5 ஆம் பதிப்பு

ஈழத்தமிழர் தேசத்தின் தலைமைத்துவம் தேர்தல் அரசியற் கட்சிகளுக்கு அப்பாலானது

[TamilNet, Friday, 21 January 2022, 07:24 GMT]
இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அரசான சிறீலங்கா எனப்படும் இலங்கையானது, அரசுகளுக்கான உலக ஒழுங்கு தனக்குச் சாதகமாயிருக்கும் போக்கையும், புவிசார் சமனமாக்கல் (சமநிலை பேணல் / balancing act) ஆட்டத்துக்கு ஏதுவாகத் தனக்கமைந்திருக்கும் கேந்திர முக்கியத்துவத்தையும் ஒருசேர இணைத்துப் பயன்படுத்தும் வாய்ப்பை ஓர் ஆளும் அரச தரப்பாகப் பெற்றிருக்கிறது. இனவழிப்புப் போரை நடாத்தியதுபோலப் பொருளாதார நெருக்கடியையும் அரசுகளுக்கான உலக ஒழுங்கையும் கேந்திரச் சமனமாக்கல் ஆட்டத்தையும் பயன்படுத்தி மீண்டும் எதிர்கொள்ளலாம் என்று அது முனைகிறது. ஆனால், தனக்கு ஆதரவாக உலக ஒழுங்கில் ஓர் அரசையும் கொண்டிராத ஈழத்தமிழர் தேசமோ பின்முள்ளிவாய்க்காற் காலத்தில், தனது மெய்நடப்பு அரசுக்கான நாடுகடந்த மாற்றீடும் சரியாக அமையாத நிலையில், ஒரு தரப்பாக இல்லாது, பற்பல பகடைக்காய்களாகப் பிளக்கப்பட்டும், தாமாகப் பிளவுற்றும், தீவின் ஆட்சித் தரப்பாலும் வெளிச் சக்திகளாலும், தேவைக்கேற்ப இணைத்தும், வேண்டியபோது தனித்தனியாகவும் ஆட்டுவிக்கப்படுகிறது.

இதைப் போலவே, ஈழத்தமிழர் கருத்துருவாக்கிகளிற் பலரும் சோரம் போயுள்ளனர், அல்லது அறிதிறன் அதிர்ச்சிக்கு உள்ளாகி (intellectual trauma) நிலை தடுமாறியுள்ளனர். இவ்விரண்டும் கலந்த நிலைக்குள்ளும் சிலர் ஆட்பட்டிருக்கக்கூடும். இவர்களின் பிதற்றல்களை ஆழமாக ஆராயப் புறப்பட்டால் ஈற்றில் நாமும் அதே நோய்க்குப் பலியாக நேரிடும்.

ஈழத்தமிழரின் தலைமை ஒரு கூட்டுப்பொறிமுறையூடாக உருவாகலாம், உருவாக்கப்படலாம். அதைச் செதுக்கிக்கொள்வதில் பூச்சியநிலையில் இருந்தேனும் எந்தவிதத்திலும் கட்டற்றுத் தனித்தியங்கும் (independent) புள்ளியிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.

வெறுமனே கருத்துகளை எழுதிச் சிந்திக்கொண்டிருந்தும், புலித்தோல் போர்த்த பசுக்களுக்குப் பட்டறை நடாத்திக் கொண்டிருந்தும், கற்பனைகளிற் சஞ்சரிப்பதில் பலன் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

சிந்தனையும், செயற்பாடும் கோட்பாட்டுரீதியாக ஒன்றித்திருக்கவேண்டும்.

தலைமைக்குரிய கோட்பாடு ஏற்கனவே தன்னிகரற்ற ஒரு தலைமையால் உருவாக்கப்பட்டுவிட்டது. பின்முள்ளிவாய்க்காற் சூழலுக்கேற்ப அதற்கான பொறிமுறை முறையாகச் செதுக்கப்படுவதே மீதமிருக்கிறது.

