டிருந்தனர்.

திம்புக் கோட்பாடுகளில் நான்காவது மட்டும் (மலையக மக்களுக்கான பிரஜாவுரிமை) 1995 ஆம் ஆண்டளவில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

மூன்றாந் தரப்பு அல்லது இலங்கை அரச தரப்பு ஒரு தீர்வை முன்வைக்க முன்வருகிறதென்றால், அது எந்த அடிப்படைகளை நிவர்த்தி செய்தால், வட்டுக்கோட்டை நிலைப்பாட்டை மறுதலிக்காமல் அதைத் தமிழர் தரப்பு பரிசீலிக்க இயலுமா இல்லையா என்பதைச் சுட்டுவதற்கானவையே திம்புக் கோட்பாடுகள்.

திம்புக் கோட்பாடுகள் ‘களையவொண்ணா’ சுயநிர்ணய உரிமை என்பதைச் சரியாகக் கையாளத் தவறியுள்ளன என்ற உண்மையும் இங்கே புரிந்துகொள்ளப்படவேண்டியது.

இதனாற் தான் திம்புக் கோட்பாடுகளை நெகிழ்ச்சித் தன்மைக்குரிய கோட்பாடுகளாகத் தெரிந்து, தேவைப்படும் போது பேச்சுவார்த்தை மேசையில் கையாளுவது தமிழ்த் தரப்பின் வழக்கமாயிருந்தது.

திம்புக் கோட்பாடுகள் எங்களுக்கானவை அல்ல. வெளிச்சக்திகளுக்கானவை அல்லது சிங்கள தேசத்துக்கானவை. காப்பரணுக்கான கோட்பாடுகள் அவை.

1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் 1985 திம்புக் கோட்பாடுகளை மறுதலித்த ஒன்று.

வரலாற்றுத் தாயகத்தையோ பாரம்பரியத் தாயகத்தையோ ஒப்புக்கொள்ளாமல், தமிழர் தாயகத்தின் ஆட்சிப்புல ஒருமைப்பாட்டை நிராகரித்து (கிழக்கில் மட்டும் பொதுவாக்கெடுப்பு, தற்காலிக இணைப்பு), வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள்(கள்) ஏனைய மக்களோடு வரலாற்று வாழிடமாகப் (areas of historical habitation) பயன்படுத்திய ஒரு பகுதி என்பதை மட்டுமே தெரிவிக்கின்றது. (உடன்படிக்கையை எழுதியது காமினி திசநாயகாவும் டிக்சிற்றும்.)

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட 13 ஆம் திருத்தம் ஒப்பந்தத்தின் நோக்கை விட குறுகியதாக அமைந்தது. அது இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரைகளில் சில தாக்கங்களை ஏற்படுத்தினாலும் நடைமுறையில் எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லை.

அதையும் நிராகரிக்கும் போக்கில் இலங்கை அரசு இருப்பதானது உள்ளார்ந்த சுயநிர்ணயத்தை அது நிராகரிப்பதற்கான இன்னும் ஓர் எடுத்துக்காட்டு.

• • •


அரசியல் விடுதலைக்கான நிலைப்பாடுகளை முன்வைக்கும் போது, குறைந்த பட்சக் கோரிக்கைகள் என்றும் உயர்ந்த பட்சக் கோரிக்கைகள் என்றும் அவற்றை முன்வைப்பது தவறு.

நெகிழ்ச்சிக்கான எல்லைகள் எவை என்பதைக் குறிப்பிட திம்புக் கோட்பாடுகளும், அதேவேளை எமது நிலைப்பாடும் கோட்பாடும் எது என்பதைக் குறிப்பிட வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அது சார்ந்த மக்களாணைக்குரிய விஞ்ஞாபனமும் விளங்குகின்றன. முள்ளிவாய்க்காலில் கோட்பாட்டைச் சரணாகதியாக்காத போராட்ட மரபும் இத்தோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபை முன்வைத்தபோது அதிலே திம்புக் கோட்பாடுகளை எடுத்தாளாமாற் தவிர்த்து, வட்டுக்கோட்டையை மட்டுமே குறிப்பிட்டிருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பாக நோக்கவேண்டியது.

வட்டுக்கோட்டை நிலைப்பாட்டில் இருந்து வழுவிச் செல்வோர் களையவொண்ணா என்ற பதமற்ற ‘வெறும்’ சுயநிர்ணய உரிமை என்பதைக் கூட்டாட்சி என்பதோடு சேர்த்துக் குழப்புவது மட்டுமல்ல, ஏதோ ஐ.நா. மன்றத்தின் சாசனங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுச் சிக்கித் தவிக்கும் சுயநிர்ணய உரிமையைத் தான் தாம் கோருவதாகவும் காட்டிக்கொள்வார்கள்.

