தமிழ்நாடு, தமிழீழத்துக்காக மட்டுமல்ல, தனக்காகவும் செய்யவேண்டியது
[TamilNet, Tuesday, 13 January 2026, 02:08 GMT]
இந்தியாவின் பதினோராவது பெரிய பரப்பளவுடைய மாநிலமான தமிழ்நாட்டின் இறைமைப் பரப்பு ஏறத்தாழ 130 ஆயிரம் சதுர கிலோமீற்றர்கள். இலங்கை ஒற்றையாட்சி அரசின் இறைமைக்குள்ளிருக்கும் தீவின் நிலப்பரப்பு தற்போதுவரை 65 ஆயிரம் சதுர கிலோமீற்றர்கள் மட்டுமே. ஆனால், இன அழிப்புப் போரின் உச்சமான 2009ஆம் ஆண்டு இந்து மாகடலின் பெரும்பாகத்தைத் தனது இறைமைக்குள் உள்வாங்கி, ஒட்டுமொத்தமாக 1.3 மில்லியன் சதுர கிலோமீற்றராக அதைத் தமிழ்நாட்டின் இறைமைப் பரப்பை விடப் பத்து மடங்காக அதிகரிக்கச் செய்யும் விண்ணப்பத்தை நார்வே உள்ளிட்ட மேற்கு நாடுகளின் துணையோடு சிங்கள அரசு செய்திருந்தது. அதன் முடிவை எதிர்பார்த்து இன்றும் ஆவலோடு அது காத்திருக்கிறது.
ஒரு புறம் நாடே வங்குரோத்து நிலைக்குச் சென்றிருந்தாலும், தனது முயற்சியில் சற்றும் மனந்தளராத ஓர் அரசாக இலங்கை தனது புவிசார் அரசியலை நகர்த்தி வருகிறது.
மறுபுறம், 2009ஆம் ஆண்டுக்குப் பின் மறைந்த தமிழகத் தலைவர்களான செல்வி ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் காலத்துக்கும் தற்போதைய காலத்துக்கும் இடையே, தமிழ்நாடு மாநிலத்தின் இந்திய, தென்னாசிய, சர்வதேச முக்கியத்துவமும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
புவிசார் அரசியலை மையப்படுத்தி இயங்குகின்ற போக்குகளிலும் தமிழ்நாட்டுக்குப் பெரும் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.
இந்திய ஒன்றியத்தின் உள்நாட்டுக்குள்ளான வளர்ச்சியில் பெரும் பொருண்மிய வளர்ச்சியைக் கண்டுவரும் மாநிலமாகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சி கூர்ப்படைந்துள்ளது.
அதேவேளை, தமிழ் நாகரிகத்தின் தொன்மை தொடர்பாக, கீழடி போன்ற ஆய்வுகளாயினும் சரி, மனித நாகரித்துவக் கூர்ப்பில் இரும்புத் தொழிநுட்பத்தில் உலகத்துக்கே முன்னோடியாக அந்த மண் இருந்துள்ளது என்பதை நிறுவுவதிலும் சரி தமிழ்நாட்டின் தொல்லியல் வீரியம் பெற்றுள்ளது.
இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டுக்கு ஒரு சில கடல் மைல்கள் தொலைவிலுள்ள அதையொத்த மனித, தமிழ் நாகரிகத்தின் சமாந்தரமான தொட்டில் தான் ஈழம்.
தமிழ்நாடு போலன்றி, புவிசார் அரசியல் தொட்டு தொல்லியல் வரை தொடர்ச்சியாகத் தனக்கு எதிராகச் செயற்படுவதால் எழுந்து நிற்க இயலாது சிங்கள பேரினவாதத்தின் நீட்சியான இன அழிப்புக்குத் தமிழீழம் தொடர்ந்து முகம் கொடுத்துவருகிறது.
இந்தவகையில் தமிழ் நாகரிகம் தொடர்பான பெரும் பொறுப்பு தமிழ்நாட்டு அரசுக்கு உள்ளது.
ஆனால், ஈழத்தமிழர் இன அழிப்பைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக மட்டுமல்ல, தனது தென்புலத்தில் நடைபெறும் கடலாதிக்கப் புவிசார் அரசியலின் கனதியைக் கூட, கச்சற்தீவு தொடர்பான விவாதங்களுக்கு அப்பால், தமிழ்நாடு சரியாகப் புரிந்துவைத்துள்ளதா என்பது தொக்கு நிற்கும் பெரிய கேள்வியாக உள்ளது.
* * * இந்திய இராணுவத்தோடு விடுதலைப் புலிகள் போர் புரியும் நிலையேற்பட்டிருந்த காலத்தில் புறநானூற்றுத் தாயை ஈழத்தில் தான் காணமுடியும் என்றார் கலைஞர் கருணாநிதி.
காலப்போக்கில், புறநானூற்று வீரத்தை விஞ்சுமளவு வீரம் பொதிந்த மண்ணாகத் தமிழீழம் தன்னை நிறுவியது.