செயற்பாட்டுத் தளத்தில் இதுவரை இருந்த எவராலும் அதைச் சாதிக்கமுடியவில்லை. இதற்குக் காரணம் 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தாங்களே தலைமை, தாங்களே ஒருங்கிணைப்பாளர் என்று நினைத்த செயற்பாட்டாளர்கள் பொறுப்புக்கூறல் இல்லாது இயங்கியமையே அன்றி வேறொன்றுமில்லை.

ஈழத்தமிழர் தேசத்தின் பொறுப்புக்கூறலுடனான தலைமைக்குரியவர்களாகத் தற்போது தாயகத்துத் தேர்தல் அரசியலாரும், அவர்களது கட்சிகளும், அவற்றின் கூட்டுகளும் வெளிப்பார்வைக்குத் தென்படக்கூடும். ஆனால், எது நிஜம், எது மாயை என்பது மிக விரைவில் வெளிப்பார்வைக்குரிய கண்களுக்கு உணர்த்தப்படவேண்டும்.

தேர்தல் அரசியலில் சம்பந்தன்-சுமந்திரனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் வேறுபாடிருப்பதாகக் கூறிக்கொள்வார்கள். அவை சிறிய சிறிய வேறுபாடுகளே. தேர்தற் போட்டிக்குத் தேவையானவை மட்டுமே. ஈழத்தமிழர் தேசத்திற்கான அடுத்த கட்ட நகர்வுக்கு அவை அனைத்தும் இசைவுடையவையாக (compatible) இல்லாது போய்விட்டன.

Oath-taking form under SL Constitution's Article 157A and Article 161(d) (iii)
Oath-taking form under SL Constitution's Article 157A and Article 161(d) (iii). படத்தில் அழுத்திப் பெரிதாக்கி, மும்மொழிகளிலும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டிருக்கும் உறுதிமொழியைத் (சத்தியப்பிரமாணத்தை) தெளிவாக வாசிக்கலாம்
அவர்கள் அனைவரும் ஈழத்தமிழர் தேசத்தின் மக்களாணை பெற்ற அரசியல் வேணவாவுக்கு எதிராக உறுதிமொழி மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் தேர்தல் அரசியலார் என்பதையும் இங்கு நினைவிற்கொள்ளவேண்டும். சிறிலங்கா அரசின் அரசியலமைப்புக்கு விசுவாசமாகவும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிராகவும் இருப்போம் என்று, 157 ஆ (7) ஆம் உறுப்புரைக்கும் 161 (ஈ) (iii) ஆம் உறுப்புரைக்கும் கீழ், ‘பயபக்தியுடன்’ உறுதிமொழியெடுக்கவேண்டிய நிலையில் உள்ள அரசியலாரே அவர்கள் அனைவரும்.

அவர்களுக்குள் நல்லவர்கள், வல்லவர்கள், கெட்டவர்கள் எனச் சில வகையினர் இருக்கலாமே அன்றி, அவர்களில் எவரும் தலைமைக்குரிய ஈழத்தமிழ்த் தேசியப் புனிதர்கள் அல்லர். அவர்களை விடவும் திறமைசாலியாக இருந்து, இறுதியில் அவர்களைப் போலவே உறுதிமொழியெடுத்தவர் தான் அமிர்தலிங்கம் என்பதையும் இங்கு மறந்துவிடல் ஆகாது.

அந்த அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவர்களே. அதிலே ஏதும் ஐயமிருப்பின் அவர்கள் எடுத்துள்ள உறுதிமொழியை இத்தருணத்தில் ஒருமுறை வாசித்து அசைபோட்டுக்கொள்வது பொருத்தமானது.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் தாயகத்தில் இருக்கும் கருத்துருவாக்கிகள் உருவாக்கிய சிக்கலை, பெயர் சுட்டி, 29 ஒக்ரோபர் 2021 இல் சுட்டிக்காட்டியிருந்தார்.தாயகத்துத் தேர்தல் அரசியலாரை விடவும், கருத்துருவாக்கிகளுக்கு, அதுவும் ஆக்கிரமிப்பு அரசின் இறைமை எல்லைக்கும், ஆறாம் சட்டத்திருத்தத்தின் வீச்சுக்கும் அப்பாலான அரசியல் வெளிகளில் வதியும் கருத்துருவாக்கிகளுக்கு, மக்களை வழிநடத்துவதில் அதிக பொறுப்பு உண்டு.