கேள்வி கேட்டால், ‘அது’ தான் ‘இது’ என்றும், ‘இது’ தான் ‘அது’ என்றும் விதண்டாவாதம் பேசி மக்களைக் குழப்புவார்கள்.

• • •


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் 08 ஜூன் 2011, 27 மார்ச் 2013, 24 ஒக்டோபர் 2013, 16 செப்டம்பர் 2015 ஆகிய நான்கு தடவைகள் கொண்டுவந்து, சட்டசபை அமர்விற் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றிய நான்கு தீர்மானங்களின் மூன்று வலுவான கோரிக்கைகளாகப் பின்வருபவற்றைப் பார்க்கலாம்:

  1. இன அழிப்புத் தொடர்பான பன்னாட்டு புலன்விசாரணையும் ஏனைய சர்வதேசக் குற்றங்களோடு தவறாது மேற்கொள்ளப்படவேண்டும்;
  2. இலங்கை அரசு தமிழர்களுக்கெதிரான அடக்குமுறையைக் கைவிடும் வரை அதற்குப் பொருளாதார உதவிகளை மேற்கொள்ளக்கூடாது, இந்திய அரசு அதை நட்பு நாடு என்று அழைக்கக்கூடாது;
  3. தனி ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஐ.நா. மேற்பார்வையில் தாயகத்திலும் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் மேற்கொள்ளப்படவேண்டும்.


சுருங்கக்கூறினால், தமிழ்நாடு தெரிந்திருக்கவேண்டிய ஈழத்தமிழர் நிலைப்பாடு தொடர்பான சமன்பாடு பின்வருமாறு:
  1. ஈழத்தமிழர் தேசத்தின் களையவொண்ணாச் சுயநிர்ணய உரிமை மரபு,
  2. 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம்,
  3. 1977 தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் விஞ்ஞாபனம்,
  4. திம்புக்கோட்பாடுகளில் முதல் மூன்று
  5. தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைத் திட்ட வரைபு
  6. தமிழக சட்டசபையின் தலையாய மூன்று கோரிக்கைகள்.


இவற்றைத் தவிர ஈழத்தில் இருந்தோ, புலம்பெயர் சூழலில் இருந்தோ எவரும் எதுவும் தமிழ்நாட்டுக்குப் புதிதாகச் சொல்லவேண்டியதில்லை.

• • •


களையவொண்ணா சுயநிர்ணய உரிமை என்பதற்கும் வெறுமனே சுயநிர்ணய உரிமை என்பதற்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது.

சுயநிர்ணய உரிமை அடிப்படையில் அமையும் ஆட்சிமுறைத் தீர்வுகளாக மூன்று வெவ்வேறு வகைப் பாதைகள் உள்ளன:
  1. ‘உள்ளார்ந்த சுயநிர்ணய’ பாதை என்ற மொழி, பண்பாட்டு அல்லது பிரதேச சுயாட்சி (ஆம், பதின்மூன்றாவது என்று பேசி முரண்பட்டுக்கொள்கிறார்களே, அதுவும் இதற்குள் தான், வெறும் சுயநிர்ணய கூட்டாட்சியும் இதற்குள் தான்)
  2. படிநிலைப் பாதை என்ற பொதுவாக்கெடுப்பை உள்ளடக்கிய பாதை
  3. இறைமையும் சுதந்திரமும் கொண்ட தனிநாடு அமைக்கும் பாதை.


கூட்டாட்சி பொதுவாக முதலாவது பாதையைப் பற்றியதாகவே அமையும். மிக அருமையான விதிவிலக்காக மட்டுமே அது இரண்டாவது பாதையைப் பொறுத்துக்கொள்ளும்.

இரண்டாவதும் மூன்றாவதும் களையவொண்ணாச் சுயநிர்ணய உரிமைக்குரிய பாதைகள்.

மூன்றாவதான பிரிவினையைக் கூட்டாட்சி ஒரு போதும் அங்கீகரிக்காது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, மேற்குறித்த மூன்று பாதைகளில் மூன்றாவது பாதை தடைப்பட்டுவிட்டதாகவும் அதனால் முதலாவது அல்லது இரண்டாவது பாதைகள் பற்றியே இனிமேல் சிந்திக்கலாம் என்றும் பலர் நினைக்கிறார்கள்.

இதனாற் கூட்டாட்சி பற்றி அதிகமாகப் பேசிக்கொள்கிறார்கள். அப்படிப் பேசும்போது இரண்டாவது படிநிலைப் பாதையைக் கைவிட்டுவிட்டு முதலாவது பாதைத் தெரிவுக்குள் திசைதெரியாது திரும்பிவிடுகிறார்கள்.

