ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கையின் தவறுகள்: சுருக்கமான மதிப்பீடு

[TamilNet, Tuesday, 08 September 2026, 07:31 GMT]
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் மனித உரிமைப் பேரவையின் அறுபத்துமூன்றாவது அமர்வுக்குச் சமர்ப்பித்துள்ள A/HRC/63/18 அறிக்கையில், இன அழிப்பு என்னும் சொல்லோ அதன் நோக்கம் பற்றிய பரிசீலனையோ ஒரு முறை கூட இடம்பெறவில்லை; செம்மணியில் நானூற்று எழுபத்தேழுக்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்ட நிலையிலும், சான்றுகளைப் பேணும் அதிகாரம் குற்றம்சாட்டப்பட்ட அரசிடமே விடப்பட்டுள்ளது. உள்நாட்டு நீதிமுறைமை ஒன்றைப் பரிசீலிக்குமாறு கோரும் 62(i) பரிந்துரையும், 2002 க்கு முந்திய குற்றங்களை எட்டவே முடியாத 62(k) பரிந்துரையும், ஏற்கெனவே தோல்வியுற்ற வழியையே மீண்டும் முன்வைக்கின்றன. 46/1, 51/1 தீர்மானங்களை நிராகரித்து, பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு அணுக்கம் மறுத்து, அலுவலகத்தின் சொந்த அறிக்கையையே ஒதுக்கிய ஓர் அரசிடமிருந்து மீண்டும் உறுதிமொழிகள் கோரப்படுகின்றன. அறிக்கை பொய்யானதல்ல; ஆனால் அது தன் ஆதாரத்தாலேயே தகுதியிழக்கச் செய்யப்பட்ட ஒரு தரப்பை நோக்கி எழுதப்பட்டுள்ளது.



இன அழிப்பு என்னும் சொல் (வழமைபோல) அறிக்கையில் இல்லை

A/HRC/63/18 இல் இன அழிப்பு, இன அழிப்பு நோக்கம் (intent), 1948 இனப்படுகொலையைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான உடன்படிக்கை ஆகிய சொற்கள் ஒரு முறை கூட இடம்பெறவில்லை.

சர்வதேச நீதிமன்றமும் (ICJ) அதன் ஒன்பதாம் உறுப்புரையும் குறிப்பிடப்படவில்லை. (இலங்கை 1950 ஒக்டோபர் 12 அன்று ஒன்பதாம் உறுப்புரைக்கு எவ்வித ஒதுக்கீடும் இன்றி உடன்படிக்கையில் இணைந்துள்ளது.)

மியன்மார் தொடர்பான அலுவலக அறிக்கை ஒன்றில் சர்வதேச நீதிமன்றம் இடம்பெறாமல் இருக்காது.

இங்கு நிலவும் மௌனம் ஒரு தவறுதலன்று, தெரிந்து மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச அரசியற் தெரிவு.

செம்மணி: சான்றுகளைப் பேணல் குற்றம்சாட்டப்பட்ட அரசிடமே விடப்படுகிறது

நானூற்று எழுபத்தேழுக்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள், அவற்றுள் சிறார்களுடையவையும் அடங்க, தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் பரிந்துரை என்னவெனில், சர்வதேச தடயவியல் உதவியை நாடுமாறு அரசைக் கேட்பது தான்!

தனக்கெதிரான சான்றுகள் சர்வதேச பரிசோதனைக்கு உட்படுமா என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் குற்றம்சாட்டப்பட்ட அரசிடமே எஞ்சுவதா?

தூதரகப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது அவதானிக்கும் அனுமதி மட்டுமே.

அவதானிப்பு என்பது தடயங்களைச் சர்வதேச தரத்தில் பேணும் காவலன்று, சான்றுகளைத் தொடர்ச்சியாகப் பேணுதலும் அன்று!

இதற்குரிய கருவி ஏற்கெனவே உள்ளது. மனிதப் புதைகுழிகளைப் பாதுகாத்து விசாரணை நடத்துவதற்கான சர்வதேச நெறியான போர்ண்மோ நெறிமுறை, தமிழ்த் தரப்புகளால் 2025 இல் வெளிப்படையாகக் கோரப்பட்டது. அறிக்கை அதனைக் குறிப்பிடவே இல்லை.

பதிலாக மின்னசோட்டா நெறிமுறையை மட்டும் சுட்டுகிறது. அது மரண விசாரணைக்கானது. புதைகுழிப் பாதுகாப்புக்கும் சான்றுக் காவலுக்குமானது அன்று.

ஏழு மாத இடைநிறுத்தத்திற்குக் காரணமாக மழையும் நிதிப் பற்றாக்குறையும் மட்டுமே கூறப்படுகிறது.

தடையோ, கால அட்டவணையை அரசு கட்டுப்படுத்துவதோ பெயரிடப்படவில்லை.