ஆனால், அவர்களுக்குள்ளும் தாயகத்தில் இருக்கும் தேர்தல் அரசியலாரை மையப்படுத்தி, அதே போக்கோடு இழுபட்டுச் சென்ற சில கருத்துருவாக்கிகளையே அண்மையிற் பகிரங்கமாகக் காணமுடிந்தது.

அதுவும் குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகளோடும், தேசிய விடுதலைப் போராட்டத்தோடும் இணைந்து பயணித்து, ஒன்றாய் விருந்தோம்பி, இருந்து எழும்பியவர்களாகத் தம்மை வெளியில் அடையாளம் காட்டிக்கொள்ளுபவர்கள், அதே தேர்தல் அரசியலாரின் நிலையை எடுத்தார்கள். அதை ‘இராஜரீகம்’ அல்லது ‘இராஜதந்திரம்’ என்று இந்தியப் பாணியில் வெளிப்படுத்தவும் அவர்கள் தயங்கவில்லை.

இவ்வாறு, இந்தியப் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதப் படலம் நடந்தேறியபோது தங்களை அடையாளம் காட்டிக்கொண்டவர்களுள் தமிழ்நாட்டில் வதியும் மு. திருநாவுக்கரசு முதன்மையானவர்.தொலைந்து போன கருத்துருவாக்கிகள் என்று அவர்கள் அனைவரையும் கருதிப் பயணிக்க முதல், ஒரு கணம் அவர்களை விளங்கிக்கொள்வது, குறைந்தபட்சத் தேவையாகிறது.

அவர்கள் ஒவ்வொருவரின் மனதில், அல்லது ஆழ்மனதில், ‘பிரபாகரன் விட்ட தவறு உயிராயுதம், அதை விஞ்சியது எனது அறிவாயுதம்’ என்ற சிந்தனை குடிகொண்டிருப்பதைப் பலவருடங்களுக்கு முன்னரே காணமுடிந்தது.

அந்தச் சிந்தனையால் உந்தப்பட்ட வேகத்தில் தானோ என்னவோ, சுமந்திரனை விடவும் ஒப்பீட்டளவிற் குறைந்த ஒரு நிலைப்பாட்டை ஆரம்பப் புள்ளியாக நிறைவேற்றுமாறு இலங்கைக்கு இந்தியா ஊடாக அழுத்தம் கொடுப்பது அவசியம் என்று, சீனாவுக்கு எதிர்நிலை எடுப்பதை மட்டும் உத்தியாக நினைத்தும் இந்தியாவிடம் எதைக் கேட்கவேண்டும் என்ற மூலோபாயத் திட்டமிடல் இன்றியும் இந்தியாவை ஈழத்தமிழர் வழிக்குக் கொண்டுவர நினைத்து, பதற்றப்பட்டு வகுப்பெடுக்க ஆரம்பித்தார்கள்.

காட்டப்பட்ட சீனப்பூச்சாண்டியை இலங்கை அரசே இந்திய அரசுடன் பேரம்பேசும் தனது சமனமாக்கல் ஆட்டத்திற்குப் பயன்படுத்தியது என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவாற்றலை அவர்களின் ஆழ்மனக் கோளாறு பாதித்திருக்கவேண்டும்.

காலம் வந்தபோது தலையை வெளியே நீட்டிய ஆமைகளாகவும், ஊளையிடும் நரிகளாகவும், புலித்தோல் போர்த்த பசுக்களாகவும் தங்களைப் பலவிதமாக அண்மைய கிழமைகளில் அவர்கள் வெளிக்காட்டிய விதமே அலாதியானது.

இருப்பினும், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கருத்துருவாக்கிகள், அணிசேராதவர்களாயும் சுதந்திரமாகச் சிந்திப்போராயும், தீவுக்குள்ளும் வெளியிலும் எஞ்சியுள்ளார்கள் என்பது இங்கு கவனத்தோடு பாராட்டுதற்குரியது.

அடுத்தபடியாக, ஊடகத்துறையினரிற் சிலர் பற்றிய எச்சரிக்கை ஈழத்தமிழ்த் தேசியப் பரப்புக்குத் தேவைப்படுகிறது.

