விராஜ் மெண்டிஸ் விட்டுச் செல்லும் நிரப்பவியலா இடைவெளி
[TamilNet, Saturday, 17 August 2024, 12:15 GMT] ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் உற்ற நண்பனாக மிக நீண்டகாலமாக, தனது சாவுப்படுக்கை வரையும், ஜேர்மனி நாட்டின் பிரேமன் நகரிலிருந்து தொடர்ச்சியாக இயங்கிவந்த விராஜ் மெண்டிஸ் ஈழத்தமிழர்களிடமிருந்து வெள்ளிக்கிழமை மாலை தனது 68 ஆவது வயதில் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார். அவரது வலிய நெஞ்சுரத்தோடு இளகிய குழந்தை மனது எப்போதும் போட்டியிட்டுக்கொண்டிருக்கும். அதனாலோ என்னவோ மாரடைப்போடும் சாவோடும் பலமுறை போராடியவாறு தனது செயற்பாட்டை முன்னெடுத்துக்கொண்டிருந்தார் அவர். அவரின் இடையறா முயற்சியால் மக்கள் தீர்ப்பாயத்தின் மூன்று அமர்வுகள் உலகத் தளத்தில் நடந்துள்ளன. அவற்றில் இன அழிப்புக் குறித்த மிகத் தெளிவான தீர்ப்பு வெளியானதோடு, அமெரிக்க-பிரித்தானிய மேலாதிக்கம் எவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்குக் காரணமானது என்பதைத் துணிகரமாக வெளிக்கொணரும் தீர்ப்பும் வெளியாகியது. அவரது அடுத்த கட்ட இலக்கு அர்த்தமுள்ள எதிர்ப்பியக்கத்தைக் கட்டுவதில் குறியாக இருந்தது.
Viraj Mendis (01 April, 1956 - 16 August, 2024)
Viraj Mendis (01 April 1956 - 16 August 2024)
ஆண் பெண் சமத்துவத்தில் அருஞ்சாதனைகளைப் படைத்த தமிழீழ விடுதலைப் போராட்ட மரபில் வந்து எஞ்சியிருக்கும் முன்னாட் பெண்போராளிகளிடமும் பெண்தலைமைத்துவத்திடமும் இருந்து அர்த்தமுள்ளதாக ஈழத்தமிழர் போராட்டத்தின் அடுத்தகட்ட எதிர்ப்பாற்றல் (Resistance) எழவேண்டும் என்று சிந்தித்து அதற்கான செயற்பாடுகளைக் கட்டுவதில் அவர் கவனஞ் செலுத்திக்கொண்டிருந்த வேளையில் அவரது மரணம் சம்பவித்துள்ளது.
“உண்மையான விடுதலையை நேசித்தவர்கள் எல்லோரும் தமது உயிரைக் கொடுத்துவிட்டனர் அவர்களுக்காகவே நான் செயற்படுகிறேன்,” என்று எமக்கு அடிக்கடி நினைவுபடுத்திய அவர் இப்போதிருக்கும் நிலைகெட்ட புலம்பெயர்ச் செயற்பாட்டுத் தளத்துக்கு அப்பால் ஈழத்தமிழர் விடுதலை அரசியலை 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் நகர்த்துவதில் மிகுந்த முயற்சியெடுத்துச் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.
ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்களிற் பலருக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி இருக்கும் அறிவையும் துடிப்பையும் விஞ்சியதாக சிங்களவரான அவருக்கு நேசிப்பும் ஈடுபாடும் அறிவும் துடிப்பும் இருந்தன.
ஈழத் தமிழர் மீதான சிங்களப் பேரினவாத அரசின் பௌதிக இன அழிப்பு ஆரம்பிக்கப்பட்ட 1956 ஆண்டில் இருந்தான 68 ஆண்டு வரலாற்றுக்காலம் அவரது வயது.
அந்த இன அழிப்பைத் தனது வாழ்நாளில் மாற்றுலகத் தளத்தில் அவர் நிறுவிச் செனறுள்ளார்.
எந்த இக்கட்டான நெருக்கடியிலும் சுயாதீனமாக இயங்கும் வல்லமைக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.
மாமனிதர் சிவராமின் நெருங்கிய நண்பரான விராஜ் தமிழ்நெற்றின் நண்பரானார். அவ்வாறான எமது நண்பர் விராஜுக்கு வீரவணக்கம் செலுத்துவது என்பது தீக்குளிப்பதற்கு ஒப்பானது; நெஞ்சை உருக்குவது; சிவராமை நாம் இழந்தபோது ஏற்பட்ட வலிக்கு ஒப்பான வலியைத் தருவது.
முள்ளிவாய்க்காலைத் தரிசித்த ஆழமான வலி அதை எதிர்கொள்ளும் மன வலுவை எமக்குள் விட்டுச்சென்றுள்ளதா என்பதற்கு இது ஒரு சோதனையாகிறது.
பிரித்தானியாவில் இருந்து ஒரு காலத்தில் அவர் விரட்டப்பட்டதன் பின்னரும், அவரது பிரித்தானியத் துணைவியாரான காரன் அம்மையார், தனது நாட்டைத் துறந்து அவரோடு ஜேர்மனியில் தானும் சேர்ந்து வாழ்ந்து, தோழர் விராஜின் செயற்பாட்டை ஈழத்தமிழர் விடுதலைக்காகத் தொடர்ந்தும் குவியப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்தமை நெஞ்சை நெகிழவைப்பது.
விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாயிருப்பினும் மலைநிகர்த்த செயலாற்றலோடு அவரோடு நெருக்கமான நண்பர்களாகச் செயற்படும் புலம்பெயர் சிங்கள நண்பர்கள் அவரின் பிரிவால் ஆழ்ந்த துயருக்குள்ளாகியுள்ளனர்.
கோட்பாட்டு ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் ஈழத்தமிழர் தேசக்கட்டலையும் விடுதலை அரசியலையும் அசைக்கவியலாது தாங்கியிருந்த தூண்களில் ஒன்று விராஜ்.
விராஜ் மரணிக்கலாம், அவர் நாட்டிய அந்தத் தூண் ஒருபோதும் சரியாது.
விராஜ் விட்டுச் சென்றிருக்கும் நிரப்பவியலா இடைவெளியை ஈடுசெய்வது அவரது வாழ்வுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமான ஈழத்தமிழர் விடுதலைக்கும் அர்த்தம் தருவதாகும்.
அவரது நேர்காணற் பதிவுகளும் மக்கள் தீர்ப்பாயம் பற்றிய செய்திகளும் அனைவரின் பார்வைக்காகவும் கீழே இணைக்கப்படுகின்றன.