18.08.24 21:23
Viraj Mendis: A beacon of international solidarity and a pillar in the Eelam-Tamil liberation struggle
Viraj Mendis: A beacon of international solidarity and a pillar in the Eelam-Tamil liberation struggle
|
3 ஆம் பதிப்பு (Adds Resolutions)
குறிதவறும் ஈழத்தமிழர் தலைமைகளுக்கு வரலாறு தருகின்ற எச்சரிக்கை[TamilNet, Saturday, 09 April 2022, 14:44 GMT]பெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும் இத்தருணத்தில், திடுமென வரலாற்று ஓட்டத்திற்கு மாறான நடத்துமுறை ஒன்றைத் தழுவி, ஈழத்தமிழர் தேசத்தின் கூட்டு உரிமைகளை உறுதிப்படுத்த, அதன் ஆளும் தரப்போ, எதிர்த் தரப்போ இலகுவில் உடன்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பது அடிப்படைத் தவறாகும். இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு வரலாற்றுப் பட்டறிவே உற்ற நண்பன்; எதிரியை மட்டுமல்ல விரோதிகளையும் துல்லியமாகக் கணிப்பிடும் நுண்ணறிவே அவர்களின் அருமைத் தோழி. அரசியலமைப்பை இலங்கை அரசு கையாண்டுவந்துள்ள அதன் நடத்துமுறையைப் (modus operandi) புரிந்த நிலையில், நுண்ணறிவோடும் பேரறிவோடும், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழம், தமிழ்நாடு, புலம்பெயர் சூழல் என்று ஒத்திசைவாக ஒன்றிக்கவல்லதாக வகுக்கப்படும் தமிழரின் அணுகுமுறையே, ஈழத்தமிழர் தேசத்தை அவர்தம் விடுதலை இலக்கு நோக்கி நகர்த்த வல்லது. “Somebody should have told them - change the system, loosen up, or break off. And looking back, I think the Tunku [Abdul Rahman] was wise. I offered a loosening up of the system. He said, "Clean cut, go your way." Had we stayed in, and I look at Colombo and Ceylon, or Sri Lanka, I mean changing names, sometimes may be you deceive the gods, but I don't think you are deceiving the people who live in them. It makes no great difference to the tragedy that is being enacted. They failed because they had weak or wrong leaders, like Philippines." – Lee Kuan Yew, 1998 பொருளாதார அபிவிருத்திக்குச் சிங்கப்பூரை விடச் சிறந்த அடிப்படை பழைய இலங்கைக்கு (old Ceylon) இருந்தது என்பதை 1950 களில் நேரே பார்த்தவரும், தனது வாழ்நாளில் ஒரு தலைமுறைக்குள் சிங்கப்பூர் வளர்ச்சியடைவதை நிர்வகித்தவருமான அதன் முன்னாள் தலைவர், மறைந்த லீ குவான் யூ, 1998 ஆம் ஆண்டில் நினைவுபடுத்தியிருந்தார். இலங்கை அரசின் தலைவர்கள் “பலவீனமானவர்களாக” அல்லது “தவறானவர்களாக” இருந்தார்கள் என்றும் சிங்கப்பூரின் தந்தை கூறியிருந்தார். அதேபோல, மீண்டும் ‘பழைய சிலோன்’ எனும் நிலைக்கு மீளவே முடியாத ஓர் இடத்துக்கு, கூட்டு உரிமைகளை வழங்கத்தவறிய இலங்கை சென்றுவிட்டது, என்ற கருத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆயுதரீதியாகவும் இன அழிப்புப் போரின் மூலமும் நசுக்குவதற்கு இலங்கை அரசு பல நாடுகளிடம் கடன் உதவி பெற்றமை, இன்று இலங்கைத் தீவில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஒரு முக்கிய காரணமாகிறது. அதைப் போலவே, ஈழத்தமிழர் மீதான இன அழிப்புப் போரின் ஊடாகத் தமிழீழ மெய்நடப்பு அரசை அழித்தபின்னரும், இந்துசமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவத்தோடு தொடர்புறும் பிராந்திய, உலக வல்லாதிக்கங்களுக்கு இடையிலான போட்டிகளைச் சமனமாக்கல் ஆட்டத்தினூடாகத் (Balancing Act) தொடர்ந்தும் பயன்படுத்தி, அதீத கடன்களை ‘அபிவிருத்தி’ என்ற பெயரில் இலங்கை பெற்றுக்கொண்டது. கொழும்பில், மாறி மாறி ஆட்சிபீடம் ஏறியவர்கள், ஈழத்தமிழர் மீதான தமது போரைச் சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கையாண்டதனால் பழக்கப்படுத்தப்பட்டிருந்த மனப்பாங்குக்கும், தமது ஆட்சிக்காலத்தை மட்டும் வைத்துத் திட்டமிடும் குறுகிய சந்தர்ப்பவாதத்திற்கும், அடுக்கடுக்காகப் பலியாகிவந்துள்ளனர். இவை தொடரும்! அதேபோல, சர்வதேசத் தரப்புகளும் இலங்கை அரசைத் தமக்கேற்பப் பணியவைக்கும் உத்திகளைப் பயன்படுத்துவதில் சற்றும் பின் நிற்கவில்லை. அவையும் தொடரும்! இவ்வாறு, இரண்டும் தொடர்கையில் இலங்கைத் தீவில் ஆளும் தரப்புகள் குறியீட்டு மாற்றங்களுக்கு உள்ளாகும் அல்லது மாற்றப்படும். பின்னர் அவை தற்காலிகமாகத் தக்கவைக்கப்படும். மீண்டும் மீண்டும் கால நீடிப்பு, அரசியல் வெளி என்று சந்தர்ப்பங்கள் வழங்கப்படும். இந்த நச்சுவட்டத்தைத் தாண்டுவதற்குச் சிங்கள தேசத்திடமுள்ள அறிவியற்பலமும், மக்கள் பலமும் இராணுவபலத்தை விடவும் மேலெழுந்து அதிசயங்கள் புரியக் கூடியவையா என்ற கேள்விக்கு, இல்லை என்ற பதிலே இன்றுவரை நீடிக்கிறது. நிலைமை இப்படியிருக்க, சிங்கள தேசத்துக்கும் வெளிச்சக்திகளுக்கும் அவ்வப்போது தேவைப்படும் தற்காலிக மாற்றங்களுக்கு, இன அழிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விசிலடிக்கும் குஞ்சுகளாக மாறவேண்டும் என்பதாக, ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் பல செயற்பட்டு வருகின்றன. அமெரிக்கா ஈழத்தமிழர்களின் அருவருப்பைச் சம்பாதிக்கும் வகையில் அடிக்கடி சொல்லிக்காட்டுகின்ற ‘இலங்கை ஆசியாவின் மிகப் பழைய ஜனநாயகம்’ என்பது தீவில் தக்கவைக்கப்படுமா, அல்லது தீவு பாகிஸ்தானின் கடந்த கால இராணுவ ஆட்சி வரலாறு போல மாறுமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்படவேண்டியது. அமெரிக்காவும் இந்தியாவும் ஒத்துப் போகக்கூடிய, சீனாவுக்கெதிரான இந்துசமுத்திர திருகோணமலை விவகாரம் தொடர்ந்தும் எவ்வாறு உக்ரெய்ன் போருக்குப் பின்னான சூழலில் பயணிக்கப்போகிறது என்ற கேள்விகளோடு, விரிகின்ற புவிசார் அரசியலை அணுகும் அதேவேளை, அறிவுசார் வேள்விகளும் தமிழர்களால் நடாத்தப்படவேண்டும். ரசிய விடயத்தில் ஏற்பட்டிருக்கும் கெடுபிடி யுத்தத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ராஹ்மணியம் ஜய்ஷங்கரின் அமெரிக்காவுடனான குவாட் பாதுகாப்பு உறவுக்கும் ரசியாவுடனான எண்ணெய் மற்றும் பாதுகாப்பு உறவுக்கும் இடையான சமனமாக்கல் ஆட்டத்தைத் தற்போதைக்கு ஒரு கேளிக்கையாகவே பார்த்து அணுகவேண்டியுள்ளது. அதோடு நின்றுவிடாது, நுண்ணறிவும் பேரறிவும் கொண்டு, சரியான அறிவின் பாற்பட்ட வேள்விக்குரிய ஆய்வை –அதாவது இதுவரை செய்யத்தவறிய பொருத்தமான வீட்டு வேலையை– இனியாவது தமிழ்த் தரப்புகள் செய்யத் தயாராகவேண்டும். வாராது வரும் ஒரு வாய்ப்பை, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் திறமையுடன், பயன்படுத்துவது சமயோசிதமானதே. ஆனால், அதற்காக ஏமாளிகளாகவும் பலிக்கடாக்களாகவும் மாறிவிடாமல், உரிய மூலோபாயத் திட்டத்துடன் அவ்வாய்ப்பை அணுகவேண்டும். முற்கூட்டியே, எழவிருக்கும் பொருளாதார நெருக்கடியை மனதிற் கொண்டு, ஒரு புறம் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று சிங்களப் பேரினவாதத் தரப்பைத் தூண்டிவிட்டுவிட்டு, மறு புறம் இந்தியாவின் வெளியுறவுத்துறையோடு மிலிந்தா மொராகொட, பசில் ராஜபக்ச ஆகியோர் ஊடாக இலங்கை அரசு உடன்பாட்டுக்கு வந்துள்ளது. அதேவேளை, சுமந்திரனுக்குப் போட்டியாக, தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு உள்ளும் வெளியிலும், முன்னாள் ஆயுதப்போராட்ட இயக்கங்களாயிருந்து அரசியற்கட்சி ஆகியவர்களை நுட்பமாகத் தூண்டிவிட்டு, அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், உண்மையிலேயே பின்னணி தெரியாமலும் என்று பலவிதமாக, ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பங்கேற்கும் தமிழரசுக்கட்சியின் கணிசமான ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிவகுக்கச் செய்யப்பட்டனர். அதற்கும் அப்பால், முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களும், அவரது அணியிலிருக்கும் நல்லதம்பி சிறீகாந்தாவும், தடக்கித் தடக்கி அதே ஓட்டத்துக்குள் போய் விழுந்த சிவாஜிலிங்கம் அவர்களுமாக, இறுதியாக 13 ஆம் சட்டத்திருத்தத்தை ஆரம்பப்புள்ளியாக்கும் பொறிக்குள் அகப்பட்டனர். சிங்கள அரசினாலும் ஈழத்தமிழர்கள் தொடர்பான தவறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் மறைமுக இணக்கப்பாட்டோடுமே இவ்வாறு இவர்கள் விழுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பொருளாதார நெருக்கடி வரப்போகிறது என்பதைத் தெரிந்திருந்தும், ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்பதைக் கண்டதும் தமிழர் தரப்புகளுக்கு அரண்டு போகும் சூழல் ஏற்பட்டது. அதேவேளை வவுனியா எல்லையில் நடைபெறும் சிங்கள மயமாக்கல் போன்றவற்றைக் கையாளமுடியாதிருக்கும் நிலையைக் கண்டு அவதிப்படவேண்டிய சூழலும் தோன்றியது. உருவாகவுள்ள நெருக்கடி நிலைமையின் அரசியற் கனதியை உணராமல், அல்லது உணர்ந்திருந்தும் உணராதவர் போல் தமிழர்களைத் திசைதிருப்பி மேற்குறித்த தமிழர் தரப்புகள் 13 ஆம் சட்டத்திருத்தத்தையே ஆரம்பப்புள்ளியாக்குதல் என்ற பொறிக்குள் தாமாக மாட்டிக்கொண்டனர். வினைகெட்டு மூன்று மாதங்களாக ஒரு கடிதமும் வரைந்தனர். இறுதியில் அந்தக் கடிதத்தால் இந்திய வெளியுறவுக் கொள்கையில் தமிழர் சார்பான எந்தத் தாக்கத்தையும் கொண்டுவர இயலவில்லை. மாறாக, கடிதம் இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட இருந்த நாளன்றே அதை இரத்துச்செய்துவிட்டு, இந்தியத் தூதுவர் புதுடெல்லிக்குப் பறந்து இலங்கைக்குப் பெரும் நிதி கொடுக்கும் திட்டம் அரங்கேறியது. தமிழர் தரப்புக்குக் கிடைத்தது, வழமைபோல், வெற்று ஆறுதல் வார்த்தைகள் மட்டுமே! அமெரிக்கா சுமந்திரனை ஜி. எல். பீரிஸ் உடன் இணங்கி ஒருபுறம் கையாள, மறுபுறம் தாழ்வுச்சிக்கலுக்குள்ளாகியுள்ள சில தமிழ்க் கருத்துருவாக்கிகளை பசில் ராஜபக்ச தரப்பு நுட்பமாக இந்தியா தொடர்பாகக் கையாளலானது. அதற்கு அடுத்த மட்டத்தில் பசில் ராஜபக்சவையும் ஜி.