ஈழத்தமிழர் ‘தேசிய ஊடகங்களாகத்’ தாமும் பயணிப்பதாக ஒருபுறத்தில் மாயத் தோற்றம் காட்டி, தமது பணபலத்தால் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டு, மறுபுறத்தில் இலங்கை மற்றும் இந்திய அரசுகளோடு உரிமம் பெறும் ஒப்பந்தங்களில் ஈடுபட்டிருக்கும் ‘அட்டை முதலாளிகள்’ தமது நிதியை மூலதனமாக்கி, ஊளையிடும் நரிகளுக்கும், புலித்தோல் போர்த்த பசுக்களுக்கும் ஊடக வெளியைத் திறந்து விட்டுத் தமது சேவை யாருக்கு என்பதைக் கமுக்கமாக வெளிப்படுத்திவருகிறார்கள்.

அவர்களின் திரைகளில் பெரும்பான்மையாகப் புலித்தோல் போர்த்த பசுக்கள் தோன்றி மறைவதைக் காணலாம். புலிகளின் ‘அரசியற் துறை’ என்ற பெயரிற் கூட ஒன்று அங்கே அண்மையில் அரங்கேறியது.

மாற்றுக்கருத்துக்கு இடமளிப்பதாகவும் தம்மீது ஐயம் ஏற்படாதிருப்பதற்காகவும் இந்தவித ஊடகங்களில் ஒரு சில சுதந்திரச் சிந்தனையாளர், உணவுக்கு உப்பிடுவது போலச் சிறிதாக, ஆங்காங்கே சேர்த்துக்கொள்ளப்படுவர். எனினும், இந்த அட்டை முதலாளிகளும், இம்முறை, முறையாகவே மாட்டிக் கொண்டார்கள்.

அடா, இவர் போன்றோரை எல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை எவ்வாறு கையாண்டிருக்கும் என்பதை (கொலைத் தண்டனைகளை இங்கு குறிப்பிடவில்லை) ஏற்கனவே அறிந்திருந்த போதும், ஒரு தற்துணிபுக்காக எழுத்து ஆதாரங்களைத் தேடிய வேளையில், அற மரபில் பயணித்த யோகரட்ணம் யோகி அவர்கள் 1992 இல் எழுதிய, ‘ஆழவேரோடிய ஆலமரமும் அசைக்க நினைத்த புயல்களும்’ என்ற ஒரு கட்டுரை எம் கண்களிற் பட்டது.

விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய முத்தமிழ் விழாவின் மலரில் 122 ஆம் பக்கத்தில் அக்கட்டுரை வெளியாகியிருந்தது.

யோகியைப் போலவே, க.வே. பாலகுமார் அவர்களும் முள்ளிவாய்க்கால்வரை சொல்லிச் சென்ற செய்திகளை அறிந்தும் அறியாதவர் போல, ‘மேய்ப்பர்கள்’என்று சிலர் வந்தால் மட்டும் மேய்க்கப்படக்கூடியவர்களாக, புலித்தோல் போர்த்த பசுக்களாக, ஈழத்தமிழர் மத்தியில் தற்போது தலைகாட்டிவரும் புலம்பெயர் ‘அனைத்துலக’ மற்றும் ‘தலைமைச் செயலகப்’ பசுக்களும், ஆடுகளும், இன்னும் என்ன பெயரை எல்லாம் விட்டுவைக்காமற் பழுதடையச் செய்யலாம் என்று சிந்திக்கும் நரிகளும், ஆமைகளும் யோகியின் இக்கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசிக்காவிடினும், அதைக் கேட்டாவது தம்மை யாவையென உணர்ந்துகொள்ளவேண்டும். இதற்காக, அதை ஒலிவடிவிலும், அதேவேளை அதன் மூலத்தன்மை சிதறாது பார்த்து அவைகள் உறுதிப்படுத்திக்கொள்ளும் விதத்திலும், எழுத்து ஆதாரத்தோடு சேர்த்து, தமிழ்நெற் இங்கு மீளுருவாக்கியுள்ளது.