போர்புரிந்தவாறே மெய்நடப்பு அரசொன்றை முன்மாதிரியாக உருவாக்கிக் கொண்டது. வீரியத்தோடு கடற்புலிகளையும் கண்டது. கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தடுத்து நிறுத்தியது.
இந்த வளர்ச்சிக்காகத் தேர்தல் அரசியலுக்கு அப்பால் தமிழ்நாட்டில் தொடர்ந்து உழைத்து உருகியோர் பலர்.
இருப்பினும், இன அழிப்புக்கு உடந்தையாக இருந்த இந்திய அரசைத் தடுத்து நிறுத்த இயலாத சூழலால், மீண்டும் ஈழத்தமிழருக்கும் தமிழகத்துக்கும் இடையே ஒருவித துன்பியல் இடைவெளி ஏற்பட்டது.
இந்த இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் தமிழ்நாடு 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் செய்யவேண்டியதை முறையாகச் செய்திருக்கிறதா என்ற கேள்வியை எவரும் தமக்குத் தாமே கேட்டு இயங்கியிருப்பதாகத் தெரியவில்லை.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தாம் என்ன செய்தோம் என்பதைப் பேசி முரண்படுவதில் மட்டுமே உரியவர்கள் தமது ஆற்றலைச் செலவிட்டுள்ளனர்.
தலைமையற்றுச் சிதைவுக்குள்ளான ஈழத்தமிழர்களை ஓரணிப்படுத்தியிருக்கவேண்டிய பொறுப்புக்கூட தமிழ்நாட்டுக்கு இருந்தது. அதைச் செய்ய தமிழ்நாட்டால் இயலவில்லை.
இருந்தபோதும், மக்கள் இயக்கங்களின் தொடர் செயற்பாடுகளின் விளைவாக, அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு, தமிழ்நாட்டின் சட்டமன்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதிலே மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது.
இது தொடர்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் டெசோ இயக்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளும் தவறாது குறிப்பெடுக்கப்படவேண்டியவை.
இருந்தபோதும், தமிழ்நாட்டின் அரசியலில் ஏற்கனவே ஏற்பட்டிருந்ததும், திட்டமிட்டே தமிழ் நாகரிகத்தின் எதிரிகளால் ஏற்படுத்தப்பட்டிருந்ததுமான மாற்றாந்தாய் மனநிலை மேலாதிக்கம் செலுத்தும் சூழல் நீடித்தது.
இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவரும் ஈழத் தமிழர்களுக்கென்று, சர்வதேச நீதிக்காக உரத்துக் குரலெழுப்ப, இறைமை கொண்ட ஓர் அரசு இதுவரை உலகிற் கிடையாது.
அவ்வாறு இருந்திருந்தால் எப்போதோ உலக நீதிமன்றில் இன அழிப்புத் தொடர்பான இலங்கையின் அரசின் பொறுப்பு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும்.
இந்தியா அதைச் செய்ததில்லை. புவிசார் அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டாற் கூட இனியேனும் இந்தியா அதைச் செய்ய முன்வருமா என்பதும் கேள்விக்குறியே.
கணியன் பூங்குன்றனாரைப் பற்றி வேண்டுமானால் இந்தியப் பிரதமர் ஐ.நா.வில் பேசியது போல் ஏதாவது பேசிக் காட்டுவார். சீனத் தலைவரைச் சந்திப்பதற்குத் தமிழ்நாட்டின் புவிசார் முக்கியத்துவத்தைப் பயன்படுத்துவார்.
மௌரியப் பேரரசு காலத்துப் பழங்காலப் பார்வையில் தமிழ் நாகரித்தை வேறானதாகப் பிரித்தும், சிங்கள நாகரித்தைத் தனது இரட்டைச் சகோதரத்துவமாக நெருக்கமாகவும் அணுகும் போக்கு வட இந்தியாவை விட்டு அகலவில்லை.
அதிலே பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க இயலாது.
அவ்வப்போது இலங்கை அரசு வேறு சக்திகளோடு நெருங்க ஆரம்பித்தால் அத்தருணங்களில் மாத்திரம் ஈழத்தமிழர் அரசியல் தீர்வு பற்றி சில நெருக்கடிகளை இலங்கை அரசுக்குக் கொடுப்பதற்காக இந்தியா அளந்து பயன்படுத்திவிட்டுப் பின்னர் கைவிடும் சூழல் தான் நீடிக்கும்.
இந்தச் சூழலிற் தான் தமிழ்நாடு தனது புவிசார் அரசியற் பலத்தை சரிவர உணர்ந்திருக்கிறதா என்ற கேள்வி மேலும் வலுக்கிறது.
இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைத் திசைதிருப்பும் ஆற்றல் இருந்தும் அதைப் பயன்படுத்த இயலாத நிலையில் நீண்டகாலம் கட்டுண்டு வளர்ந்த யானை போலத் தனது பலத்தை அறியாததாகத் தமிழ்நாடு காணப்படுகிறது.
இந்த நிலை மாறவேண்டும்.