இவ்வாறு தடங்காமல் பயணிப்பதற்கு கூட்டாட்சி என்ற பொதுவான சொல்லாடலுக்குப் பதிலாக இணைப்பாட்சி என்ற ஆட்சிவடிவத்தைத் தெளிவாக முன்வைக்கும் பதத்தைப் பயன்படுத்தியிருந்தால் இந்தச் சிக்கல் எழுந்திருக்காது.

இரண்டாம் பாதைக்குரிய நுழைவுச் சீட்டை ஐயந்திரிபற உறுதிசெய்துகொள்வது இணைப்பாட்சி (confederation) என்ற வழிமுறை மட்டுமே என்பதைப் பலர் அறியாதவர்களாக உள்ளார்கள்.

கூட்டாட்சி என்று கூவிக்கொண்டு இணைப்பாட்சிக்குக் கிட்டச் செல்லமுடியும் என்று வாதிடுவோருக்கு, “செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமையானுங் கெடும்” என்ற திருக்குறளையே நினைவுபடுத்தவேண்டும்.

இணைப்பாட்சியாக அரசியல் தீர்வு அமையாது கூட்டாட்சியாக அமையுமெனின், கூட்டாட்சியிலிருந்து விலகுவதற்கான படிமுறையைக் குறிப்பிடும் சிறப்பான உறுப்புரை அரசியலமைப்பு உறுப்புரைகளில் முற்கூட்டியே தெளிவாக வகுக்கப்பட்டிருக்கவேண்டும்.

இல்லையென்றால், சட்டவாக்கம் ஒன்றைச் சிறப்பாக உருவாக்கும் வாய்ப்பு இருக்கவேண்டும்.

இவ்வாறான உறுப்புரையோ சட்டவாக்கமோ இலங்கையில் ஒருபோதும் சாத்தியமற்றவை என்பது கண்கூடு.

ஆதலால், கூட்டாட்சி என்று கதைப்பதே தவறு.

இணைப்பாட்சி என்பது ஓர் ஆட்சி முறை மட்டுமல்ல, அது ஒரு பயணம் அல்லது வாகனம் போன்றது.

பல ஆண்டுகள் இணைந்திருந்த பின் அது தனிநாட்டை நோக்கியோ அல்லது சாதாரண கூட்டாட்சியை நோக்கியோ நடைமுறையில் பயணித்துவிடலாம்.

இணைப்பாட்சியாக ஆரம்பித்து கூட்டாட்சியாகக் காலப்போக்கில் மாறிவிட்டதற்கான எடுத்துக்காட்டுகளாக சுவிற்சர்லாந்து நாட்டையும் ஜேர்மனியையும் குறிப்பிடலாம்.

காலனித்துவம் முற்றுப்பெறாத நிலையிலுள்ள அல்லது உள்ளார்ந்த சுயநிர்ணயப் பாதை பலகாலமாக மறுக்கப்பட்ட, அன்றேல் பெருங்கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ள சூழலில் இணைப்பாட்சியானது, பரீட்சார்த்தமாகத் தற்காலிகமாக இணைந்து வாழ்ந்து, ஒருவருக்கொருவர் கெடுதல் இன்றி வாழ்வதற்கான ஒரு பரிசோதனையை மேற்கொண்டு, காலப்போக்கில் அடுத்த படிநிலையை அடைய இடமளிக்கிறது.

இந்த நியாயத்தின் படி இரண்டாம் வகையான சுயநிர்ணயப் பாதையை வலியுறுத்துவது பொருத்தமானது. இணைப்பாட்சி என்று இலங்கையில் இருக்கும் கட்சிகள் அரசியற் தீர்வைக் கோருமானால் களையவொண்ணா சுயநிர்ணயத்தையோ, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையோ திம்புக் கோட்பாடுகளையோ அது நிராகரிக்காத போக்காக அமையும்.

மாறாக, கூட்டாட்சி என்று பேச ஆரம்பித்த உடனேயே பொதுவாக்கெடுப்பு என்பதை நிராகரிக்கும் ஒவ்வாமைப் போக்கு ஏற்பட்டுவிடும்.

• • •


ஈழத்தமிழர் தேசிய இனம் காலனித்துவம் முற்றுப்பெறாத நிலையில் இருந்தவாறு ஒரு போராட்டத்தை நடாத்தும் தேசிய இனம் (தேசம்) என்பதை வட்டுக்கோட்டைத் தீர்மானம் தெளிவுபடுத்தியிருந்தது.