“இந்திய அரசு குறித்தும் தேசத் துரோக அமைப்புகள் குறித்தும் எம் கருத்துகளை தமிழீழ மண்ணின் அறிஞர்கள் எனச் சொல்லப்படுவோர் எல்லோரும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஏற்றுக்கொள்ள மறுத்தனர் என்பதை விட நம்ப மறுத்தனர் என்றே சொல்லலாம். நேரடியான பட்டறிவுகளினூடாக அதை அறிந்த பின்பே நாம் என்றோ சொன்னவைகளைப் புரிந்து கொண்டனர்,” என்று யோகி 1992 இல் எழுதினார்.

இவ்வாறு, யோகி ‘எல்லோரும்’ என்று குறிப்பிட்டதற்குள் யார் யார் எல்லாம் உள்ளடக்கம் என்பதை விலாவாரியாக எடுத்துரைக்கவேண்டிய தேவை இங்கு இல்லை.

அதே ‘எல்லோரில்’ இன்றும் இருப்பவர்களுக்கும், அவர்கள் கருத்தூட்டிச், சீராட்டிப் பாராட்டி வளர்க்கும் அவர்தம் குஞ்சுகளுக்கும், இதோ, யோகியின் கட்டுரை மீள் அர்ப்பணமாகட்டும்.புலித்தோல் போர்த்தோரிற் சிலர் தருணம் வரும்போது வேண்டுமென்றே கோட்டை விடுபவர்கள்.

வேறு விடயங்களைத் திசை திருப்பிப் பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவர்கள். எல்லாம் முடிந்தபின் ஆய்வாளர்களாக மீண்டும் வலம் வருவார்கள். இந்தச் சந்தர்ப்பவாதிகளும் இம்முறை வசமாக மாட்டிக்கொண்டார்கள்.

இவர்களுக்கெல்லாம் அடுத்த ஒரு வகையினரும் உளர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் நிராகரிக்கவில்லை என்பதாகவும், அதைப் போலத் தாங்களும் அதை இன்றும் நிராகரிக்கவில்லை என்றும், பதின்மூன்றை மட்டுமே தாங்கள் ஆரம்பம் இல்லை என்று நிராகரித்து வருவதாகவும் புதிய புலுடா விடுகின்ற ஈருருளித் தேர்தல் அரசியலாரே அவர்கள்.எல்லாம் முடிந்தபின் செத்த பாம்படிப்பதற்கு மூன்று மாதம் கழித்து தடியும் இடமும் தேடிக்கொண்டிருக்கிறார் கஜேந்திரகுமார். சுயநிர்ணய உரிமையைக் கைவிட்ட அரசியல் தீர்வுத் திட்டத்தைச் சமர்ப்பித்துவிட்டு இன்னொரு சமஷ்டிக் குழுவையே அவர் வளர்க்க முற்படுகிறார்.

அதற்கும் சுமந்திரன் அரசியலுக்கும் அதிக வேறுபாடில்லை. காலந்தாழ்த்தியும், குறி தவறியும் செத்த பாம்படித்துத் தேர்தல் அரசியற் தமிழ்த் தேசியம் பேசும் அவர்களையும் தாண்டியதாகவே தமிழ்த் தேசியம் தனது அர்த்தமுள்ள பயணத்தை இனிவருங்கால் மேற்கொள்ள முடியும்.

ஏன் கடிதம் கையளிக்கப்படமுன்னரே ‘செத்த பாம்பு’ ஆகியது என்பதற்கான விளக்கமும் இத்தருணத்தில் தேவைப்படுகிறது.

பசில் ராஜபக்ச, அமெரிக்கத் தரப்புக்கு வாக்குறுதியளித்தமைக்கு ஒப்ப, அவரது அண்ணன் கோட்டபாயாவிடம் இருந்து அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் பற்றிய அறிவித்தல் ஒன்று வெளிவரவேண்டும் என்று சம்பந்தன் தரப்பு எதிர்பார்த்திருக்கவேண்டும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