1998 இல் படைத்துறை உத்தரவின்பேரில் முந்நூறு முதல் நானூறு உடல்கள் புதைக்கப்பட்டதாகவும் மேலும் பதினாறு புதைவிடங்கள் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட வாக்குமூலம் அறிக்கையில் இல்லை. அவ்வரலாறு நீக்கப்படும்போது, நோக்கத்தை நிறுவும் காலத்தொடர் வடிவமும் நீங்குகிறது.

62(i): தோல்வியுற்ற வழிமுறையின் மறுசுழற்சி

உள்நாட்டு விசேட நீதிமுறைமை ஒன்றை உருவாக்குவதைப் பரிசீலிக்குமாறு அரசைக் கேட்கிறது அறிக்கை.

2015 இன் 30/1 தீர்மானம் சர்வதேச நீதிபதிகளுடன்கூடிய கலப்பு நீதிமன்றத்திற்கு வகைசெய்தது. இலங்கை அதற்கு இணை அனுசரணை வழங்கிப் பின்னர் அதைக் கைவிட்டது தெரிந்த விடயம்.

அத்தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் அதனினும் தளர்ந்த வடிவம் ஒன்றைப் பரிந்துரைப்பது பரிந்துரையன்று. சிக்கலைத் தொடர்ந்து நீட்டிப்பதே அன்றி வேறொன்றுமில்லை.

62(k): 2002 க்கு முந்திய குற்றங்களை எட்டாத பரிந்துரை

உரோம் சட்டகத்தை ஏற்று இணைவது எதிர்காலத்திற்கு மட்டுமே வழிவகுக்கும். செம்மணி, தொண்ணூறுகளின் வலிந்த காணாமலாக்கல்கள், படுகொலைகள், இனவெறித் தாக்குதல்கள் அனைத்தும் 2002 ஜூலை 1 க்கு முந்தியவை. அச்சட்ட வெற்றிடம் சுட்டப்படவில்லை; சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் பற்றிய குறிப்பே இல்லை.

கட்டமைப்பின் தலைகீழ் நிலை

சர்வதேச நீதி முதன்மையாகவும் (primary) உள்நாட்டு வழிமுறை நிரப்பியாகவும் (complementary) இருத்தல் வேண்டும். ஆனால், வழமைபோலவே இம்முறையும் அறிக்கை இதனை நேர்மாறாக வைத்திருக்கிறது. 46/1, 51/1 தீர்மானங்களை நிராகரிக்கும், பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு (OSLAP) நேரடிப் பிரசன்னத்தை மறுதலிக்கும், அலுவலகத்தின் ஏற்கனவே வெளிியிட்ட பாலியல் வன்முறை (CRSV) அறிக்கையையே நிராகரித்த ஓர் அரசிடமிருந்து மீண்டும் உறுதிமொழிகள் கோரப்படுகின்றன.

இத்துணைக் காலம் நீடித்த ஒத்துழைப்பு மறுப்பை நிரப்பப்படவேண்டிய இடைவெளியாக இலங்கை அரசு கருதும் வண்ணம் அழுத்தம் தர அது முறைப்படி கையாளப்படவேண்டும். அதை இவ்வறிக்கை செய்யத் துணியவில்லை.

ஆற்றல் பற்றாக்குறை என்னும் கூற்று மறுக்கப்படுகிறது

உயிர்த்த ஞாயிறு வழக்கில் இதே அரசு அறிக்கைக் காலப்பகுதிக்குள் அரச உளவுத்துறைப் பணிப்பாளரைக் கைதுசெய்தது, முன்னாள் ஜனாதிபதிக்குப் பயணத்தடை விதித்தது, முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் மரண தண்டனை வழங்கியது. ஆனால், ஈழத் தமிழராகப் பாதிக்கப்பட்டோருக்கு பதினேழு ஆண்டுகளில் ஒன்றுமில்லை.

விடுபட்டவை

கட்டமைப்பு இன அழிப்புக் கருவிகள் (தொல்பொருள், வனவிலங்கு, வனப் பாதுகாப்புத் திணைக்களங்கள், மகாவலி அதிகாரசபை) தொடர்பாக எந்தப் பரிந்துரையும் இல்லை. திருகோணமலைச் சிலை, கல்லுமலைப் பிள்ளையார் ஆலயத்துள் விகாரை, திருக்கோணேஸ்வரத்தில் ரேடார் ஆகியன மதப் பதற்றம் என்னும் இருதரப்புச் சட்டகத்துள் அடக்கப்படுகின்றன.

சுயநிர்ணய உரிமை பதின்மூன்றாவது திருத்தத்தின் அதிகாரப் பரவலாக்கமாகச் சுருக்கப்படுகிறது.

அரசியல் வேணவாவை அமைதிவழியில் முன்வைப்பதைக் கூடக் குற்றமாக்கும் ஆறாவது அரசியலமைப்புத் திருத்தம், மக்களாட்சி வெளியைத் தொடர்ந்து அடக்கிவருகிறது. அது பற்றி அறிக்கையில் ஒரு குறிப்பும் இல்லை.