காலனித்துவ நீக்கத்துக்குரிய சூழமைவுக்குள் (decolonisation context) வைத்துக் கையாளப்படவேண்டியது ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை என்பதால் அது களையவொண்ணா சுயநிர்ணய உரிமை (inalienable right of self-determination) என்ற நியாயப்பாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

இதனால், ஐ.நா.வின் வரைபுகளுக்கு முற்பட்ட சுயநிர்ணய உரிமை வரைவிலக்கணத்துக்கு உரியதாகவும் அது திகழ்கிறது.

ஆகவே ஈழத்தமிழர் தேசத்தின் களையவொண்ணா சுயநிர்ணய உரிமையின் மரபை ஈழத் தமிழ்த் தேசிய விடுதலை அரசியலில் ஈடுபடுவோர் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

இலங்கையின் தவறான சுதந்திரத்துக்கு ஒத்துழைத்துவிட்டுத் தனது வரலாற்றுத் தவறை உணர்ந்து திருத்திக்கொண்டது மட்டுமன்றி தமிழீழக் கோரிக்கையை முதன் முதல் முன்வைத்தவர் ‘அடங்காத் தமிழன்’ செ. சுந்தரலிங்கம் ஆவார்.

சுந்தரலிங்கம் தனது கொள்கையைத் தந்தை செல்வாவுக்கும் நெடுங்காலம் முன்னரே மிகத் தெளிவாக வரையறுத்து முன்வைத்திருந்தார்.

தாயகக் கோட்பாட்டையும் ஈழத் தமிழர்கள் சிறுபான்மை அல்ல என்பதையும் அவர் வரையறுத்தார்.

தந்தை செல்வா கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்துவந்த காலத்திலேயே அது தவறு என்று சுந்தரலிங்கம் அதை மறுதலித்துவந்தார்.

1950களின் இறுதியிலே தமிழீழத்தின் வரைபடத்தை முன்வைத்த அவர் அதையொட்டி தமிழீழத்தின் முதலாவது தேசியகீதத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் யாத்திருந்தார்.

இருந்தபோதும், சுந்தரலிங்கம் சாதியத்தை நியாயப்படுத்திய கோளாற்றால் பீடிக்கப்பட்டிருந்தமையால் அவர் தமிழீழக் கோட்பாட்டின் தந்தையாகப் பொதுவெளியில் அங்கீகரிக்கப்பட இயலாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும், அவரே தமிழீழக் கோட்பாட்டின் மூலம் என்பது ஈழத்தமிழர் தேச விடுதலைக்கான அரசறிவியலில் வரலாற்று மாணவர்கள் அறிந்திருக்கும் மறுக்கவியலாத உண்மை.

கூட்டாட்சிக் கூத்தாடிகளால் இன்றும் தேடிப் படிக்கப்படவேண்டியவர் சுந்தரலிங்கம்.

தமிழீழக் கோட்பாடு முன்வைக்கப்பட்டுப் பத்து ஆண்டுகளின் பின்னர், தந்தை செல்வா கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்துவந்திருந்த காலப்பகுதியான 1968 ஆம் ஆண்டில், தமிழரசுக் கட்சியின் மூளை என்று அறியப்பட்ட வி. நவரத்தினம் தனித்துவமான இறைமைக் கோட்பாட்டை வலியுறுத்தியதால் கூட்டாட்சிக் கட்சி (Federal Party) என்று ஆங்கிலத்தில் அப்போது அறியப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறி சுயாட்சிக் கழகம் அமைக்கவேண்டிய ஒவ்வாநிலை ஏற்பட்டது.

இவரே தேசியத் தலைவர் பிரபாகரனின் இளவயதில் அவருக்கு அரசியல் வழிகாட்டியான வேணுகோபால் ஆசிரியரின் தலைவர் ஆவார்.

இவ்வாறோனாரால் வரையறுக்கப்பட்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலும் 1977 மக்களாணை பெற்ற தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தெளிவுபடுத்தப்பட்டதே களையவொண்ணா சுயநிர்ணய உரிமை.

1947 இல் சோல்பரி அரசியலமைப்பு தமிழர் விருப்புக்கு மாறாகத் திணிக்கப்படுவதை எதிர்த்து ‘ஐம்பதுக்கைம்பது’ கோரிக்கையை முன்வைத்து, பின்னர் அந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட முன்னரே சுயநிர்ணய உரிமைக்கான நியாயப்பாடு உண்டென்பதை பிரித்தானிய மகாராணியாருக்கு நினைவுபடுத்தித் தந்தி அனுப்பிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் - செல்வா தமிழ் காங்கிரசில் இருந்து பிரிவதற்கு முன்னான காலத்தில் - அதாவது இலங்கைச் ‘சுதந்திரத்துக்கு’ முன்பே, ‘சுயநிர்ணய உரிமை’ பற்றிய நியாயப்பாட்டைக் குறிப்பிட்டிருந்தார் என்பதையும் இங்கே பார்க்கவேண்டும்.