எல்.பீரிஸையும் மிக நுட்பமாக இணைத்துக் கையாளும் கைங்கரியத்தை மிலிந்தா மொராகொடாவின் ஆலோசனை கில்லாடித்தனமாக வழிநடத்திக்கொண்டிருந்தது. இன்னொருபுறம், திம்புக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டாவது மலையகத் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையே ஒரு இணக்கத்தைக் கொண்டுவரமுடியுமா என்ற கேள்விக்கு மனோ கணேசன் போன்றோரும் பதிலளிக்காது தப்பித்துக்கொண்டிருந்தனர். இறுதியில், அவரும் டெலோவின் திம்புக்கோட்பாடுகளையும் கைவிட்ட பாதைக்குள், குறைந்தபட்சப் புரிந்துணர்வு வேலைத்திட்டம் (Minimum Working Programme) என்ற அடிப்படையில், டெலோவின் மிகத்தவறான வழிகாட்டலில் பயணிக்கத் தயாராகினார். எனினும், சுமந்திரன் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு உடன்பட இயலாத சூழல் தோன்றவே இருவரும் பின்வாங்கிவிட்டனர். திம்புக் கோட்பாட்டின் 4 ஆம் கோரிக்கை எவ்வாறு இருந்தது என்பதை மலையகம் மறந்துவிடலாமா? குறைந்தபட்சப் புரிந்துணர்வு திம்புக் கோட்பாடுகளை அங்கீகரிப்பதில் தங்கியிருக்கிறது என்ற அவசியத்தை மனோ கணேசன் போன்றவர்களுக்குச் சுட்டிக்காட்டுவதோடு, மலையக உறவு சீர்செய்யப்படவேண்டும். வேறொரு திசையில், மிலிந்தா மொரகொடவையும் தமிழ்நாடு அரசையும் கூட தமது திட்டங்களுக்கு ஏற்ப இணைக்கவேண்டிய தேவை வரும் என்பதை முற்கூட்டியே உணர்ந்து, சீனாவின் காதலனும், ஐ.நாவுக்குள் இருந்து பண விரயக் குற்றச்சாட்டில் விரட்டியடிக்கப்பட்டவரும், இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் மிலிந்த மொராகொடவின் நண்பரும், இலங்கை விடயத்தில் தோற்றுப் போனவருமான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் கொரோனாவுக்குள்ளும் தென்னிந்தியாவில் களமிறங்கினார். தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஊடாக முதலமைச்சர் ஸ்டாலினைக் குறிவைத்தார். இலங்கை தொடர்பான நெருக்கடியைக் கையாளுவதற்குத் தமக்குத் தேவையான பாதைகளை முற்கூட்டியே திறந்துவைக்கும் வெளித் தரகர்களின் தயாரிப்புகள் எப்படியெல்லாம் நடைபெறும் என்பது பற்றிய புரிதல் தமிழ்நாட்டில் ஏற்படவேண்டும். இவையெல்லாம் பொருளாதார நெருக்கடியின் பின்னால் விரிந்த கெடுபிடிச் சூழலின், குறிப்பாக வெளி, மற்றும் உட்தரப்புகள் தொடர்புபடும் சூழ்ச்சி நகர்த்துகைகள் (manoeuvering). அதேநேரம், சீனாவிடம் தமிழர் தாயகத்திலும் அபிவிருத்தித் திட்டங்களைக் கையளிப்பது போலப் பாசாங்கு செய்து, இறுதியில் சீனத் தூதரை யாழ்ப்பாணம் அனுப்பி, அங்கே இலங்கை இராணுவத்தோடு அவர் காட்சி தந்து, இந்தியாவுக்கு எவ்வளவு தூரம் என்று வழமையான சீனாவின் வன்கண் உத்தியை (bullying tactics) தனது இராஜதந்திர நகர்வுகளுக்காகக் கட்டவிழ்த்து விடச்செய்யவும் இலங்கை அரசு தவறவில்லை. ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற புதிய அரசியலமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நாடாளுமன்றத்துக்கு வருவதற்கான வாய்ப்பே தற்போது இல்லாது போய்விட்டது. சமனாமாக்கல் ஆட்டமும் ஆடி, வன்கண் உத்தியையும் கட்டவிழ்த்து விட்டு, தமிழ்த் தரப்பைப் பதின்மூன்று எனும் கச்சைத்துண்டை மீண்டும் கட்டவைத்து, தமிழ்நாட்டுக்கும் ஊடுருவல் செய்து, பல சூழ்ச்சிநகர்த்துகைகளை ராஜபக்ச அரசாங்கம் செய்துகொண்டிருந்தது. புலம் பெயர் அமைப்புகளிற் சிலவும் இதற்குப் பலியாகின. வழமைபோலவே, தமக்குள் போட்டி போடும் பிரித்தானியத் தமிழர் பேரவையும் உலகத்தமிழர் பேரவையும், இலங்கையோடு சர்வதேச மத்தியஸ்தத்தோடு பேசலாம் என்ற அணிவகுப்பை மேற்கொள்வதில் கூடுதலான புலம் பெயர் தமிழர் அமைப்புகளைத் திரட்டப்போவது யார் என்ற போட்டியை நடாத்தி, அதிலே வழமைபோல் உலகத் தமிழர் பேரவை, வெளிச்சக்திகளின் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச்செல்வது என்பதான காரியங்களும் நடந்து முடிந்தாகிவிட்டது. இறுதியில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் 1.4 ஆம் உறுப்புரை மந்திரம் ஓதியது! இனி, கோட்டபாய வீடு போக நேர்ந்தாலும், மிலிந்தவும் பலித கோஹணாக்களும் தொடரலாம். அல்லது ஹரின் பீரிசுகளும் சந்திரிகாகளும் வருவார்கள். வடக்கு கிழக்கு அபிவிருத்தி நிதியம் தயாராகிவிட்டது என்பார்கள். சில தமிழர்களும் ‘அபிவிருத்தித் திட்டமிடல்’ என்ற பெயரில் கச்சையைக் கட்டிக்கொண்டு கிளம்புவார்கள். கடும் பௌத்த சிங்கள தேசியவாதிகளான கரு ஜயசூரியாக்களும், பாட்டாளி சம்பிகாக்களும் தமிழர்களோடு நல்லிணக்கம் பேச முனைந்தாற் கூட அதிசயப்படுவதற்கில்லை! வெளிச்சக்திகளைப் பொறுத்தவரை, ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று. இவ்வாறு, ஆடவைக்கும் சக்திகள் ஒரே திசையில் ஆட்டுவித்துக்கொண்டுதானிருக்கும். ஆட்டப்படுபவர்களும் ஆடத் தயாராகவே இருப்பர். அதேவேளை, பொப் மாலியின் எலியோட்டப் பாட்டும் சமூகத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கும்! எலிகளின் ஓட்டத்தைக் கேளிக்கையோடு பார்த்துவிட்டு, புலிகளை ஒரு காலத்தில் பெற்றிருந்த ஈழத்தமிழர்கள், தமது அடுத்தகட்ட விடுதலை அரசியலுக்கான சூழமைவைப் புரிந்த நிலையில் திட்டமிடவேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா? ‘தெரிந்து வினையாட’ போராட்ட அரசியலை முன்னெடுக்கவேண்டிய தமிழ்த் தரப்புகளுக்குத் தெரிந்திருக்கவேண்டும். வெறுமனே அறிக்கை வெளியிட்டு, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவிட்டுப் போகும் பகட்டுப் பொதுத் தொடர்பு (PR stunt) செய்துவிட்டு ஓய்ந்துவிடுவதால் போராட்ட அரசியலை முன்நகர்த்த முடியாது. மீண்டும்-மீண்டும், 1987 ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தப் பார்வையோடு ஆட்டுவிப்பவர்களையும், ஆடுபவர்களையும் அடையாளம் கண்டுகொள்வது இத்தருணத்தில் மிகவும் அவசியமாகும். நச்சுத்தனமான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவான பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை ஆரம்பப்புள்ளியாக்குவது என்ற காதை மீண்டும் விரிய ஆரம்பித்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலேயே தமிழ் வாதாடு தளத்தில் இது குறித்த விளக்கங்களை கருத்துக்கணிப்புகளோடு முற்கூட்டியே முன்வைத்து, வரவிருக்கும் சிக்கலை எடுத்தியம்பி, சூழ்ச்சிப் பொறிக்குள் சிக்காதவாறு சிந்தித்துச் செயற்படுமாறு கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது தொடர்பாக, பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தால் ‘கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ள முடியுமா’ என்று 2021 ஆம் ஆண்டு நவம்பரிலும், ‘ஈழத்தமிழர் தேசத்தின் தலைமைத்துவம் தேர்தல் அரசியற் கட்சிகளுக்கு அப்பாலானது’ என்று 2022 ஆம் ஆண்டு ஜனவரியிலும் தமிழ்நெற் கட்டுரைகள் வெளியாகின. இதற்கு அப்பால், தவறிழைக்கும் தமிழ்த் தரப்புகளோடு நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய அபாய அறிவிப்புகளும் கொடுக்கப்பட்டன. ஆனால், இவற்றையெல்லாம் கூர்மையாக அவதானித்துக் கேள்வி எழுப்பி, செல்நெறியை மாற்றவல்ல அரசியற் தரப்புகளோ, சிவில் சமூக அமைப்புகளோ, மக்கள் இயக்கங்களோ ஈழத்தமிழர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் இல்லை. புலம் பெயர் சூழலிலோ பகுதிநேரச் செயற்பாட்டாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டும், படுத்துத் தூங்கிக்கொண்டும் இருப்பர். சொல்லிக் கொடுத்தாலும் புரியும் தன்மை இவர்களுக்கெல்லாம் குறைவாயிருக்கிறது. இருந்தாலும், பிள்ளையார் பிடித்த குரங்காகாதவண்ணம் மாற்றுகள் உருவாகவேண்டும். தடவழித் திருத்தத்துக்கான