தமிழ்த் தரப்பு பகிரங்கமாகக் கோரியதன் பேரில் இந்திய அழுத்தம் வருகிறது என்பது தென்னிலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தலாம் என்பதால் சம்பந்தனோ சுமந்திரனோ இந்தியாவுக்குச் செல்வதையோ, கடிதம் வரைவதையோ விரும்பியிருக்கமாட்டார்கள். அதுவே தமது பார்வை (optics) என்று பகிரங்கமாகவே சுமந்திரன் 2017 பெப்ரவரியில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தும் இருந்தார்.Letter to Indian PM
13 ஆம் சட்டத் திருத்தத்தை மையப்படுத்தி நீர்த்துப்போகும்படியான நோக்கத்தோடு ஆரம்பத்தில் வரையப்பட்ட கடிதம், இறுதியில் அதன் தவறான மூல வரைபை விட, சம்பந்தனாலும் சுமந்திரனாலும் பலப்படுத்தப்பட்டுத் திருத்தப்பட்டிருந்தாலும் முழுமையாக ஈழத்தமிழர் தேசத்துக்குரிய கோரிக்கையாக வெளிப்படவில்லை. எனினும், இலங்கை அரசுக்குச் சார்பானதாகவும் அமையவில்லை. இலங்கை அரசியலமைப்பை நிராகரிக்கத் தவறினாலும் இலங்கை அரசின் விருப்புக்கு வில்லங்கமானதாகவே இறுதியாகக் கோரிக்கை வெளிப்பட்டுள்ளது என்பதைக் காண்க.
ஆனால், அமெரிக்க-இந்தியப் புரிந்துணர்வைப் பெற்று, பொருளாதார உதவியையும் பெற்றதன் பின்னர், இந்தியாவுக்கு வேண்டிய பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கியதும், அதாவது தனக்கு வேண்டிய அளவு புரிந்துணர்வு சக்திகளுடன் எட்டப்பட்டதும், தமிழர் விடயத்தை எப்படித் தட்டிக்கழிப்பதென்ற இலங்கை அரசின் தேவைக்கு ஏற்ப, கடிதப் படலம் பயன்பட்டது, அல்லது பயன்படுத்தப்பட்டது.

இந்தியப் பிரதமரிடம் வடக்கு-கிழக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்றில்லாது, முழுத் தீவும் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் சார்பான அதி-குறைந்த கோரிக்கைகளை 13 ஆம் சட்டத்திற்குள் மட்டுப்படுத்திக் கோரவேண்டும் என்பதே சிங்கள அரச தரப்பின் ராஜதந்திரிகளின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருந்திருக்கும்.

கடிதம் வரைவது, சம்பந்தன்-சுமந்திரன் பார்வையில் எதிர்விளைவையே தரும் என்பதால், அதைத் தவிர்க்க அவர்கள் ஒருபுறம் முயல, மறுபுறம், கடிதம் வரையப்படவேண்டும் என்ற நெருக்கடி. தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தம். எழுதுவதானால், தேர்தல் விஞ்ஞாபனத்தோடு ஒத்துப்போகும் வகையில் எழுதவேண்டும் என்ற நிலை ஒட்டுமொத்தமாகத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டது. கூடுதலாகத் தமிழ்த் தேசியம் சார்ந்து நிற்கும் சிறிதரன் போன்றவர்களின் உள் அழுத்தமும் இதற்குக் காரணமாகியது.

கடித வரைபு இறுதிப்படுத்தப்பட்டுக் கையொப்பம் இடப்பட முன்னரே, அது கசிந்து, சிங்களத் தரப்புக்கு எந்தச் சாட்டுத் தேவைப்பட்டதோ, அது கிடைத்தது. கசிந்த கடிதத்தைப் பெறுவதிலும் இந்தியத் தரப்பு அக்கறை செலுத்தவில்லை. கடிதமோ இலங்கையின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே இருந்தது. எது எவ்வாறாயினும் கடிதப் படலம் ராஜதந்திரத் தோல்வியில் முடிந்துவிட்டதால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பதே உண்மையாகும்.

இந்தத் ‘தலைப்பாகை பறித்த கடிதம்’ தமிழ்நாட்டு அரச மட்டத்தில் ஈழத் தமிழர் தொடர்பான கோரிக்கைகளைத் தரம் குறைக்காதவாறு சேதக்-கட்டுப்பாடு (damage-control) செய்யப்படவேண்டிய தேவை இருக்கிறது.