ஜீ.ஜீ. பொன்னம்பலத்துக்கும் முன்பே சேர் பொன் அருணாச்சலம் தமிழ் அரசியல் அடையாளத்தையும் மக்கள் தனித்துவத்தையும் அரசியலமைப்புச் சமத்துவத்தையும் கோரியிருந்தாலும் தமிழீழம் என்பதற்கோ சுயநிர்ணய உரிமைக் கருத்தியலுக்கோ அடித்தளம் இட்டிருக்கவில்லை.

ஆக, களையவொண்ணாச் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைத் தெளிவாகச் செதுக்கிய சுந்தரலிங்கம், நவரத்தினம் ஆகிய இருவரின் அடித்தளக் கொள்கைகளே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் அதன் தொடர்ச்சியான பொதுவாக்கெடுப்புக் கோரிக்கையையும் கோட்பாட்டு ரீதியாகத் தீர்மானித்தன.

நடைமுறையில் அக்காலத்து இளந்தலைமுறையின் ஆயுதப் போராட்ட முனைப்பு வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான அழுத்தத்தைத் தாராளமாக ஏற்படுத்தியிருந்தது. கோட்பாடும் நடைமுறையும் இணையாமல் போராட்டம் இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

சுந்தரலிங்கம், நவரத்தினம் ஆகியோரின் ஆங்கில மூல எழுத்துக்களை அடியொற்றியே பின்வந்த தத்துவாசிரியர்கள் ஆயினும் எழுத்தாளர்கள் ஆயினும் தமது ஆங்கிலப் புலமையைப் படியெடுத்துப் பயன்படுத்தினார்கள். படியெடுக்கையில் அறிந்தோ அறியாமலோ தவறுகளை இழைத்தார்கள். இழைத்த தவறுகளில் இருந்து அவர்கள் தம்மைத் தாமே மீட்டுக்கொள்ள களையவொண்ணா சுயநிர்ணய மரபில் வந்த நேர்த்தியான தேசியத்தலைவர் காரணமாயினார்.

ஆதலால், ஆங்கிலப் பிரதிகளை விட ஆங்கில மூலங்களைப் படிப்பது அரசியற் தீர்வு குறித்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றியமையாதது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து அளப்பரிய அர்ப்பணிப்புகளோடு அடுத்த கட்ட இளந்தலைமுறையால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் அடிப்படையான களையவொண்ணா சுயநிர்ணய உரிமை என்பதை முள்ளிவாய்க்கால் வரை சாவு வரினும் இறைமையைச் சரணாகதியடைதலுக்கு உள்ளாக்கமாட்டோம் என்று போரிட்ட வரலாறு ஒப்பாரும் மிக்காருமற்ற ஓர் ஆயுதப் போராட்டத் தலைமுறையால் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது.

• • • 


மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல கூட்டாட்சி என்ற சொற்பதம் ஈழத்தமிழர் நாவில் ஏற்றப்பட்ட கொடுமை எவ்வாறு நிகழ்ந்தது?

சிங்கள தேரவாத பௌத்தப் பேரினவாதம் கூட்டாட்சி என்ற சொல்லைப் பிரிவினைக்கு ஈடானதாகப் பார்த்துவருவது இன்று நேற்றல்ல. அதற்கு நீண்ட நெடிய வரலாற்று மரபே உள்ளது!

ஆகவே, அவர்களை நோக்கிக் கூட்டாட்சிக் கதைகளை அளந்துகொண்டிருப்பதற்குப் பதிலாக நேரடியாகவே விடயத்துக்கு வருவது தான் நல்லது.

அதாவது களையவொண்ணா சுயநிர்ணய உரிமை என்றால் என்பதை அவர்களுக்கு விளக்குவதில் முயற்சியையும் நேரத்தையும் செலவிடுவது கூட்டாட்சி என்ற நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றைப் பற்றிப் பிதற்றுவதை விட மேலானது.

இதை அறியாதவர்கள் அல்ல தேர்தல் தமிழ் அரசியல்வாதிகள்!

இலங்கையின் ஆறாம் சட்டத்திருத்தத்தைப் பார்த்து அதீதமாகப் பயப்படுவோர் ‘மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல கூட்டாட்சி என்று கூப்பாடுகள் செய்கின்றனர். 13 ஆம் சட்டத்திருத்தத்தை சவப்பெட்டியாக எரித்துப் போராட்டம் செய்யத் தயார் நிலையில் இருக்கும் இவர்கள் ஆறாம் சட்டத்திருத்தத்தைக்கண்டு பேயைப் பார்த்தது போல் பயந்து ஒடுங்கிவிடுவர்.