முயற்சிகள் தொடரப்படவேண்டும். இவ்வாறு, தமிழர்கள் எப்போதோ செய்திருக்கவேண்டிய வீட்டுவேலையை இனியாவது செய்வதற்குத் தயார்படுத்தப்பட முன், அசைபோட்டுப் பார்க்கவேண்டிய மிக முக்கியமான சில அடிப்படை விடயங்களிற் சிலவற்றையே இக்கட்டுரையிற் பார்க்கிறோம். மிகுதியை நீளமும், ஆழமும் கருதி, தொடரும் அடுத்த வெளியீடுகளில் பார்ப்பதாக இருக்கும். தற்போது, கடன்களிலிருந்து மீளுவதற்குப் பகீரதப் பிரயத்தனங்களை ஆட்சியிலிருப்போர் எவராயிருப்பினும் மேற்கொள்ளவேண்டிய நேரத்தில், அவர்களுக்குச் சிங்கள எதிர்க்கட்சிகளின் உதவியும், மற்றைய கட்சிகளின் பக்க வாசிப்பும், மக்கள் சமூகங்களின் தயவும் தேவைப்படுகிறது. ‘ஒத்துழைப்பதென்ற கதைக்கு முன்னதாக, நிறைவேற்று அதிகாரம் என்ற ஜனாதிபதி ஆட்சி முறையை அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக மாற்றிவிட்டு வா,’ என்று சிங்கள எதிர்க்கட்சிகளிற் சில சொல்லத் தலைப்பட்டுள்ளன. அதேபோல, நிபந்தனைக்கோ, பேச்சுவார்த்தை நாடகங்களுக்கோ எடுபடாது, கூட்டு உரிமைகளை உறுதிப்படுத்தும்வகையிலான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்துவிட்டு வா பார்க்கலாம் என்று சொல்லக்கூடிய ஈழத்தமிழர் இராஜதந்திர வட்டத்தையோ, துணிவையோ காணமுடியவில்லை. தமிழர் பிரதேசங்களை, வெளிச்சக்திகளுக்கு முழுமையாகத் தாரை வார்ப்பதற்கு முன்னதாக, தமது தனித்துவமான இறைமையைத் தமிழர் தரப்பு ஒன்றிணைந்த ஓர் அணுகுமுறையூடாகத் தானாக எடுத்தாள ஆரம்பிக்கவேண்டும். ‘கனடாவுக்குத் திரும்பிவராதே போய்விடு’ என்று அனுப்பிவைக்கப்பட்ட திரிபுவாதத்தின் தலைமகன் புலம்பெயர் நிதியை இணைக்கத் தயாராய் இருப்பதாகப் பேசிவருகிறார். இந்தவேளையில், எதிரியை (enemy) அறிந்துகொள்வது போல, விரோதிகளையும் (adversaries) தமிழர் தரப்பு நன்கு அறிந்து கொள்ளவேண்டும். [ஆ-ர் குறிப்பு: இந்த இரண்டு ஆங்கிலச் சொற்களையும் பிரித்து விளக்குவதற்குத் தமிழில் தகுந்த சொல் இல்லாமையால் வடமொழிச் சொல்லான விரோதி இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது] துரோகிகளை (இரண்டகர்களை) அறிவதை விட, விரோதிகளை அறிவது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முக்கியமானது. எதிரிகளை விடவும் விரோதிகளே எம்மத்தியில் அரசியல் இரண்டகர்களை உருவாக்கி வருகின்றனர். இம்முறை உருவாகியிருப்பது முன்னெப்போதும் போலன்றி ஓர் ஆழமான பொருளாதார நெருக்கடி என்பது உண்மையே. எனினும், விரோதிகளின் தேவைக்குரிய கையாளுகைக்குத் தாராளமான இடம் இன்னும் அங்கே இருக்கிறது. ஜெயசிக்குறுய் (வெற்றிநிச்சயம்) என்ற படை நடவடிக்கையின் தோல்வியை நிச்சயமாக்கி, ஆனையிறவுப் பெருந்தளத்தை முற்றுகைப் போர் மூலம் கைப்பற்றி, கட்டுநாயக்கா விமான தளத்தை அதிரவைத்தபோதும் இதைப்போன்ற நெருக்கடியே உருவாகியிருந்தது. அப்போதும், இயல்பு அரசியல் ஈழத்தமிழர் போராட்ட அரசியலை ஒரு புறம் குறிவைத்து, மறுபுறம் இன அழிப்புப் போரை இலங்கை தொடுக்கும் வரை வெளிச்சக்திகள் அதை நெறிப்படுத்தின. எல்லாம் பிழைத்துப்போய், அவர்களுக்கு வேண்டியதும் கிடைக்காது போக, எதிர்பாராது விதிவழியாய்ப் போனதே (star-crossed) என்று அமைதிப் பேச்சின் போது இணைத்தலைமை நாடுகளை வழிநடத்திய அமெரிக்கா சார்பாக ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்த தென்னாசியாவுக்கான துணை வெளியுறவு அமைச்சர் ரிச்சார்ட் ஆர்மிதேஜ், 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒஸ்லோவில் சொன்னார். இதையே காலங்காலமாக இந்திய வெளியுறவுத் துறையினரும் செய்துவருகின்றனர். இந்தக் கதையைத் தான் அடுத்த ஆட்சி மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்திவிட்டு, தமிழர்களை மீண்டும் ஒத்துப்போகச் செய்து, அதிலும் தோற்கும் போது, பைடனின் தம்பிகளும் தங்கைகளும் ஈழத்தமிழர்களுக்குத் திருப்பவும் சொல்லுவார்கள். இலங்கையில் சிங்களத் தரப்புகளிடம், தமிழ் பேசும் மக்களின் கூட்டு உரிமைகள் பற்றிய விடயத்தில் முன்னெப்போதும் போலன்றி வித்தியாசமாகச் சிந்திக்கும் தன்மை ஏதும் தோன்றியிருப்பதாகத் தெரியவில்லை. அந்த நிலை ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் கூட வெளிப்படவில்லை. எழுந்தமானமாக, சமூக வலைத்தளங்களிலே சிங்கள மக்களில் ஒருசிலர் ஆங்காங்கே வெளியிடும் கருத்துகளைப் பார்த்துவிட்டு, தமிழர்கள் சிங்கள தேசத்தை அவசரப்பட்டுக் கணிப்பிடுவது அறிவின்பாற்பட்டதல்ல. தமிழ் இன அழிப்பை ஒத்துக்கொள் என்ற வாசகத்தோடு ஒரு பெண்ணையும் ஆர்ப்பாட்டத்தில் காணக்கூடியதாயிருந்தது. ராஜபக்சாக்கள் குற்றவியல் நீதிமன்றில் அடைக்கப்படவேண்டியவர்கள் என்ற வாசகத்தையும் கறுப்பு உடை அணிந்த பெண்களின் கைகளில் எங்கோ ஓரிடத்தில் காணமுடிந்தது. இவ்வாறு வெளியாகியுள்ள ஒரு சில சமூகவலைத்தள இடுகைகளுக்கு சிங்கள மொழியில் கடும் எதிர்ப்புகளுடான பின்னூட்டங்களும் காணப்படுகின்றன. அதேவேளை, போராட்டத்திற்கு இந்த இளம் தலைமுறையினரைத் தூண்டிவிட்டு அவர்களிடம் கறுப்புக் கொடிகளைக் கொடுக்கும் ஒரு சிங்கள விரிவுரையாளரான சாந்தா சன்னஸ்கல, “இது, விடுதலைப் புலிகள் தங்கள் உறுப்பினர்களைத் தற்கொலைத் தாக்குதலுக்கு அனுப்பியபோது கொடுத்ததைப் போன்றதல்ல. இது அன்புக்கானது,” என்று கூறியவாறே கொடுக்கின்றார். இதையும் அதே சமூகவலைத்தளங்களில் காணமுடிகிறது. சமூக வலைத்தளங்களில் சிங்களவர்களின் போக்கைப் பற்றிய பார்வையைச் சொல்கின்ற அதேவேளை, ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டினர் மத்தியில் இருக்கும் சமூகவலைத்தளங்கள் பற்றிய பாதகமான பயன்பாட்டைப்பற்றிப் பார்ப்பதற்கும் தவறக்கூடாது. அதை வேறொரு சந்தர்ப்பத்தில் ஆழமாகப் பார்ப்போம். ஆனால், சமூக வலைத்தள வெளியில் சில நல்ல விடயங்களும் நடைபெறுகின்றன. அவற்றைக் கிரகிக்கும் நுட்பமான கலைநுகர்வும் அரசியல் அறிவும் தமிழ்நாட்டினரிடமும் ஈழத்தமிழர்களிடையேயும் வெகுவாகக் குறைவு. அது வளரவேண்டும். அதற்காக இரண்டு குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன. தமிழ்நாடு உலகத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலக மானுடத்துக்கே தந்துள்ள இசை மேதை ஏ. ஆர். ரஹ்மான், தமிழுக்காக அண்மையிற் தந்திருக்கும் ‘புயல் தாண்டியே விடியல்’ என்று ஆரம்பிக்கும் ‘மூப்பில்லா தமிழே தாயே’ எனும் பாடலை மீண்டும் ஒருமுறை இந்தக் கட்டுரையை வாசிப்போரிடம் கேட்டுப்பார்க்குமாறு விநயமான ஒரு வேண்டுகோள். அதன் காட்சிப்படுத்தலில், “விழுந்தோம் முன்னம் நாம்... எழுந்தோம் எப்போதும்...” எனும் கவிஞை தாமரையின் பாடல் வரிகள் எவ்வாறு நுட்பமாகச் சிவப்புக் கொடியோடும் மஞ்சள், கறுப்பு உடையணிந்த மனிதர்களோடும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கவனித்துப் புரிந்துகொள்ளும் கலை நுகர்வு தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு வருவது அவசியம். அதேபோல, அமெரிக்கப் பொருளாதார நிறுவனமாயிருப்பினும், அறியும் அவாவை முன்னிலைப்படுத்தி வித்தியாசமாகச் செய்யப்படுவதான உத்தியோடு இயக்கப்படுகிற கூரியோசிற்றிஸ்றீம் எனும் திரையோடைத் தளம் “தமிழர்கள் என்போர் யார்” என்ற தலைப்பில் கடந்தவருடம் 26 நிமிட குறுகிய, நெருக்கமான, ஆனால் கனதியான எடுத்துரைப்புள்ள வரைகலைக் காட்சி ஆவணத்தையும் தவறாது தமிழர்கள் பார்க்கவேண்டும். அவற்றைப் பார்க்காதவர்கள ஒரு முறை அவற்றைப் பார்த்துவிட்டு, இந்த நீண்ட கட்டுரைத் தொடரின் வாசிப்பைத் தொடர்வது, மூளைக்கு வளம் சேர்ப்பதாக இருக்கும். சிந்தனைக்கும் கலந்துரையாடலுக்கும் மூளைக்குப் பயிற்சி கொடுப்பதாகவும் அமையும். அவற்றின் இணைய முகவரிகள் வருமாறு: https://www.youtube.com/watch?v=JDYiJGTOFHU, https://www.youtube.com/watch?v=fh4RNP4bMWk தமிழர்கள் இலங்கை அரசுடன் பெரிய நிபந்தனைகள் எதையும் முன்வைக்காது, ஒத்துழைத்துத் தமது நலன்களைப் பையப் பையப் பெறலாம் என்று மீண்டும் இந்திய மந்திரங்கள் ஓதப்படுகின்றன. அதைப்போலவே மேலைத்தேய ஆலோசனைகளும் தமிழர்களை நோக்கிப் பறக்கின்றன. சிலர் கண்டம் விட்டுக் கண்டமாக இரகசியப் போக்குவரத்துகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் தமிழ் அரசியற்பரப்பில் தவிர்க்கமுடியாத பேர்வழிகளாகியுள்ளவர்கள் திரிபுவாதத்துக்குத் தம்மைத் தயார்ப்படுத்துகிறார்கள். புலம் பெயர் ஈழத்தமிழர்கள் நிலைதடுமாறும் நிலையில் இருக்கிறார்கள். தமிழ்நாடும், தட்டுத்தடுமாறினாலும், சிந்திக்க ஆரம்பிக்கிறது. 