இதற்கு வேண்டுமானால் கஜேந்திரகுமாரின் செத்த பாம்படிக்கும் முயற்சி பயன்பட்டால் நல்லது.

மேற்குறித்த எல்லா ‘விடுப்புகளுக்கும்’ பதில் சொல்வதற்கு அப்பால், யோகி முன்வைத்த கட்டுரை ஆழமான கிரகிப்புக்கு உரியது. அதன் தார்ப்பரியம் மிகவும் அகலமானது.

அது தலைமையின் பொறுப்புக்கூறல் பற்றியது.

தலைமைத்துவத்தின் பொறுப்புக் கூறலுக்குள் பல விடயங்கள், நெகிழ்ச்சித் தன்மை உள்ளடங்கலாக, அடங்கும். அவ்வாறான தன்மைகளும் அவற்றுக்குரிய எல்லைகளும் பற்றிய கருத்துரீதியான ஆய்வே தற்போது மேற்கொள்ளப்படவேண்டியது.

அதை அடுத்த கட்டுரையிற் பார்ப்போம்.

அந்தக் கட்டுரை வரமுன்னதாக, இந்தியப் பிரதமருக்கு கடிதம் வரையும் படலம், கண்டம்-விட்டுக்-கண்டமும், விடுதி-விட்டு-விடுதியும் பாய்ந்துகொண்டிருந்தபோது தமிழ்நெற் என்ன செய்தது என்பதை அறிந்திராத வாசகர்களுக்காகச் சில விடயங்களை எடுத்தியம்பவேண்டிய பொறுப்புக்கூறலும் ஓர் ஊடகமாக எமக்குண்டு. அதைச் சுருக்கமாகப் பின்வரும் பந்திகளிற் தருகிறோம்.2021 ஒக்ரோபர் மாதத்தில் உக்கிப்போன பதின்மூன்று பற்றியும், முழுமையாக நிராகரிக்கப்படவேண்டிய இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றியும் பகிரங்கமாகவும் ஆதாரபூர்வமாகவும் தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ் வாதாடுதளத்தில் இணைந்து எமது கருத்துருவாக்கத்தை முற்கூட்டியே ஆரம்பித்தோம்.

அதேவேளை, இந்தப் பேச்சுகளில் உள்வாங்கப்பட்ட தரப்புகளிற் பலரிடம் வரவிருக்கும் ஆபத்தை நேரடியாகவும் திரைமறைவிலும் முறையாக எடுத்தியம்பினோம். மாற்றுத் திட்டங்களையும் கோடி காட்டியிருந்தோம். எழுத்து மூலமாகவும் உரியவர்களுக்குச் சில விடயங்களைக் கையளித்திருந்தோம். நம்பியல்ல, நெகிழ்ச்சித் தன்மையின் எல்லை எங்கிருக்கிறது என்பதை நினைவூட்டுவதற்கு. அதன்போது பல பயனுள்ள தரவுகளும் வெளியரங்கத்துக்கு வந்தன.

எமது பகிரங்கக் கருத்துருவாக்கப் படலம் 2021 நவம்பரில் கருத்துக்கணிப்போடு நிறைவுபெற்றது. தொடர்ந்தும் திரைமறைவுக் கருத்துருவாக்கம் நடைபெற்றது.

குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்ற ஆரம்பகால மாவீரரின் தற்கொடைகளை விடவும் சந்தர்ப்பவாத அரசியலே சரணம் என்ற நிலைக்குச் சென்றிருக்கும் ரெலோத் தரப்பும், ‘ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத, பிரிக்கப்படவே முடியாத சிறிலங்காவுக்குள்’ அதிகாரப்பரவலோடு சமஷ்டி நோக்கித் தீர்வு என்று தேர்தல் விஞ்ஞாபனங்களை மேற்கோள் காட்டிச் சொல்லும் சுமந்திரன் தரப்புமாக நடைபெற்று முடிந்த இழுபறிக் கடிதப்படலம், கடிதமாகிக் கையளிக்கப்பட முன்பே செத்த பாம்பாகிவிட்டது.