ஜீ.ஜீ. பொன்னம்பலம் எவ்வாறு கட்சி மாறினாரோ அதைப் போல அவரின் பேரன் ஆறாம் சட்டத்திருத்தப் பேயைக் கண்டு அதீதமாக அஞ்சுவதற்கு அவரது குடும்பத்திடம் தென்னிலங்கையில் இருக்கும் சொத்துக்கள் காரணமாக இருந்தால், சொத்துரிமையில் இருந்து அவர் விடுபட்டு அரசியல் செய்யவேண்டும். அவரது குடும்பச் சொத்துச் சிக்கலை தமிழ் மக்களின் சிக்கலாக மாற்றும் அரசியலுக்குள் இழுத்துச் செல்வது தேசத்துக்கு நல்லதல்ல என்பது அவருக்குத் தெளிவாகப் புரியவைக்கப்படவேண்டும்.

இவர்கள் பேசும் கூட்டாட்சி, சுவிற்சர்லாந்தில் இருந்தும் பெல்ஜியத்தில் இருந்தும் தவறான சிட்டைகளில் ஏற்றுமதி செய்யப்படுபவை.

இலங்கைத் தீவின் அரசியலமைப்புக் கட்டுரைப்பைத் திரிபுபடுத்துவதற்காகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள முகவர்கள் ஊடாக, குறிப்பாக மேற்கத்தைய பல்கலைக்கழக, சிந்தனைக்குழாத்து, இலவசச் சட்ட உதவி, சர்வதேசத் தன்னார்வ, தூதரக சலுகை அரசியலுக்கூடாக ஆற்றுப்படுத்தப்படும் ‘கட்டுப்படுத்தல் மூலோபாயத்தின்’ உத்திகளே இந்தச் சிட்டைகள்.

இந்தச் சிட்டைகளுக்குப் பின்னால் சாதாரண கண்களுக்குப் புலப்படாமல் சிங்கப்பூர் தீர்மானங்கள் என்றும் இமாலயப் பிரகடனம் என்று எழுதாமல் எழுதப்பட்டிருக்கும்.

இவற்றை இந்தியாவுக்குள்ளும் ஏற்றுமதி செய்ய தமிழ்நாட்டுக்குள் கூட்டாட்சிக் கோரிக்கையைக் கொண்டு செல்லவேண்டும்.

அதற்கான கூலிவேலைக்கு அவ்வப்போது ஏற்ற முகவர்கள் கிடைப்பது ஒன்றும் புதிதல்ல.

ஆகவே, முகவர்களையும் முகவர்களுக்குப் பின்னாலுள்ள அனைத்துலக முகவர்களையும் நொந்துகொள்வதிலும் பார்க்க, தவறான சிட்டைகள் எவை என்பதை மக்களுக்கு விளக்குவதே கூடுதற் பொருத்தமானது.

களையவொண்ணா சுயநிர்ணய உரிமை எந்தெந்தச் சூழல்களுக்குப் பொருத்தமானது என்று சர்வதேச நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பதை நோக்கும் போது, குறிப்பாக
  1. காலனித்துவ ஆதிக்கம்,
  2. வேற்று ஆக்கிரமிப்பு,
  3. நிறவாத, பேரினவாத ஆட்சிகளின் கடுந்தாக்கம் (இன அழிப்பு)
  4. உள்ளார்ந்த சுயநிர்ணயம் திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்புவரலாறு
என்ற காரணிகள் புலப்படும்.

2009 ஆம் ஆண்டின் பின்னான 16 ஆண்டுகாலத்தின் பின்னரும் மேற்குறித்த நான்கும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவையாக ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை மறுப்பில் தொடருவது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால், ‘வெறும்’ சுயநிர்ணய உரிமை பேசப்படும் சூழல்களாக:
  1. அரசியலமைப்புச் சீர்திருத்தம்
  2. கூட்டாட்சி
  3. ஒப்பீட்டு நியாயத்தன்மை
  4. சர்வதேச வற்புறுத்தல்
போன்ற சூழல்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

எமது சூழலைச் சரியாகத் தகவமைத்துக் காட்டி எமக்கான கட்டுரைப்பை முன்வைக்கத் தெரியாதவர்கள் பலன் எதுவுமற்ற சிட்டைகளைத் தெரிந்துகொண்டே பெற்றுக்கொண்டு, அவற்றைத் தமிழ்நாட்டுக்கும் சில புலம்பெயர் அமைப்புகளுக்கும் அழகாகப் பொதிபண்ணி விற்க முனைகிறார்கள்.