2022 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினால் நடாத்தப்பட்ட 9 ஆம் வருட நிகழ்வில் 16 தீர்மானங்கள் வெளியாகின. அதேபோல, ஏப்பிரல் 09 ஆம் நாள் ஒரு மாநாடு ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பால் நடாத்தப்படுகிறது. அதிலேயும் பல தீர்மானங்கள் வெளியாகவுள்ளதாக அறியக்கிடக்கிறது. இவ்வாறு, இன்னும் நடக்கவிருப்பவையும் அறிவுக்குரியவை ஆகட்டும். தமிழ்நாடு அரசையும் ஈழத்தமிழர் விடயத்தில் சரியான ஓடுபாதையில் அவை நகர்த்தட்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தம், 13 ஆம் சட்டத்திருத்தம் ஆரம்பப்புள்ளி என்று சுமந்திரன், டெலோ மற்றும் விக்னேஸ்வரன் தரப்பும், அந்த ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லை ஆனால் 13 ஆம் சட்டத்திருத்தம் ஆரம்பப்புள்ளி அல்ல என்று இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்கத் துணிவற்ற ஒரு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தரப்புமாக, விதண்டாவாத வேதாளங்கள் அனைத்துத் திசைகளிலும் முருக்கை மரங்களில் ஏறியுள்ளன. சீனாவின் கையில் இலங்கை போய்விடக்கூடாது என்று, தானாடாவிட்டாலும் தசையாடும் என்பது போல், சில தமிழர்கள் தேவைக்கு அதிகமாகப் பதற்றமடைந்து இந்திய வெளியுறவுத் துறை இலங்கை அரசோடு இணங்கியவாறு சொல்லும் மந்திரத்தை, முந்திக்கொண்டு உச்சரிப்பவற்றையும் காணமுடிகிறது. செய்யவேண்டிய வீட்டுவேலையை இதுவரைகாலும் சரிவரச் செய்யாமல் கண்மூடி இருந்துவிட்டு, பொருள் சேர்த்துக் கப்பல் விடுவோமா, வடக்கையும் கிழக்கையும் காணி வாங்குவது போல வாங்கிவிடலாமா என்று பலவிதமான கற்பனைகளில் புலம்பெயர் தரப்புகள் ஈடுபட்டுள்ளன. கற்பனைகளும் கனவுகளும் புத்தாக்கத் திறனுக்கு (creativity) அவசியமானவையே, ஆனால் அவற்றை அறிவுப் பின்னணியோடு, அதாவது விடுதலைக்கான அரசியற் சூழமைவுக்கேற்ற நுண்ணறிவும் பேரறிவும் கொண்டு, எதிரிகளையும் விரோதிகளையும் சரியாக அடையாளங் கண்டு, பலனுள்ள புத்தாக்கக் கனவுடனான வேள்விகளாக அவை அமையவேண்டும். எழுந்தமானமான முடிவுகளுக்கு அவசரப்பட்டு ஆளாகக் கூடாது. தானழிந்தாலும் பரவாயில்லை, ஈழத்தமிழர் ஒரு தேசமாக இல்லாது அழிக்கப்பட்டுவிடவேண்டும் என்ற முனைப்பிலேயே நிறுவனரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் இயங்கிவரும் இலங்கை அரசை நோக்கி, பொருளாதாரரீதியாக நட்புக்கரம் நீட்டி, அதை இறுகப்பற்றிக்கொள்ளுமாறு தமிழ்த் தரப்புகளுக்கு ஆலோசனையும் அழுத்தமும் தருகின்ற வெளிச்சக்திகளை - அவை எவையாயிருப்பினும் - முதலில் அவற்றை விரோதிகளாகப் பார்த்து, அதன் பின் அறிவுரீதியாகக் கணிப்பிட்டு அணுகும் மனப்பாங்கு தமிழர்களுக்குத் தேவைப்படுகிறது. எதிரிகளதும் விரோதிகளதும் திட்டங்களுக்கு இலகுவில் பலியாகிவிடாது, கொள்கைரீதியான அரசியலை தேவையான இடத்தில் நெளிவு சுழிவின்றியும், அதேவேளை தேவைப்படும் இடத்தில் வரம்புகளை அறிந்து இயல்பு அரசியலை அதற்கேற்பப் பயன்படுத்தும் ஆற்றலையும் கைக்கொள்ளவேண்டும். கொள்கை அரசியல் பாதிப்புறாதவாறு மட்டுமல்ல அதற்கு ஏற்றவாறு இயல்பு அரசியலை வளைத்துப் போட அல்லது எதிர்கொள்ள வல்ல திறமையோடு செயற்படவேண்டும். அந்த ஆற்றலில்லாதவர்கள் ஓய்வுநிலைக்குப் போய்விடவேண்டும். புதியவர்கள் எழ வேண்டும். அவர்களும் வரலாற்றை அறிந்து செயற்பட முன்வரவேண்டும். எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்தும் தமது இன அழிப்பு, ஆக்கிரமிப்பு, ஒற்றையாட்சி அரசை மீண்டும் சுதாகரித்து மீட்டுக்கொண்டு, ஈழத்தமிழர் மீதான நீளிய இன அழிப்பைத் தொடரும் முனைப்பிலேயே இலங்கை அரசின் இராஜதந்திரிகள் குறியாக இருப்பர் என்பதே வரலாறு புகட்டும் அரசியல் உண்மை. அப்படியானால், அதற்கான கால எல்லைகள் எவை என்பதையும் தெரிந்திருக்கவேண்டும். இதற்குப் பெரிய அறிவொன்றும் தேவையில்லை. மகாவம்ச மனநிலையின் பஞ்சாங்கத்தைத் தட்டிப்பார்த்தாலே அறிந்துகொள்ளலாம். கௌதம புத்தர் இறந்து 2500 ஆண்டுகள் நிறைவடைந்ததும் பெரியதொரு பௌத்த மறுமலர்ச்சி தோன்றும் என்றும் இலங்கைத் தீவு பௌத்த இராட்சியமாக உருவெடுக்கும் என்று சில தேரவாத பௌத்த துறவிகளிடையே பரவியிருந்த ஐதீகவாதத்தின் படி, 1956 ஆம் ஆண்டு கௌதம புத்தரின் 2500 ஆவது பரிநிர்வாண நிறைவுநாளை (இறப்புத் திதி) அண்டிய காலத்தில் ஈழத்தமிழர் தேசம் மீதான இன அழிப்பு நிகழ்ச்சிநிரல் தீவிரப்படுத்தப்பட்டது. அந்த ஐதீகத்தின் படி அடுத்த 2,500 ஆண்டுகள் பௌத்த்தின் உலக எழுச்சிக்கு இலங்கை அரசமைப்பு முக்கியமானதாகக் கருதப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் கௌதம புத்தரின் 2600 ஆம் நிர்வாண (ஞானமடைந்த திதி) நிறைவுநாள் பெரும் எடுப்பிலும், அதற்கும் இரண்டுவருடங்களுக்கு முன் நடாத்திமுடித்த இன அழிப்புப் போரின் வெற்றிக்களிப்போடு அந்த வருடம் மே மாதம் 17 ஆம் நாளாக அமைந்த வெசாக் நாள் கொண்டாடப்பட்டது. அதைப்போல, 2056 ஆம் ஆண்டை நெருங்க முன்பதாக, அதாவது 2600 ஆம் புத்த பரிநிர்வாணத்தைத் தாம் நினைவுகொள்ள முன்பதாக, ஈழத்தமிழர் இலங்கைத் தீவில் ஒரு தேசமாயிருத்தல் என்பதற்கு முற்றாகவே முடிவுகட்டிவிட வேண்டும் என்ற சிந்தனை கடும்போக்குச் சிங்களத் தேரவாத பௌத்த வட்டாரங்களிடையே மீண்டும் எழும் என்பது வரலாறு சொல்லும் முற்கூட்டிய பஞ்சாங்க எச்சரிக்கை. 1976 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரையான 33 வருடங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டம் மூலம் நடைபெற்ற முன்னேற்றகரமான பல விடயங்களில் பலரும் உணரத்தவறும் ஒரு விடயம் என்னவென்றால், ஈழத்தமிழர் தேசமாயிருத்தல் என்பதைக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஊடாக இலங்கை அரசால் அழிக்கமுடியாதிருந்தமை என்பதாகும். 2022 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த 34 வருடங்களுக்குள் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் போக்கு எப்படியிருக்கும் என்பதைப் புரிந்தவாறு, ஒற்றையாட்சிக்குள் ஆரம்பப் புள்ளிகளைத் தேடுவதும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் தூக்கிப் பிடிக்கும் தவறான வரைவிலக்கணங்களுக்குள்ளும், பிழையான வெளிநாட்டமைச்சர்களோடும் தம்மைப் பறிகொடுப்பதையும் தமிழ் அரசியற் தரப்பினர் முழுமையாக முதலில் நிறுத்தவேண்டும். அதற்கு அடியெடுத்துக்கொடுக்கும் அமெரிக்க, இந்திய மற்றும் பொருளாதாரமில்லா இலங்கை அரசின் நிதியுதவியோடு தமிழர்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்வோரும், ஊடகப் பரப்பினரும் மிகவும் ஆழமாக உற்றுநோக்கப்படுவதற்காக தெளிவான சிவப்புக் கோடு ஒன்று கீறப்படவேண்டும். உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியை, தமக்குத் தேவையான கெடுபிடி ஆக்கி பெருமளவுக்குத் தமது பன்னாட்டு அரசியல் ஆளுகைக்குள் வைத்து இலங்கையைக் கையாளுகின்ற சர்வதேசத் தரப்புகளின் அணுகுமுறையானது ஜெனீவாவில் சுருங்கி விரியும் மனித உரிமை அரசியலோடும் நெருங்கிய தொடர்புடையது. வடக்கு-கிழக்கில் நடைபெற்ற இன அழிப்புப் போரை மையமாக வைத்துக் கொண்டுவரப்பட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள், இன அழிப்பைச் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தாமல் வேண்டுமென்றே விட்டுவைத்திருப்பதைப் போலவே, வடக்கு-கிழக்கை மையப்படுத்திய கூட்டு உரிமைகள் மற்றும் சர்வதேசக் குற்றங்களுக்கான நீதிவழங்கலையும் வேண்டுமென்றே காலப் போக்கில் நழுவவிட்டு, அத் தீர்மானங்களை முழு இலங்கைத் தீவையும் பற்றிய தற்போதைய காலத்துக்கான மனித உரிமைக்கானவையாகத் தமது இயல்பு அரசியற் (Realpolitik) தேவைக்குப் பயன்படுத்துகின்றன. இயல்பு அரசியல் என்பது பல நாடுகளின் வெளியுறவுக்கொள்கைகளில் ஒன்றித்திருக்கும் ஓர் நடத்துமுறை. அது கொள்கைகளைப் பின்பற்றாது. ஆனால், விடுதலை அரசியலுக்குரிய வெளியுறவுக்கொள்கை, இயல்பு அரசியலுக்குப் பலியாகாத வண்ணம் கட்டமைக்கப்படவேண்டியது. ஜெனீவாவில் இயங்கும் மனித உரிமைப் பேரவையில் தீர்மானப் பொறிமுறை (Resolution mechanism) என்பது வேறு, முழுநாட்டுக்குமான மனித உரிமை மதிப்பீட்டுக்கான ‘காலவரையறைகொண்ட முழுநிறை ஆய்வு’ (Universal Periodic Review, UPR mechanism) எனும் பொறிமுறை வேறு. பின்னையதில் நான்கரை ஆண்டுகளுக்கொருமுறை செய்யவேண்டியதை எல்லாம், இலங்கை விடயத்தில் மனித உரிமை ஆணையரின், பேரவைத் தீர்மானத்தின் பாற்பட்ட வருடாந்த அறிக்கையிடலுக்குள்ளே, நிகழ்ச்சிநிரல் இரண்டுக்குள் கொண்டுவந்து அத்தீர்மானத்தின் வலுவை மேலும் குறைத்து, ஒவ்வொரு வருடமும் கையாள்வதற்குரிய வாய்ப்பை இயல்பு அரசியல் திசைதிருப்பிக் கையாள்கிறது. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா “Promoting reconciliation and accountability in Sri Lanka” என்ற தலைப்பிற் கொண்டுவந்து, இந்தியாவும் ‘ஆம்’ என்று வாக்களித்த 19/2 என்ற தீர்மானத்திலேயே, மாகாணசபை விடயமே அரசியற்தீர்வாக (reach a political settlement on the devolution of power to the provinces) முன்வைக்கப்பட்டிருந்தது . அதே வார்த்தைப் பிரயோகமே, அடுத்ததாக 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட அதே தலைப்பிலான 22/1 தீர்மானத்திலும் இருந்தது. இந்தியாவும் மீண்டும் ‘ஆம்’ என்றே வாக்களித்தது. ஆனால், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டுவந்த 25/1 தீர்மானம், தனது தலைப்பில் ‘மனித உரிமைகள்’ என்பதையும் புதிதாகச் சேர்த்துக்கொண்டு, அதை“Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka” என்று மாற்றியது. அதேவேளை, மாகாணசபைக்கான அதிகாரப்பரவலாக்கம் என்பதையும் முன்போலவே வலியுறுத்தியதோடு, மேலதிகமாக 13 ஆம் திருத்தச் சட்டம் என்பதையும் பெயரிட்டுக் குறிப்பிட்டுக் காட்டியது. அதற்கும் அப்பால், இலங்கை அரசையே தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முன்போலவே வலியுறுத்தினாலும், மனித உரிமை ஆணையரின் அலுவலகத்திடம் இலங்கையில் நடைபெற்ற சர்வதேசக் குற்றங்கள் தொடர்பாக விபரமான புலனாய்வு விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டது. இந்த இறுதிவிடயத்திலே இந்தியாவுக்குச் சம்மதம் இருக்கவில்லை. ஆகவே தீர்மானத்துக்கு ‘ஆம்’ என்றோ ‘இல்லை’ என்றோ வாக்களிக்காது, இந்தியா அமெரிக்காவைத் தழுவும் அதேவேளை நழுவவும் செய்தது. ஆட்சிமாற்றத்தின் பின், 2015 ஒக்ரோபரில் நிறைவேறிய 30/1 தீர்மானத்தை அமெரிக்காவோடு இலங்கையும் சேர்ந்தே கொண்டுவந்திருந்தன. வாக்கெடுப்பின்றி நிறைவேறிய தீர்மானமாக அதுவும், அதை மேலும் நீடித்த 2017 மார்ச் மாத 34/1 தீர்மானமும், 2019 மார்ச் மாத 40/1 தீர்மானமும் மீண்டும்-மீண்டும்-மீண்டும் இலங்கையோடு சேர்ந்து அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானங்களாக அமைந்திருந்தன. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்காத சூழலில், பிரித்தானியாவின் தலைமையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் அதிகாரப் பரவலாக்கம் என்பதோடும், 13 ஆம் சட்டத்திருத்தம் என்பதோடும், வடக்கு கிழக்கு மாகாண சபைகள் என்ற இரண்டுக்கான தேர்தல் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இருந்தபோதும், சாட்சியம் திரட்டும் பொறிமுறை ஒன்று பற்றிக் குறிப்பிடப்பட்டமையால் இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவாக உரையாற்றியபோதும், 2014 ஆம் ஆண்டு மார்ச்சில் நடந்துகொண்டது போல, வாக்களிக்காது தவிர்த்துக்கொண்டது. இவ்வாறு பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே ஒரே ஓர் அரசியல் தீர்வாக இருக்கமுடியும் என்பதாக, இந்தியாவும் மேற்குலகும் இணைந்து வழிநடத்தும் அணுகுமுறையையே 2012 ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைப் பேரவைத் தீர்மான அணுகுமுறை எடுத்தாண்டுவருகிறது. இந்தியா வாக்களிக்காது இரு முறை தவிர்த்தமைக்கு உள்நாட்டு விடயங்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அலுவலகம் தலையிடுவது தொடர்பாக, காஷ்மீர் போன்ற விவகாரங்களால், அது மேற்கொண்டிருக்கும் ‘கொள்கை-ரீதியான’ நிலைப்பாடே காரணம். அதற்கப்பால், இந்தியா மேற்கோடு இணைந்தே இலங்கை தொடர்பான மனித உரிமை விடயங்களை இதுவரை கையாண்டுவருகிறது என்பது துல்லியமாகத் தெரிகின்ற உண்மை. இந்தத் தீர்மானங்கள் 2014 மார்ச்சில் இருந்து கடந்தகாலச் சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் என்பதற்கு அப்பால் அவ்வப்போதைய மனித உரிமைகளுக்கே முன்னுரிமை கொடுப்பனவாக அமைந்துள்ளன. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அலுவலக விசாரணை அறிக்கையும் இன அழிப்பைப் பார்ப்பதற்கான வலுவான ஆணையோடு மேற்கொள்ளப்படவில்லை. இந்த அணுகுமுறையையும் இந்தியா மற்றும் மேற்குலகம் இணைந்தே கையாண்டன. இன அழிப்புக் குற்றத்தை முதலாவதாகப் பார்க்கவேண்டும் என்ற விருப்பு, பேரவைக்குள் மட்டுமல்ல ஆணையர் மட்டத்திலும் இருக்கவில்லை. எனினும், இது புலம் பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளின் படுதோல்வியையே இன்னொரு வகையில் எடுத்தியம்புகிறது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையை நோக்கியும் தெளிவான, ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறையோடு தமிழர்கள் செயற்படலாம். ஆனால், அந்த அறிவைப் பெற்றுக்கொள்ளாது தான்தோன்றித்தனமாகச் செயற்படும் போக்கையே அங்கு காணமுடிகிறது. எனினும் ஒரு சிலராவது சரியான வழிமுறைக்கு ஊக்கம் தருபவர்களாக அமைந்திருப்பதைத் தமிழ் வாதாடு தளத்தின் செயற்பாட்டுத்தளம் கடந்த மார்ச் மாதம் உறுதிசெய்துகொண்டுள்ளது. இந்த மாற்று அணுகுமுறையைக் கனடா எனும் நாட்டின் ஊடாக, அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் அமைப்புகள் நினைத்தால், ஒன்றுபட்டுச் சாதிக்கமுடியும். ஆனால், அதற்கான முன்னெடுப்புகள் எல்லாம் வெறும் சூம் கூட்டங்களோடும், நிதிசேகரிப்புகளோடும் குறிதவறிச் சென்றுவிடுகின்றன. குறிதவறும் சட்டநடவடிக்கைச் சுப்பரின் கொல்லைக்குள்ளேயே அங்கிருக்கும் அமைப்புகள் இலக்கின்றிப் பயணித்துக்கொண்டிருக்கின்றன. ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்துக்கு ஆதரவான முன்னணி அரசியல்வாதியோ, கனடியத் தமிழர் பேரவையோ மட்டுமல்ல, கனடியத் தேசியத் தமிழர் பேரவையும், அதுவும் தவறான இந்திய வழிகாட்டலுக்கு உள்ளாகி, தவறிப்போயிருப்பதை நன்றாகவே அவதானிக்கமுடிகிறது. அதேவேளை, முன்னைநாள் செயற்பாட்டாளர்கள் சிலர் கனடியப் புலனாய்வின் கையாளுகைக்குள் போயிருப்பதும் தெரிகிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எனும் அமைப்பினரும் தாம் வெளிப்படுத்தும் கொள்கைக்கு நிகராகச் செயற்படும் ஆற்றல் அற்றவர்களாகவே தம்மைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உறுப்புரை 1.4 ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை அங்கீகரிப்பதாக மிகைப்படுத்தி அறிக்கை கொடுப்பவர்களாக ஆகியுள்ளனர். இந்த அமைப்புகள் அனைத்தையும் தடவழித் திருத்தத்துக்கு (course-correction) உள்ளாக்குவதற்கு மக்கள் மட்டத்தில் ஒரு புதிய விழிப்புணர்வும், எழுச்சியும் அதன்பாற்பட்ட வேள்வியும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல, தற்போது ஐ.நா. பேரவையில் முன்னெடுக்கப்படும் பொறுப்புக்கூறற் சாட்சியப் பொறிமுறைக்குள் கூட, இன அழிப்புக்கான சாட்சியங்களை முன்வைத்தும், பலமான கோரிக்கைகளை முன்வைத்தும், குறைந்தபட்சம் ஆணையரை ஆதல் இன அழிப்பு புலன் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற தேவையை, அல்லது குறைந்தபட்சம் அதற்கான ஓர் உண்மை கண்டறியும் குழுவையாவது நியமிக்குமாறு கோரும் வகையில் செயற்படமுடியும். அதையும் பல நாடுகளிலுள்ள புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் கோட்டை விட்டிருக்கிறார்கள். எது எவ்வாறிருப்பினும், முழுத்தீவுக்குமான தற்கால மனித உரிமைப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக, அதுவும் வேறொரு பொறிமுறைக்குள் வைத்துக் கையாளவேண்டியதை பொறுப்புக்கூறலோடு சேர்த்துக் கையாள்வதாகவே மனித உரிமைப் பேரவையின் போக்கு அமைந்துள்ளது என்பது குறிப்பாக அவதானிக்கப்படவேண்டியது. இந்தப் போக்கை மாற்றியமைக்க இயலாது என்று வாளாவிருக்காமல், இலக்குடனான செயற்பாடு தெளிவாக உருவாகவேண்டும். இதுகுறித்த மேலதிக தெளிவுபடுத்தல் தமிழ் அரசியற்பரப்புக்குத் தேவைப்படுகிறது. ஜெனீவா மனித உரிமை அவையில் விரியும் அரசியலில் இருந்து, இலங்கையின் பொருளாதார நெருக்கடி வரை, இந்திய-இலங்கை ஒப்பந்தச் சிந்தனையிலேயே இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், அதன் பெயரை உச்சரிக்காது செயற்பட்டுவருகிறார். ஜய்சங்கர் இலங்கை இராஜதந்திரிகளுடன், குறிப்பாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் மிலிந்த மொறாகொடவுடன், 13 ஆம் சட்டத்திருத்தம் எனும் அரசியலமைப்புத் தீர்வுக்கு மேலே தமிழர் கோரிக்கையோ தீர்வோ போகமுடியாது என்றவாறு இணங்கியிருப்பதைத் தமக்கு முன் விரிபவற்றை நுண்ணறிவோடு புரிந்துகொள்ளக்கூடியவர்களால் அடையாளங் காணமுடியும். அவ்வாறு அடையாளங் காணும்போது, மேற்கு இந்தியாவோடு இணைந்தே செயற்படுகிறது என்பதும் அங்கே தெளிவாகத் தெரியவரும். இந்தத் தெளிவுறு நிலையிற் தான், ஈழத்தமிழர் சார்ந்த இந்திய வெளியுறவுக்கொள்கை மாறியே ஆகவேண்டும் என்ற தெளிவான கோரிக்கைகளுடனான அழுத்தம் தமிழ்நாட்டில் இருந்து எழவேண்டிய தேவை எழுந்துள்ளது என்ற செய்தி சொல்லப்படுகிறது. இதைச் சரியாக எடுத்தியம்பி, துணிச்சலோடு சுட்டிக்காட்டுவது இந்தியாவிடம் மண்டியிடுவதல்ல! தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய இராணுவத்தோடு போர்புரிந்து கொண்டிருந்த வேளையிலும் மறுபுறம் இந்தியப் பிரதமருக்குக் கோரிக்கைக் கடிதங்களை