உண்மையான ஈழத் தமிழ்த் தேசியத் தலைமை என்பது தேர்தல் அரசியலாருக்கு அப்பாற்பட்டது. அது முழுமையான ஒரு கோட்பாடு. ஒட்டுமொத்த ஈழத்தமிழர் இறைமையின் வடிவமான தேசியத் தலைவரின் ஆளுமையின் தலை மூளையாக உருவேற்றிருந்தது அந்தக் கோட்பாடு. ஓர் இராணுவ மூளையாக மட்டும் அதை அங்கீகரிக்கும் பலர், எம்மவரிற் பலர் உள்ளடங்கலாக, அதன் அடிப்படையே அரசியல் மூளை என்பதை மறந்துவிடுகின்றனர்.

அதே தேசியத் தலைவர் பிரபாகரனின் மூளை ஒரு கூட்டு மூளையாக இயங்கவேண்டிய காலம் இது.

அதற்கான கருத்துருவாக்க அலை அடுத்தகட்டமாக விரியட்டும். அதுவரை யோகியின் கட்டுரை பேசட்டும்.Letter to Indian PM
13 ஆம் சட்டத் திருத்தத்தை மையப்படுத்தி நீர்த்துப்போகும்படியான நோக்கத்தோடு ஆரம்பத்தில் வரையப்பட்ட கடிதம், இறுதியில் அதன் தவறான மூல வரைபை விட, சம்பந்தனாலும் சுமந்திரனாலும் பலப்படுத்தப்பட்டுத் திருத்தப்பட்டிருந்தாலும் முழுமையாக ஈழத்தமிழர் தேசத்துக்குரிய கோரிக்கையாக வெளிப்படவில்லை. எனினும், இலங்கை அரசுக்குச் சார்பானதாகவும் அமையவில்லை. இலங்கை அரசியலமைப்பை நிராகரிக்கத் தவறினாலும் இலங்கை அரசின் விருப்புக்கு வில்லங்கமானதாகவே இறுதியாகக் கோரிக்கை வெளிப்பட்டுள்ளது என்பதைக் காண்க.


Related Articles:
10.01.20   Sampanthan indirectly implicates India, US, EU, UK, Japan, N..
04.11.08   13th Amendment: arousing a zombie


Chronology:

 

Latest 15 Reports
04.02.24 15:40   Photo
சியோனிசம் காணும் தோல்வி ஈழத்தமிழருக்குப் பலன் தரவல்ல படிமை மாற்றத்தின் அறிகுறி
24.04.22 05:44  
தீவின் நெருக்கடிச் சூழலில் ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கவேண்டிய நிலைப்பாடுகள்
09.04.22 14:44   Photo
குறிதவறும் ஈழத்தமிழர் தலைமைகளுக்கு வரலாறு தருகின்ற எச்சரிக்கை
21.01.22 07:24   Photo
ஈழத்தமிழர் தேசத்தின் தலைமைத்துவம் தேர்தல் அரசியற் கட்சிகளுக்கு அப்பாலானது
02.11.21 15:32   Photo
13 ஆம் சட்டத்திருத்தத்தால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ள முடியுமா?
15.09.21 08:19  
English version not available
17.05.21 19:23   Photo
Ananthi blames war criminal Silva for blocking collective memorial at Mu'l'livaaykkaal
09.04.21 14:46  
English version not available
23.03.21 12:41   Photo
No focus on Tamil genocide, geopolitics gets played out in Geneva in favour of QUAD formation
21.03.21 13:34   Photo
Navi Pillay explains ‘human rights’ limitations in Geneva on Tamil genocide
15.03.21 20:36   Photo
Deceived Tamil activists in UK falsely claimed ‘substantial changes’ to Zero draft
09.03.21 21:34   Photo
UK repeatedly wronged Tamils says hunger-striker, demands genocide justice
26.02.21 11:53   Photo
Tamils witness false dilemma in Geneva as geopolitical formations pit against each other
19.02.21 14:02   Photo
UK not prepared to push for ICC option in new UNHRC Resolution
07.02.21 23:16   Photo
Unprecedented P2P uprising paves the way for rights-oriented politics of Tamils and Muslims
 
Find this article at:
http://www.tamilnet.com/art.html?catid=25&artid=39979