ஒப்புநோக்கல்

தமிழ் தரப்புகள் 2025 ஆம் ஆண்டில் முன்வைத்த கோரிக்கை நிலைப்பாடு tamildiaspora.org என்ற இணையத்தளத்தில் தரவுப்படுத்தப்பட்டுள்ளது. அதை ஐ.நா. அறிக்கையோடு ஒப்புநோக்கினால் எதிர்பார்ப்புக்கும் நடைமுறைக்கும் இடையிலான பெரு வெளி தெளிவாகப் புலப்படும்.

அறிக்கை தவறானது என்பதனால் அது தோல்வியுறவில்லை. கண்காணிப்பு, பழிவாங்கல், காவற்துறை மரணங்கள், மலையகத் தமிழரின் வீட்டுவசதி நெருக்கடி குறித்து அது பல பயனுடைய விடயங்களைத் தொட்டுள்ளது.

ஆனால், அறிக்கையின் பரிந்துரைகள், தான் காட்டும் ஆதாரப்படியே செயற்படமாட்டாத ஒரு தரப்பை நோக்கி மிகவும் மட்டுப்படுத்திய வகையில் வைக்கப்பட்டுள்ளதால் அது தனது மூலக் குறிக்கோளில் தோல்வியுறுகிறது.

அறிக்கையின் சொந்த ஆதாரமே பெறுநரைத் தகுதியிழக்கச் செய்யும்போது, முடிவு கோரிக்கையை மீளுரைப்பதன்று. பணியை மாற்றியொப்படைப்பதே என்ற சட்ட மொழிப் புரிதலோடு இந்த அறிக்கை வாசிக்கப்படவேண்டும்.

தொடர்ந்தும் சர்வதேச மனித உரிமை இணக்க அரசியல் ஒன்று தான் அட்டவணை 2 இற்குள் இந்த நிகழ்ச்சிநிரல் இருக்கும் வரை தொடரப்படும்.

ஆகவே, மனித உரிமைப் பேரவையின் அட்டவணை நிரல் 4 பற்றிய விழிப்புணர்வு, இன அழிப்பு நோக்கம் பற்றிய ஆணையுடைய சர்வதேச வழிமுறைக்கான, செம்மணியை உடனடியாகச் சர்வதேசச் சுயாதீனக் காவலின்கீழ் கொணர்வதற்கான கருத்தியல் ஆகியவை தொடர்பில் தரமான எதிர்வினையைத் தமிழ்த் தரப்புகள் தக்கவகையில் ஆற்றுமா என்பது எதிர்வரும் நாட்களில் தமிழ்த் தரப்புகள் என்ன செய்யப்போகின்றன என்பதற்கான அமிலப் பரிசோதனையாக அமைகிறது.

 

Latest 15 Reports
08.09.26 07:31   Photo
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கையின் தவறுகள்: சுருக்கமான மதிப்பீடு
18.05.26 12:19   Photo
18 May is not for repackaging surrender
14.05.26 14:14   Photo
Vaddukkoaddai Resolution at fifty: From commemoration to actionable sovereignty
06.05.26 22:19  
Colombo re-emerges as strategic U.S. platform amid Persian Gulf crisis
24.04.26 16:12   Photo
தமிழிலக்கியத்தில் சிவராமின் (தராகி) ஆளுமையும் தேடலும்
05.03.26 18:16  
Multipolar rivalries elevate Indian Ocean geopolitics
19.01.26 14:44   Photo
ITAK, DTNA and TNPF: Need for recalibration without capitulation
13.01.26 11:17   Photo
பொதுவாக்கெடுப்பை, இன அழிப்பு நீதியைக் காற்றில் பறக்கவிட்ட தமிழக முதல்வர்
13.01.26 02:08  
தமிழ்நாடு, தமிழீழத்துக்காக மட்டுமல்ல, தனக்காகவும் செய்யவேண்டியது
11.01.26 15:02   Photo
Declaring and disabling: TNPF neutralises Tamil sovereignty, self-determination & referendum
03.01.26 14:10   Photo
TNPF deploys ‘Federalism’ to dislodge Tamil Self-Determination and the Referendum call
18.12.25 09:30  
மறுக்கமுடியாத சுயநிர்ணய உரிமையைக் களைய முனையும் கூட்டாட்சிக் கோரிக்கை
23.07.25 15:17  
கறுப்பு ஜூலை கற்றுத்தரும் கடும் எச்சரிக்கை!
18.05.25 01:31  
அமெரிக்க வியூகத்துள் இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை
21.09.24 16:12   Photo
JVP always denied Eezham Tamils’ inalienable self-determination: Anthropology scholar
 
Find this article at:
http://www.tamilnet.com/art.html?catid=25&artid=40009