வரைந்துகொண்டுதான் இருந்தார்கள் என்பதை இங்கு பலருக்கு நினைவூட்டவேண்டியிருக்கிறது. இந்திய ஒன்றிய அரசு, அதிலும் குறிப்பாகத் தற்போதைய வெளிநாட்டமைச்சு, ஈழத்தமிழர் விடுதலை அரசியலைப் பொறுத்தவரை இந்தியாவை விரோதியாகவே அடையாளம் காட்டியுள்ளது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லை என்றும் அதற்குக் காரணம் அதிலுள்ள இந்தியாவுக்குரிய கேந்திர பாதுகாப்பு விடயங்களில் ஈழத்தமிழர்களுக்குக் கருத்து முரண்பாடு இல்லை என்று வாதிடுவதும் விதண்டாவாதமே அன்றி வேறொன்றுமல்ல. அதைப் போலவே இந்திய-இலஙகை ஒப்பந்தத்தின் உறுப்புரைகளை எடுத்தாள்வது மண்டியிடல் அன்றி வேறொன்றுமல்ல. மண்டியிட்டுப் பேசப்படுவதல்ல விடுதலை அரசியல். இயல்பு அரசியல் அப்படியிருக்கிறது என்பதற்காக தமிழர் தரப்பின் நெகிழ்ச்சித்தன்மை விடுதலை அரசியலின் வரம்பு மீறியதாக இருக்கவேண்டியதில்லை. எனவே, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இந்தக் கட்டுரையை இது வரை பொறுமையாக வாசிப்பவர்கள் ஒருமுறை முழுமையாக மீண்டும் வாசிக்கவேண்டும். அப்போது தான் அது முற்றிலும் கோணல் என்பது புரியும். ஒரு விடயத்தை எழுதுபவன் தவறானவன் என்றால் விடயமும் தவறாகவே இருக்கும். ஒஸ்லோத் தீர்மானத்தை மிலிந்த மொராகொடவும் எரிக் சொல்ஹெய்மும் எழுதிய போது அங்கே நுட்பமான பொறி ஈழத்தமிழர் விடுதலை அரசியலுக்கு வைக்கப்பட்டது. அதையும் விடக் கேவலமான பொறியை யாழ் நூலகத்தையே துவம்சம் செய்வதற்கான கட்டளையைப் பிறப்பித்தவராக ஈழத்தமிழர்களால் குற்றம்சாட்டப்பட்டுவந்த மறைந்த காமினி திசாநாயக்கா, ஈழத்தமிழர் விடுதலை அரசியலுக்கெதிரான பேர்வழியாகத் தன்னைத் தெளிவாகவே இனங்காட்டிய ஜே. என். டிக்சிற் என்பவருடன் சேர்ந்து எழுதிய ஒப்பந்தம் அது. அது எவ்வாறு சரியாகவும், நிராகரிக்க முடியாததாகவும் இருக்கமுடியும் என்பது விடுதலை அரசியலின் ஆழமும் நுணுக்கமும் தெரியாமலே கேட்கப்படக்கூடிய கேள்வி. இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கையின் முழுத்தீவுக்குமான ஒருமையான இறைமையை எந்தவித நிபந்தனையுமில்லாது அங்கீகரிக்கிறது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு எதிராகவும், திம்புத் தீர்மானத்தின் இரண்டாவது எல்லைக்கட்டையும் மீறித் தனது 1.1 ஆம் உறுப்புரையில் ‘வேட்போடு’ அதைத் தெரிவிக்கிறது. காமினியும் டிக்சிற்றும் சாதாரணமாக எழுதவில்லை, வேட்போடு எழுதிய ஒப்பந்தம் அது! அடுத்தபடியாக, தனித்துவமான தேசமாக ஈழத்தமிழர்களைத் தான் அங்கீகரிக்கவில்லை என்று, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மட்டுமல்ல திம்புக்கோட்பாடுகளின் முதலாவது எல்லை வரம்பையும் மீறி, தீவில் ‘பல்லின மற்றும் பன்மொழிப் பன்மைத்துவ குமுகாயம்’ இருப்பதாக மட்டுமே உறுப்புரை 1.2 ‘ஒப்புக்’ கொள்கிறது. இப்படியே தொடரும் ஒவ்வொரு உறுப்புரைகளும் நுட்பமான நச்சுத்தன்மை கொண்டவை. உறுப்புரை 1.3 திம்புக்கோட்பாடுகளின் மூன்றாவது எல்லையைக் ‘கவனமாக’ மீறுகிறது. உறுப்புரை 1.4 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும், திம்புக்கோட்பாடுகளின் முக்கியமான மூன்று எல்லைகளையும் ஒரே அடியில் அணைப்பது போல் அடித்துப்போட்டுவிடுகிறது. ஈழத்தமிழர் தேசத்துக்கான வரலாற்றுத் தாய்நாடோ தந்தையர் நாடோ இல்லை, தமிழ் பேசும் மக்கள் சிங்களம் உள்ளிட்ட வேறு இனக்குழுமங்ககேளாடு வடக்கு கிழக்கு மாகாணங்களை வரலாற்று வாழிடங்களாகக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை அங்கீகரிக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல, இதையே டி. எஸ். சேனநாயக்கா 1944 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவோடு சேர்ந்து அங்கீகரித்திருந்தார், பண்டா-செல்வா, டட்லி-செல்வா போன்ற ஒப்பந்தங்கள் செய்திருந்தன, பின்னர் அவை ஒற்றையாட்சிக்குள் பின்னர் கிழிக்கப்பட்டன. அதைப் போலவே 1.4 எனும் மிக மட்டுப்படுத்தப்பட்ட உறுப்புரை ஒற்றையாட்சிக்குள் எப்போதே செத்துவிட்டது. அடுத்த உறுப்புரையான 1.5 மேலும் இலங்கையின் இறைமைசார் ஏகத்துவத்தை எடுத்தாள்கிறது. இப்படியே, இரண்டாம் மூன்றாம் உறுப்புரைகளுக்குள் அடங்குகின்ற அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற முதலாம் உறுப்புரை ஒட்டுமொத்தமாக அமைந்திருக்கிறது. முதற்கோணலே முற்றும் கோணல் என்பதாக காமினியும் டிக்சிற்றும் எழுதிய ஒப்பந்தம் அல்லவா அது! கிழக்கு மாகாணத்தில் மட்டும் பொதுவாக்கெடுப்புச் செய்து வடக்கோடு இணையலாம் என்று திம்புக் கோட்பாடுகளின் இரண்டாம் எல்லைக்கட்டை அறுக்கிறது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் உறுப்புரை 2.3. அந்த ஒப்பந்தம் பௌத்த மதத்திற்கு இலங்கை அரசியலமைப்பு வடக்கு-கிழக்கிலும் முன்னுரிமை வழங்கியிருப்பதை மறுக்கவில்லை. அதைப்போல சிங்களம் உத்தியோகபூர்வ மொழி என்று சொல்லிவிட்டு, அடுத்த வசனத்திலேயே ஆங்கிலமும் தமிழும் கூட உத்தியோக மொழிகள் என்று உறுப்புரை 2.18 இல் சொல்கிறது. இவ்வாறு இரண்டு வசனங்களாகப் பிரித்துச் சொல்லப்படுவதை, இலங்கை உச்ச நீதிமன்றம் சிங்கள மொழிக்கு முதன்மை என்றே பொருள்கோடல் செய்யும் வாய்ப்பு தாராளமாகவே இருக்கிறது. இவ்வாறு மொழியும், மதமும் சிங்களமும் பௌத்தமுமாக முன்னுரிமையை மறுக்காத ஒப்பந்தம் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை முழுமையாக நிராகரிப்பதாக உறுப்புரை 2.16 அமைந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே இந்திய ஒத்துழைப்பை 2009 ஆண்டு மே மாதம் வரை இலங்கைக்கு வழங்கியது. மூன்றாம் உறுப்பிரையோ பின்னிணைப்பும் ஒப்பந்தத்தின் ஓரங்கம் என்று சொல்கிறது. அப்பின்னிணைப்பின் இறுதியான ஆறாவது உறுப்புரையில், அதாவது உறுப்புரை 3.6 இல், இந்திய அமைதிப்படையின் தளபதியாக இலங்கை ஜனாதிபதியைக் குறிப்பிட்டு, குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட தளபதிகள் கைதுசெய்யப்படுவதற்கும் அவர்கள் உயிரிழப்பதற்கும் அதுவே காரணமாகியது. அதேவேளை, இந்த உறுப்புரையின் காரணத்தினாலாயே இறுதியில் பிரேமதாசாவின் கட்டளைக்கிணங்க அந்தப் படை வெளியேறவேண்டியும் இருந்தது. இந்த உறுப்புரையால் ஏற்பட்ட அவமானத்தினால் தான் இன்றுகூட இந்திய-இலங்கை ஒப்பந்தம் சட்டரீதியாக ஒரு சர்வதேச ஒப்பந்தம் என்று இந்திய அரசு சொல்லமுடியாது தவி(ர்)க்கிறது. ஆனால், ஈழத்தமிழர்கள் மட்டும் இப்படி ஒரு சர்வதேச ஒப்பந்தம் இன்னும் இருப்பதாகவும் அதன் உறுப்புரை 1.4 ஏதோ தமிழர் தாயகத்தை அங்கீகரிப்பதாகவும், நம்பி ஏமாந்துகொண்டிருக்கவேண்டும் என்றும் இந்தியா எதிர்பார்க்கிறது. ஏன், அப்படி அறிக்கை விடும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமைச்சர் என்று சட்டம் தெரிந்த ஒருவர் இருக்கும் போது, இந்தியா இப்படியெல்லாம் எதிர்பார்ப்பதில் வியப்பேதும் இல்லை. ஒப்பந்தத்துக்கு அப்பால், இரண்டு நாடுகளின் தலைவர்களும் பரிமாறிக்கொண்ட கடிதங்களிலேயே இந்தியா-இலங்கை ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு விடயம் கையாளப்பட்டுள்ளது. அந்தக் கடிதப்பரிமாற்றங்கள் ஒப்பந்தத்தின் பின்னிணைப்பு என்று ஒப்பந்தம் சொல்லவில்லை. ஆக, பூதக் கண்ணாடியால் துருவித் துருவி ஆராய்ந்தாலும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உறுப்புரை எதிலும் இந்தியாவின் புவிசார் பாதுகாப்புக்குரிய விடயம் எதுவும் கிடையாது. நிலைமை இவ்வாறிருக்க, அந்தவகையில் தான் தாம் அந்த ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லை என்று சட்டம் கற்ற விதண்டாவாதத்தை முன்வைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ‘தலைவர்’ தமிழர்களுக்கு அபத்த அரசியல் கற்பிக்க முயல்கையில் இந்தியாவின் ஜய்சங்கர் அவ்வாறு எதிர்பார்ப்பதில் வியப்பு இல்லைத்தான். ஜய்சங்கர் மட்டுமல்ல, இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தமிழர் விடயத்தில் இந்தியா சார்பாக ஈடுபட்ட பூரி என்பவரும் டிக்சிற்றுக்குக் கீழே கடமையாற்றியவர். அந்த ஹர்தீப் சிங் பூரியே தற்போதைய பெற்றோலிய அமைச்சர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை சுதுமலையில் இருந்து இந்தியா கொண்டு செல்வதில் நேரடியாக ஈடுபட்டவர் பூரி. இன்று, ஜய்சங்கரும் பூரியும் காங்கிரஸ் அரசில் அல்ல, பாரதீய ஜனதாக் கட்சி அரசில் முக்கியமான இரண்டு அமைச்சர்கள். இப்படித்தான் காங்கிரஸ் காலத்தில் கொண்டுவந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் பாரதீய ஜனாதாக் கட்சிக்குள் சாத்தான்கள் ஒளித்திருந்து ஓதும் ஒரு தொடர் வேதமந்திரமாகியுள்ளது. இவ்வாறான இந்திய அணுகுமுறையை இந்தியப் பிரதமர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று