இதற்காக, ஊடகங்களை உருவாக்கவும் கருத்துருவாக்கம் பண்ணவும் பல கோடி ரூபா நிதியை சில மேற்கு நாடுகள் ஒதுக்கி, ஒவ்வொன்றாகப் பணமுடிச்சுக்களை அவிழ்த்து வருகின்றன. நல்லிணக்கப் பொதிமூட்டை முடிந்து இப்போது கூட்டாட்சிப் பொதிமூட்டை அவிழ்க்கப்படுகிறது!

இதிலே முதலாமிடத்தைத் தட்டிச் செல்வது சுவிற்சர்லாந்துச் சிட்டை.

சுவிற்சர்லாந்து இணைப்பாட்சியாக இருந்து கூட்டாட்சியாக எப்போதோ மாறிவிட்டது. பெயரில் மட்டும் இணைப்பாட்சி என்பது உள்ளது. அங்கிருக்கும் எந்த ஒரு மக்களுக்கும் தனித்துவமான சுயநிர்ணய உரிமை இருப்பதாக அது அங்கீகரிக்கவில்லை. இன்றிருக்கும் கூட்டாட்சியில் கன்ரோன்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமை கிடையாது.

இரண்டாமிடத்தைப் பெற்று;கொள்கிறது பெல்ஜிய புளுரிநாச(னல்)ச் (plurinational) சிட்டை. இது ஒற்றையாட்சியாய் இருந்து கூட்டாட்சியாக மாறியது. தாயகக் கோட்பாடு கிடையாது. ஆனால், பன்மைத்துவ மக்களுக்கான அங்கீகாரம் இருக்கிறது. அதனால், பெல்ஜியத்தை ஆராயவேண்டுமாம். அதிலே தான் தீர்வு உள்ளதாம். இதை எழுதவேண்டுமாம். தமிழர்களுக்கு கூட்டாட்சி பற்றி அறிவு போதாது என்பதால் அதைக் கற்பிக்கவேண்டுமாம்.

தாயகக் கோட்பாடு இனிமேற் சாத்தியமில்லை என்று நம்பும் கூலிக்கு மாரடிப்பவர்கள பணமுள்ளவரை பெல்ஜிய மாடலைப் பற்றி எழுதுவார்கள்.

மூன்றாமிடத்திலுள்ள கனடா கொஞ்சம் வித்தியாசமான சிட்டை. ஒரு வகையில் நியாயமான சிட்டையும் கூட.

இது இணைப்பாட்சியாக இருந்து கூட்டாட்சியாக மாறியது. இதை மறந்து போயிருந்த ஒரு மாநிலம் பிரிய முற்பட்டபோது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பிரியும் உரிமை கூட்டாட்சியில் இயல்பாகக் கிடையாது என்றது அந்தத் தீர்ப்பு.

இதற்கென்ற சிறப்புச் சட்டவாக்கத்தை கனடா உருவாக்கிய பின்னரே அந்தப் பொதுவாக்கெடுப்புப் படிமுறை உரிமை உறுதியாக்கப்பட்டது.

அதாவது, கூட்டாட்சி என்பதால் சுயநிர்ணய உரிமை இயல்பாக உறுதிப்படுத்தப்படாது என்பதை விளங்கிக் கொள்ள கனடாச் சிட்டை பயன்படும். ஈழத்தமிழ்க் கூட்டாட்சிக் கூப்பாடிகள் முதலில் கனடாவின் இந்த 2000 ஆம் ஆண்டுச் சட்டவாக்கத்தைப் படிக்கவேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் கனடாவில் நடந்தேறிய சட்டவாக்கம் கனடிய சமுதாயத்தின் முதிர்ச்சியின் பெறுபேறு. அந்த முதிர்ச்சியைக் காணும் தன்மை இலங்கைக்கு இல்லை.

ஒரு காலத்தில் ஆதிக்குடிகள் மீது இன அழிப்புப் புரிந்த கிறீத்தவ மரபில் வந்து பிற்காலத்தில் தாராளவாத மக்களாட்சி அரசியலில் ஈடுபடும் நாடல்ல இலங்கை. தேரவாத பௌத்த முன்னுரிமைவாத மரபில் வந்து குரூரமான இன அழிப்பை தற்காலத்தில் மேற்கொண்ட ஓர் ஒற்றையாட்சி அரசு. இதே வரலாறு மியான்மாரில் நடந்தேறி உலக நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுள்ளது.

ஆகவே, கனடா போன்ற படிமுறைக் கூட்டாட்சிக்கான அடிப்படை இலங்கையில் சாத்தியமாகும் என்ற கற்பனைகளைத் தேவையில்லாமல் வளர்த்துக்கொள்ளக்கூடாது.