* * * இன அழிப்புக்குள்ளான ஒரு சமூகமாக ஈழத்தமிழர்கள் உலகெங்கும் எவ்வளவுதான் பரந்திருந்தாலும் அவர்களுக்கான நீதியை நிலை நாட்டுவதில் தமிழர் நாகரிகத்தின் பருமனால் பெரிதான தமிழ்நாட்டுக்குப் பாரிய பங்குண்டு.
கடந்த காலத்துக் கசப்பான வரலாற்றுத் துன்பியல் அனுபவங்களை மனதில் வைத்துக் கொண்டு, நன்றியற்றவர்களாக ஏதோ ஈழத்தமிழர்கள் நடந்துகொள்வதான பதிற் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டிருக்காது, கட்சிகளும் அவற்றின் ஆளுமைகளும் இனியாதல் தமது பார்வையைச் செழுமைப்படுத்த முன்வரவேண்டும்.
ஏற்பட்டிருந்த சரிவு எந்த அளவு ஆழமான நிலைக்குச் சென்றிருந்தது என்பதற்குக் கண்முன்னே ஓர் உதாரணமாக, 'தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களா, இல்லை தந்தை பெரியாரா' என்றவாறு இடைவெளியைக் கூட்டும் ஓர் அவல நிலை தமிழ்நாட்டில் பெரும் புயலாக ஓர் ஆண்டுக்கு முன்னர் தான் வீசியிருந்தது.
தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு அது உள் அரசியலாக இருந்தது.
ஈழத்தமிழர் தேசத்துக்கோ 'பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது' என்ற நிலை.
இந்த நிலையை ஈழத்தமிழர்களிற் பலர் உணர்ந்திருந்த போதும் அதைத் தடுத்தாட்கொள்ள இயங்கும் துணிவற்ற இழிநிலையில், உற்ற தலைமையற்றவர்களாக அவர்கள் காணப்பட்டனர்.
இன அழிப்பில் கொடூரமான வடிவம் எது தெரியுமா?
தனது இன அழிப்பைத் தானே புரியும் இழிநிலைக்கு இன அழிப்புக்குள்ளாகியுள்ள ஒரு மக்கள் இழுத்துச் செல்லப்படுவது தான்!
அந்த முட்டுச் சந்தியில் தான் 2025 ஜனவரியில் ஈழத்தமிழர் ஒரு சமூகமாக நின்றுகொண்டிருந்தனர்.
பலர் வாய்மூடி மௌனிகளாயினர்.
சமூக வலைத்தளங்களில் நெருப்புப் பற்றியெரிந்தது.
இருப்பினும், கொடும் வார்த்தைகளால் தமக்குத் தாமே இன அழிப்பைப் புரிவோர் எழுதும் சுடுசொற்களுக்கு அஞ்சாதவர்களாக விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய மிகச் சிலர் ஈழத்தமிழர் மத்தியில் பயமற்றவர்களாகத் துணிவோடு இயங்கினர். தமிழ் நாட்டில் பலர் இயங்கினர்.
ஓர் ஆண்டின் பின்னர், இன்று தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியப் பிரதமருக்குத் தூதுக்கடிதம் எழுதும் நிலை மீண்டும் ஆரம்பித்துள்ளதையிட்டு இவர்கள் ஓரளவுக்கு மன ஆறுதல் காணலாம்.
ஆனால், முழுத் திருப்தி காணும் நிலைக்கு மேலும் அறிவியற் பணியும், கருத்தியற் பணியும், அதற்கேற்ற செயற்பாடும் அதிகம் தேவைப்படுகிறது.
இந்திய மத்திய அரசின் வெளியுறவுத் தேவைக்கோ, அல்லது ஏதேனும் வெளிச்சக்திகளின் தேவைக்கோ அப்பால், ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்றும் திறன் தமிழ்நாட்டுக்கு மேலும் தேவைப்படுகிறது, ஈழத் தமிழர்களுக்கும் தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டின் புவிசார் அறிவும் இந்திய வெளியுறவுக் கொள்கை மீதான தாக்கமும் பொங்கல் காலத்து அயலவர் மாநாடுகளுக்கும் தமிழ்க்கல்வி முன்னெடுப்புகளுக்கும் சினிமாத் துறைக்கும் அப்பால் செல்லவேண்டிய தேவை அது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள தூதுக் கடிதத்தில் ‘ஏக்கிய ராஜ்ஜிய’ ஒற்றையாட்சி நகர்வின் ஆபத்தைச் சுட்டிக்காட்டியுள்ளமை நிறைவானது.
அதேவேளை, அந்தத் தூதுக்கடிதத்தில் குறைகளும் உள்ளன.
அந்தக் குறைகளை நீக்கி மேலும் காத்திரமாக, தமிழ்நாடு முன்னெடுக்கவேண்டிய பணிகளாக ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு நீதிக்கும் தேசிய விடுதலைக்கும் எவற்றைச் செய்தாகவேண்டும் என்பதை அடுத்த கட்டுரையில் ஓரளவு விரிவாக நோக்குவோம்.
Related Articles:13.12.19
Colombo wants ‘Sea of Lanka’ geopolitics to accompany Indian.. 24.11.18
Colombo awaits UN approval to seize 25-fold larger extent of..