புலம் பெயர் தேசத்தில், பாரிசில் இருந்து இயங்கும் மனித உரிமை அமைப்பு கடிதம் ஒன்றை 2022 ஜனவரி 26 ஆம் நாள் பிரதமர் மோடிக்கு கடந்த இந்தியக் குடியரசு தினத்தன்று அனுப்பியிருந்தது. அதைப்போலவே, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் ஒரு தெளிவான கோரிக்கை மடலை 2022 பெப்ரவரி 15 ஆம் நாளன்று இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைத்திருந்தார். இது ஒரு முன்னுதாரணமான செயற்பாடு. அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளும், மக்கள் இயக்கங்களும் அதன் தார்ப்பரியத்தைப் புரிந்துகொள்வதற்கு முதலில் அதைப் படிக்கவேண்டும். அதற்காக, இந்தக் கட்டுரையில் அந்தக் கடிதங்கள் இணைக்கப்படுகின்றன. தற்போது, தமிழ்நாட்டில் ஈழ ஆதரவுத்தளத்தில் கோரிக்கைகள் ஓரளவுக்கு தெளிவாக மீண்டும் எடுத்தாளப்பட ஆரம்பிக்கப்படுவது தெரிகிறது. பல காலமாக ஈழத்தமிழர் விடுதலை அரசியல் தொடர்பான தொடர்ச்சியான எடுத்துரைப்பு ஈழத்தமிழர்களால் அங்கு சரியாக முன்வைக்கப்படாதமையால், மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவே அங்கு காணப்படுகிறது. இது தொடர்பான ஆக்கபூர்வமான புதிய முயற்சிகளை தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு, ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆகியன முன்னெடுக்க ஆரம்பித்திருப்பது வரவேற்புக்குரியது. இலங்கை ஒற்றையாட்சி, இந்திய-இலங்கை ஒப்பந்தம், அவற்றுக்கப்பால் புவிசார் அரசியலின் தூண்டுதலால் ஏற்பட்டுள்ள மனித உரிமை அரசியல், கெடுபிடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதார நெருக்கடி என்பவை எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புபட்டவை என்பதை ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்களும் தமிழ்நாட்டுச் செயற்பாட்டாளர்களும் ஆழமகாப் புரிந்திருப்பதும் உணர்ந்திருப்பதும் அவசியம். அவற்றுக்கு அப்பால் சிவப்புக் கோடு எங்கே இருக்கிறது என்பதை எவ்வாறு உணர்ந்துகொள்வது என்பதற்கான அறிவும் அவசியம். 1985 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்ட இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து முன்வைத்த திம்புக்கோட்பாடுகள் நான்கு அடிப்படைகளை இந்திய அரசுக்கு ஈழத்தமிழர் விடுதலை அரசியலின் நெகிழ்ச்சித்தன்மையின் எல்லைகளைச் சுட்டிக்காட்டுவனவாக அமைந்திருந்தன. அவையாவன:
மேற்குறித்த கோரிக்கைகளில் குறைந்தது ஒரு சொற்பிழை இருக்கிறது. இந்தக் கோட்பாட்டை வாசித்த இலங்கை அரசின் பிரதிநிதி, அதைத் தனது வாதத்துக்குச் சார்பாக எடுத்து வாதிட்டார். அப்போது தமிழர் தரப்பு அதன் உண்மையான அர்த்தத்தை கூட்டத்தொடரில் தெளிவுபடுத்தவேண்டியிருந்தது. அதாவது, nation என்பது வேறு nationality என்பது வேறு அர்த்தமுடையது என்பதே அந்தச் சொற்சிக்கல். முன்னையதன் பொருளிலேயே பின்னைய சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தெளிவையே அங்கு தமிழர் தரப்பினர் தமது உரைகளில் சுட்டிக்காட்டவேண்டி ஏற்பட்டது. இவ்வாறான சொற்கள் கோரிக்கைகளிலே முன்வைக்கப்படும் போது சட்டப் பார்வையில் அவை அணுகப்படவேண்டும். அங்கே பல சட்டத்தரணிகள் இருந்த போதும் குறித்த சொல்லைத் தவறவிட்டிருந்தனர். எனவே, கோரிக்கைகள் எழுதப்படும் போது மிகவும் தெளிவான நிலையில் இருந்து அவை எழுதப்படவேண்டும். நான்காம் கோரிக்கை 1995 ஆம் ஆண்டளவில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஈழத்தமிழர்களின் அரசியல் வேணவாவை வரையறுக்கிறது. அதற்கான நியாயப்பாட்டை முன்வைக்கிறது. அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் இணைத்துப் பார்த்தால், தேவையான வரைவிலக்கணங்கள் அனைத்தும் பெறப்படும். மக்களின் ஜனநாயக ஆணையைப் பெற்ற அரசியல் வேணவா அது. வட்டுக்கோட்டைத் தீர்மானமும் 1977 தேர்தல் விஞ்ஞாபனமும் இலக்கையும், அதன் நியாயப்பாட்டையும் வரைவிலக்கணங்களையும் வழிமுறைகளையும் முன்வைக்கின்றவென்றால், திம்புக் கோட்பாடுகள் ஈழத்தமிழர் தேசியச் சிக்கலுக்கான அரசியற் தீர்வை, ஆரம்பம், இடைக்காலம் அல்லது இறுதித் தீர்வு என்ற எந்த அடிப்படைகளில் எதிரியோ அல்லது மூன்றாம் தரப்போ, எவர் எப்போது எதை முன்வைத்தாலும், அந்தத் தீர்வு தமிழ்த் தரப்பால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான எல்லைகளை, நெகிழ்ச்சித்தன்மையின் எல்லைகளாகக் குறிக்கின்றது. அடுத்ததாக, தமிழீழ விடுதலைப் புலிகள் 2003 ஆம் ஆண்டு முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபு. அது வட்டுக்கோட்டையை எடுத்தாள்கிறது. திம்புவைத் தவிர்த்துவிடுகிறது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தோடு ஒத்துப்போகக் கூடிய இடைக்காலத் தீர்வாக அது அமைகிறது. இறுதியாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் 08 ஜூன் 2011, 27 மார்ச் 2013, 24 ஒக்டோபர் 2013, 16 செப்டம்பர் 2015 ஆகிய நான்கு தடவைகள் கொண்டுவந்து, சட்டசபை அமர்விற் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றிய நான்கு தீர்மானங்களின் மூன்று வலுவான கோரிக்கைகளாகப் பின்வருபவற்றைப் பார்க்கலாம்:
ஆக, சுருங்கக்கூறினால், தமிழ்நாடு தெரிந்திருக்கவேண்டிய ஈழத்தமிழர் நிலைப்பாடு தொடர்பான சமன்பாடு வருமாறு: 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் + 1977 தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் விஞ்ஞாபனம் + திம்புக்கோட்பாடுகள் (3) + தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைத் திட்ட வரைபு + தமிழக சட்டசபையின் முக்கிய கோரிக்கைகள் (3). இவற்றைத் தவிர ஈழத்தில் இருந்தோ, புலம்பெயர் சூழலில் இருந்தோ எவரும் எதுவும் தமிழ்நாட்டுக்குச் சொல்லவேண்டியதில்லை. சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலும், இடது சாரிய வரலாறும், மதசார்புக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் அப்பாற்படும் பெரியாரிய, திராவிட இயக்கங்களின் பாரம்பரியமும், தமிழ்த் தேசியச் சிந்தனையும் என்று பலவிதமான சிந்தனை ஊற்றுகளின் பாற்பட்டும் நீண்ட நெடிய தமிழ் நாகரிகத்தின் மாண்பும் கொண்ட தமிழகம் சுயமாகச் சிந்தித்து, ஆழமாக இயங்கவேண்டும். இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை மாற்றவேண்டும். ஒரு வகையில் தமிழகச் சட்டசபைத் தீர்மானங்கள் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சார்ந்த போராட்டங்களினால் தமிழ்நாட்டு அரசியற் பரப்பில் ஏற்பட்ட அறிவார்ந்த விளைவே. அதன் கனதியும் முக்கியத்துவமும் தமிழ்நாட்டின் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னான எந்த ஒரு செயற்பாட்டாளர்களின் வகிபாகத்துக்கும் மேலானது. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தனது எதிரிகளாகவே ஒரு காலத்தில் நோக்கிவந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டசபையில் இயற்றிய நான்கு தீர்மானங்களும் அனைவராலும் மீண்டும் வாசிப்புக்கு உட்படுத்தப்படவேண்டியவை. அவர் தொடர்ச்சியாக வரைந்த கடிதங்களும் ஆழமானவை. அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலறி கிளின்டன் தமிழக முதல்வரை 2011 ஜூலை மாதம் சந்தித்து நட்புப் பாராட்டியிருந்த போதும், 2012 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க முன்னெடுப்பு இன அழிப்பு விசாரணையைக் கோராமல், போரின் இரண்டு தரப்புகளையும் போர்க்குற்றங்களிலும் மனிதத்துக்கெதிரான குற்றங்களில் சமப்படுத்தி தனது கேந்திர நலன்களை மட்டும் அடைய முற்படும் தேவையோடு மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தீர்மானங்களைப் பயன்படுத்தி, இறுதியில் இலங்கையோடு சேர்ந்து உள்ளக விசாரணைக்கும் ஒத்துக்கொள்ளும் சூழல் உருவாகியபோது அதற்கு மாற்றான கருத்தையும் ஜெயலலிதா முன்வைத்தார் என்பது வெளியுறவுப் பார்வையில் மிகவும் கனதியானது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னால் தமிழ் நாட்டில் நடைபெற்ற பல நடவடிக்கைகளுக்குப் பின்னால் இடது சாரிக் கட்சிகள், மக்கள் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மற்றும் அவற்றையும் தாண்டிக் கூர்மைப்படுத்தப்பட்ட ஓர் இயங்கியல் போக்கு இருந்து. இந்த இயங்கியற் போக்குக்கு புலம்பெயர் ஈழத்தமிழர்களால் வட்டுக்கோட்டை மீள்வாக்கெடுப்பு என்ற 2009-2011 வரையான வேலைத்திட்டமும், ஐ.நா. நீதிப்பொறிமுறைக்கு மாற்றான, மக்கள் தீர்ப்பாயப் பொறிமுறையின் அரும்பெரும் முயற்சியால் (Dublin and Bremen sessions of the Public Peoples’ Tribunal on Sri Lanka) வெளியான தீர்ப்புகளும் இடதுசாரிய மரபிலும் ஊற்றுக்கொண்டவை. அதேபோல, இந்த இயங்கியலுக்கு வேறு பரிமாணங்களும் இருந்தன. அவற்றிற் சிலவற்றையும் இங்கு நோக்கவேண்டும். 