பிரித்தானியா எனும் எழுதப்படாத அரசியலமைப்பு ஒற்றையாட்சியோ கனடாவின் கூட்டாட்சிக்குத் தானும் இணையானது என்றும், ஒற்றையாட்சி, கூட்டாட்சி என்ற சிட்டைகளில் எல்லாம் அர்த்தமில்லை, அதிகாரங்களை வரையறுக்கும் அரசியலமைப்பின் உள்ளடக்கத்தில் தான் அர்த்தமுள்ளது என்று; சொல்லுகின்ற விநோதமான சிட்டை. இந்த விநோதமும் இலங்கைக்குப் பொருத்தமற்ற ஏட்டுச்சுரைக்காய்.

இந்தியச் சிட்டை வேறுவிதமானது.

‘அடுக்குக் கேக்’ போல ஓரளவுக்கேனும் அதிகாரங்கள் வரையறுத்துப் பிரிக்கப்பட்டு நடைமுறையில் இன்றிருக்கும் மாநில, மத்திய அதிகாரங்களைக் கூட ஒன்றுக்குள் ஒன்று கலந்து ‘மார்பிள் கேக்’ போன்ற கூட்டாட்சிக் கலவையாக மாற்றிவிட எத்தனித்து ஒற்றையாட்சி போலச் செயற்பட வைக்கும் போக்கில் இந்தியாவின் கூட்டாட்சியை வட இந்தியா நகர்த்திக்கொண்டிருக்கிறது.

இந்தப் போக்குக்குக் ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ என்று ‘நாமம்’ சூட்டப்பட்டுள்ளது. இது இந்தியன் மாடல் கூட்டாட்சி! இதை எதிர்த்து நிற்பது திராவிட மாடல் மாநில ஆட்சி!

இதற்குள் தமிழ்த் தேசியம் எப்படியிருக்கவேண்டும் என்பதை வகுத்துக்கொள்வது தமிழ்நாட்டினரின் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்டது.

இப்படியான இடங்களிற் சென்று ஈழத்தமிழர்களுக்குக் கூட்டாட்சி வேண்டும் என்று கதைப்பது விந்தையானது.

மறைந்துபோன சுந்தரலிங்கம், நவரத்தினம் ஆகியோருடன் செல்வநாயகம் மட்டுமல்ல தம்முயிரை ஈந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களதும் மக்களதும் வரலாற்றை இடறுவதற்கு ஒப்பானது.

பிரபாகரன் பல்கலைக்கழகத்தில் தேறியவர்கள் இனியாவது தேர்தல் அரசியற் கட்சிகளிடமிருந்து ஈழத் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற முன்வரவேண்டும்.


Chronology:

 

Latest 15 Reports
18.12.25 09:30  
மறுக்கமுடியாத சுயநிர்ணய உரிமையைக் களைய முனையும் கூட்டாட்சிக் கோரிக்கை
23.07.25 15:17  
கறுப்பு ஜூலை கற்றுத்தரும் கடும் எச்சரிக்கை!
18.05.25 01:31  
அமெரிக்க வியூகத்துள் இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை
21.09.24 16:12   Photo
JVP always denied Eezham Tamils’ inalienable self-determination: Anthropology scholar
18.09.24 21:30   Photo
Sinhala leftists need careful perusal of Lenin’s definition of Right to Self-Determination
30.08.24 15:27   Photo
Viraj exposed West’s criminalization of Tamil struggle
30.08.24 09:08  
‘பொதுச்சபை’ நகர்வை ‘சிவில் சமூக அமையம்’ தரும் படிப்பினைகளின் கண்கொண்டு நோக்குதல்
20.08.24 17:59   Photo
Viraj teaches Zone of Peace, Peace Process, Crimes Against Peace
18.08.24 21:23   Photo
Viraj Mendis: A beacon of international solidarity and a pillar in the Eelam-Tamil liberation struggle
18.08.24 16:47   Photo
Viraj in Tamil Radical Politics
18.08.24 11:27  
மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் தொலைத்த தேர்தல் அரசியலைத் திருத்த இயலுமா?
17.08.24 12:15   Photo
விராஜ் மெண்டிஸ் விட்டுச் செல்லும் நிரப்பவியலா இடைவெளி
04.02.24 15:40   Photo
சியோனிசம் காணும் தோல்வி ஈழத்தமிழருக்குப் பலன் தரவல்ல படிமை மாற்றத்தின் அறிகுறி
24.04.22 05:44  
தீவின் நெருக்கடிச் சூழலில் ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கவேண்டிய நிலைப்பாடுகள்
09.04.22 14:44   Photo
குறிதவறும் ஈழத்தமிழர் தலைமைகளுக்கு வரலாறு தருகின்ற எச்சரிக்கை
 
Find this article at:
http://www.tamilnet.com/art.html?catid=25&artid=39998