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்திய ராஜ்ய சபையின் தமிழ்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் என்பவர், ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளை புதுடில்லிக்கு அழைத்து பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை தீர்வுக்கான சட்டகமாக எடுத்துக்கொள்ளவைக்கப் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டார். இருந்தபோதும், அவரின் நோக்கத்துக்கு மாறாக, ஈழத்தமிழர் கட்சிகள் பெரும்பான்மை நிலைப்பாட்டை மேற்கொண்ட சூழலில், அதிலே தலையிட்டு பதின்மூன்றாம் சட்டத்திருத்த எல்லைக்கு அப்பாற் செல்லவேண்டாம் என்று அவரே வலியுறுத்தவும், அதற்குச் சிலர் பலியாகவும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாட்டின் ஈழத்தமிழர் விடுதலை அரசியலில் ஈடுபடுபவர்கள் ஆழமாக அறிந்திருக்கவேண்டும். அசைபோட்டுப்பார்க்கவேண்டும். அதைப்போலவே, 2012 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த டெசோ மாநாடு குறித்து இந்திய வெளிநாட்டமைச்சு எடுத்த நிலைப்பாடும், அந்த டெசோ மாநாடு ஈழத்தமிழர்களால் எவ்வாறு அணுகப்பட்டது என்பதும் கவனிக்கப்படவேண்டியவை. பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்துக்கு முரண்படாத நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டும் என்று ஒருபுறம் அரச சக்திகளின் அழுத்தமும், மறுபுறம் அவ்வாறான அழுத்தத்துக்குப் பலியாகக் கூடாது என்ற ஈழத்தமிழர் நிலைப்பாடு சொல்லப்பட்டதும் தெரிந்திருக்கவேண்டிய வரலாறு. ‘ஈழம்’ என்ற சொல்லையே பயன்படுத்தவேண்டாம் என்று டெசோவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தும் நிலை கூடத் தென்பட்டது. இவ்வாறு, தமிழ்நாட்டின் மீது வெளியுறவுக் கொள்கை சார்ந்த அழுத்தம் போடப்பட்டபோது, தமிழ்நாடு சட்டமன்றில் மேற்குறித்த நான்கு தடவைகள் தீர்மானங்கள் கூர்ப்பியல் ரீதியாகத் தெளிவாக நிறைவேற்றப்பட்டதென்பது தனித்துவமானது. அது மட்டுமல்ல, ஈழத்தமிழர் போராட்டச் சக்திகள் மீதும் தலைவர்கள் மீதும் ஜெயலலிதா அம்மையார் முற்பட்ட காலங்களில் வெளிப்படுத்தியிருந்த மாறான நிலைப்பாடுகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்து, அவர் முன்பெடுத்திருந்த நிலைப்பாடுகள் தொடர்பான விமர்சனங்கள் எல்லாம் அகன்று போயின. ஆக, ஈழத்தமிழர் மற்றும் தமிழக மக்களின் நெஞ்சங்களை இது விடயத்தில் உணர்ந்து, அறிவின் பாற்பட்டு அவரில் ஏற்பட்டிருந்த அந்த மாற்றம் மகத்தானது. அதன் தார்ப்பரியத்தை வெளியுறவுக்கொள்கையைப் புரிந்த நிலையில் பார்க்கும் போதே உணரமுடியும். சாதாரணமான இந்திய மட்டத்திலான காங்கிரஸ் - பா.ஜ.க அல்லது மாநில மட்டத்திலான தி.மு.க - அ.தி.மு.க போன்ற அரசியற் போட்டிகளுக்குள் மட்டும் அதை வைத்துச் சிந்திப்பது கூடாது. உண்மையில், அந்தத் தீர்மானங்களில் இரண்டு தீர்மானங்களை தி.மு.க தனது 2019 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் டெசோ ஊற்றோடு உள்ளடக்கியுள்ளது. இருந்தபோதும், சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஏற்ற செயற்பாடுகள் தமிழ்நாட்டில் செல்வி ஜெயலலிதா காலத்தில் வரவில்லை, பின்னரும் இதுவரை வரவில்லை. இனியாதல் அவை நடக்க ஆவன செய்யப்படவேண்டும். 2009 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பரவலான எழுச்சி, அப்போதைய ராஜபக்ச அரசின் மீதான கோபமாகக் கனன்று, பின்னர் 2015 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தோடு முற்றாக அருகிப் போய்விட்டது. 2009 ஆம் ஆண்டிலும், அதற்கு முன்பும் என்ன செய்தோம் என்று கதைப்பதற்கு ஒதுக்குகின்ற நேரத்தையும் முயற்சியையும் எவரும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான புவிசார், மனித உரிமை மற்றும் சர்வதேச அரசியல் குறித்தோ, இந்திய வெளியுறவுக்கொள்கையை எதிர்கொள்வது பற்றிய வேலைக்கோ அறிவுத்தேடலுக்கோ ஒதுக்குவதில்லை என்ற குறை போக்கப்படவேண்டும். தற்போது, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை வெளியுறவுக் கொள்கை மூலம் சாதித்துவிடலாம் என்று இலங்கை அரசின் இராஜதந்திரிகள் முயற்சிக்கின்றனர். அந்த இராஜதந்திரிகள் யார், அவர்கள் எவ்வாறு செயற்பட்ட பின்னணி கொண்டவர்கள் என்பதையும் தமிழ்நாட்டின் ஈழவிடுதலை அரசியற் பரப்பினரும் மக்கள் தளத்தினரும் தெரிந்துவைத்திருக்கவேண்டும். அதேபோல, தமிழ்நாட்டுக்குள்ளும் தலையெடுத்த ஆபத்துகள் எவ்வாறு வந்துள்ளன என்பதும் எதுவித தயக்கமும் இன்றி, எதுவிதமான சார்புத்தன்மைகளுக்கும் அப்பால் சென்றும் நோக்கப்படவேண்டும். 2017 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதம மந்திரியாகவிருந்த ரணில் விக்கிரமசிங்ஹா சீனாவிடம் 99-வருடக் குத்தகைக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கையளித்து சீனாவுடன் குறித்த துறைமுகம் தொடர்பாகத் தனக்கு முன்னிருந்த ராஜபக்ச அரசு செய்திருந்த கடன் நெருக்கடியைத் தணித்தார். அதை அவர் மேற்கொண்டபோது அவரது ஆதரவுத்தரப்பான அமெரிக்காவில் கடும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. டொனால்ட் டரம்ப் ஆட்சிக்கு வந்திருந்தார். அம்பாந்தோட்டைத் துறைமுகக் கையளிப்பு பெரும் விமர்சனத்துக்குரிய முன்னோடி உதாரணமாக அமெரிக்கத் தரப்பால் ரணில் ஆட்சியின் போதே பார்க்கப்படலாயிற்று. இரண்டுவருடஙகளுக்குள், தமிழ்நாட்டின் அரசியல்வாதியான எஸ் ஜெகத்ரட்சகன் என்பவரின் குடும்பத்தினரது பெயரில் சிங்கப்பூரில் பதிவான நிறுவனம் ரணில் அரசாங்கத்துடன் இலங்கையின் வரலாற்றிலேயே மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய வெளிநாட்டு நேரடி மூதலீடாக 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட திட்டங்களுக்கு மூலதனமாக்கப்படும் செய்தி 2019 மார்ச் மாதம் இந்துப் பத்திரிகையால் பெரிய செய்தியாக வெளிக்கொணரப்பட்டது. இது பற்றிய தலைப்புச் செய்திகளும் விவாதங்களும் சிங்கள ஊடகங்களில் எழுந்தன. அதேவேளை, உலக எண்ணெய்வளத்தோடு தொடர்புடைய நோர்வே நாட்டிலிருந்து வெளியாகும் TradeWinds எனும் உலகளாவிய கப்பல் வாணிகத் துறைசார்ந்த இதழ் ஜெகத்ரட்சகன் குடும்பத்தின் நகர்வு அமெரிக்காவுக்கு ஆதரவான திசையில் இருந்து மேற்கொள்ளப்படுவதான உட்தகவலை தனது வட்டாரங்களுக்குத் தெரிவித்திருந்தது. இவ்வாறான செய்திகள் ஈழத்தமிழர் விடுதலை அரசியலுக்கு ஆபத்துச் சங்காக ஒலித்தது. ஆனால், தமிழ்நாட்டில், எந்தவித விழிப்புணர்ச்சியும் ஏற்படவில்லை. ஜெகத்ரட்சகனும் அதுகுறித்து முறையாகப் பதிலளிக்கவில்லை. அவரது தேர்தல் தொகுதியும் இதுபற்றிப் பேசவில்லை. அவர் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக்கழகமும், 2019 இந்தியப் பொதுத் தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை, அரசியற் தீர்வுக்காகத் தீவின் வடக்கு கிழக்கில் பொதுவாக்கெடுப்பு என்ற இரண்டு கோரிக்கைகளையும் உள்ளடக்கியிருந்தபோதும், ஜெகத்ரட்சகன் குடும்பத்தின் அம்பாந்தோட்டை நேரடி முதலீடு குறித்த எந்த வெளிப்படுத்தல்களையும் அப்போது மேற்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்ஹா போன்றவர்கள், வெளிநாடுகளுடன் பொருளாதாரக் கையாளுகையை மேற்கொள்ளும் திறமை மட்டுமல்ல, வேண்டுமானால், தமிழ்நாட்டுத் தமிழர்களையே, அதுவும் தமிழ்நாடு சட்டசபைக் கொள்கை நிலைப்பாட்டுக்கு மாறாகத் திருப்பித் தமது புவிசார் அரசியலுக்குப் பயன்படுத்தும் ஆற்றலையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்ஹாவின் திறமை அவருக்கெதிரான போட்டி அரசியல்வாதிகளான ராஜபக்ச சகோதரர்களுக்குக் கூடத் தற்போது தேவைப்படுகிறது. எனவே, இலங்கையைக் கையாள முயல்கின்ற வல்லரசுகள், குறிப்பாக மேற்குலகமும் இந்தியாவும், அவற்றுக்கு மாற்றான சீனாவும் எவ்வாறு இலங்கையோடு தமது வெளியுறவுக்கொள்கை சார்ந்தும் தற்போது உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி பற்றியும் அணுகுமுறைகளை வகுத்துக்கொண்டுள்ளன என்பதும் ஈழத்தமிழர்களால் மட்டுமல்ல, தமிழ்நாடு உள்ளிட்ட தமிழ் கூறு நல்லுலத்தால் மிகத் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கப்படவேண்டிய அசைபோடப்படவேண்டிய விடயங்களாகின்றன. Chronology: 30.08.24 ‘பொதுச்ச..
18.08.24 மூலோபாய&..
04.02.24 சியோனிச&..
24.04.22 தீவின் ந..
09.04.22 குறிதவற&..
21.01.22 ஈழத்தமி&..
02.11.21 13 ஆம் சட்..
|
Latest 15 Reports
|
Reproduction of this news item is allowed when used without
any alterations to the contents and the source, TamilNet, is mentioned |
||
News | Features | Opinion | Palaka'ni | Photo Features | TN Transcription
Web feeds | Feedback | Home | About us |